என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடுகளுக்கு இலவச ஸ்மார்ட் மின் மீட்டர்- மின்துறை தலைவர் அறிவிப்பு
    X

    வீடுகளுக்கு இலவச ஸ்மார்ட் மின் மீட்டர்- மின்துறை தலைவர் அறிவிப்பு

    • இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
    • இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான கனிய முதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி மின்துறை அனைத்து வீடுகளின் மின் மீட்டர்களை மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட வினியோகத்துறை திட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் மீட்டரை மாற்றுவதற்காக நுகர்வோர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுமுற்றிலும் இலவசம். இந்த ஸ்மார்ட் மீட்டர்களால் மனித தவறுகளால் ஏற்படும் பிழைகள் மற்றும் சரியான நேரத்தில் பில் வராதது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.

    நுகர்வோர் தங்களின் தினசரி மின் பயன்பாட்டை செல்போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தானியங்கி முறையில் ஸ்மார்ட் மீட்டர்கள் நுகர்வோர்களின் மின் தடங்கல்களை உடனுக்குடன் மின்துறையின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பும் வசதி உள்ளது.

    எனவே பொதுமக்கள் புகார் அளிக்க அவசியமில்லை. மின் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கட்டண வரிகள் எவ்வித மாற்றமுமின்றி 'போஸ்டு பெய்டு' கட்டணம் முறையே தொடரும்.

    முதல் கட்டமாக இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் சோலார் பொருத்தப்பட்ட வீடுகள், அரசுத்துறை, அரசு சார்ந்த உபயோகம், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பழுதடைந்த மீட்டர் உள்ள நுகர்வோர்கள் மற்றும் அதிக மின் பயன்பாட்டாளர்களுக்கு பொருத்தப்படுகின்றது. புதிய மின் இணைப்பு பெறுவோர் மற்றும் விருப்பமுள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

    இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 சதவீதம் நுகர்வோர்களின் வீட்டில் 3 மாதங்களுக்கு பழைய மீட்டருடன் ஸ்மார்ட் மீட்டரையும் பொருத்தி, மின் பயன்பாட்டை ஒப்பீடு செய்து பிழை ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×