என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்மார்ட் மின் மீட்டர்"
- இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
- இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான கனிய முதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி மின்துறை அனைத்து வீடுகளின் மின் மீட்டர்களை மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட வினியோகத்துறை திட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மீட்டரை மாற்றுவதற்காக நுகர்வோர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுமுற்றிலும் இலவசம். இந்த ஸ்மார்ட் மீட்டர்களால் மனித தவறுகளால் ஏற்படும் பிழைகள் மற்றும் சரியான நேரத்தில் பில் வராதது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
நுகர்வோர் தங்களின் தினசரி மின் பயன்பாட்டை செல்போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தானியங்கி முறையில் ஸ்மார்ட் மீட்டர்கள் நுகர்வோர்களின் மின் தடங்கல்களை உடனுக்குடன் மின்துறையின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பும் வசதி உள்ளது.
எனவே பொதுமக்கள் புகார் அளிக்க அவசியமில்லை. மின் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கட்டண வரிகள் எவ்வித மாற்றமுமின்றி 'போஸ்டு பெய்டு' கட்டணம் முறையே தொடரும்.
முதல் கட்டமாக இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் சோலார் பொருத்தப்பட்ட வீடுகள், அரசுத்துறை, அரசு சார்ந்த உபயோகம், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பழுதடைந்த மீட்டர் உள்ள நுகர்வோர்கள் மற்றும் அதிக மின் பயன்பாட்டாளர்களுக்கு பொருத்தப்படுகின்றது. புதிய மின் இணைப்பு பெறுவோர் மற்றும் விருப்பமுள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 சதவீதம் நுகர்வோர்களின் வீட்டில் 3 மாதங்களுக்கு பழைய மீட்டருடன் ஸ்மார்ட் மீட்டரையும் பொருத்தி, மின் பயன்பாட்டை ஒப்பீடு செய்து பிழை ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.
- நிறுவனங்களின் தரப்பில் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
சென்னை:
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்துமாறு ஏற்கனவே அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, வீடுகளுக்கு 'ஸ்மார்ட்' மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.
இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் 3 தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது.
இந்த நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டரை மின் வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்வதில் இருந்து வரும் முறைகேட்டை தடுக்கவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.10 ஆயிரத்து 790 கோடியில் இந்த திட்டத்தை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது பரீட்சார்த்த அடிப்படையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது.
இதில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்து தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டர் அறிவிப்பில் எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
மின்வாரியத்தின் பல நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத வகையில் இருப்பதால் டெண்டர் கோர நிறுவனங்கள் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அழைத்து டெண்டர் கோருவதில் இருந்து வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை மின்வாரியம் கேட்டறிந்தது.
அப்போது இந்த நிறுவனங்களின் தரப்பில் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த சந்தேகங்களை சரி செய்து அவற்றில் பலவற்றை ஏற்றுக்கொள்ள மின்வாரியம் முடிவு செய்தது.
இதற்காக திருத்தப்பட்ட டெண்டரை வெளியிடுவதற்கு பதிலாக அத்தனை சந்தேகங்களுக்கான தீர்வுகளுடன் புதிய டெண்டரை வெளியிடும் வகையில் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று 3 தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் புதிய டெண்டர் விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






