என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூலோகநாதர் கோவில்"

    • பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.
    • அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும்.

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ளது, புவனாம்பிகை உடனாய பூலோகநாதர் கோவில். சகல தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத்தலமாக இக்கோவில் திகழ்கிறது.

    இக்கோவில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டிய ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலை சுற்றி, 2 கிலோமீட்டா் தொலைவில் 3 கோவில்கள் அமைந்துள்ளது.

    பூலோகநாதர் கோவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வையாபுரி பரதேசியாரால் புனரமைக்கப்பட்டது. பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் பூலோகநாதர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி காட்சி தருகிறார்.


    கோவில் அமைப்பு

    இக்கோவிலின் ராஜ கோபுரத்தை கடந்தால் கொடி மர விநாயகரும், ராஜ நந்தியம் பெருமானும் காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் உள்ளது. கொடி மரத்தின் வடகிழக்கு மூலையில் நவ கிரகங்கள் மற்றும் சொர்ண பைரவர் காட்சி தருகிறார்.

    மகா மண்டப நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரும், வலது புறத்தில் பாலதண்டாயுதபாணியும் காட்சித்தருகிறார்கள். தொடர்ந்து ஆனந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். உள்ளே சென்றால் நந்தி, பலிபீடம் உள்ளது.

    அர்த்த மண்டபத்தில் புவனாம்பிகை சன்னிதி மற்றும் பூலோகநாதர் சன்னிதியின் வலது புறத்தில், சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த கல்யாண நடராஜ பெருமான் அருள்பாலிக்கிறார்.

    கோவில் பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்கி சொர்ண விநாயகர், பாலமுத்து குமாரசாமி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் லிங்கோத்பவர் சுவாமிகள் மற்றும் தெற்கு திசை நோக்கி மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சி தருகிறார்கள்.

    மற்ற கோவிலை காட்டிலும் இங்குள்ள தல விருட்சங்கள் மாறுபட்டு இருக்கும். வில்வ, வன்னி மரங்கள் தல விருட்சங்களாக திகழ்கிறது. பூமி சம்பந்தமான தோஷங்களை நீக்குவதற்காக நடைபெறும் மண் வழிபாட்டு முறையில் தல விருட்சம் முக்கியத்துவத்தை பெறுகிறது.

    மேலும் கார்த்திகை மாதம் நடைபெறும் மகா யாகத்தின்போது பயன்படுத்தப்படும் மூலிகைகள், தானியங்கள், திரவியங்களின் சாம்பல் இந்த வன்னி மரத்தின் அடியில் சேர்க்கப்படுகிறது.

    புவனாம்பிகை என்பதற்கு புவனத்தை (உலகத்தை) ஆள்பவள் என்று பொருள். இக்கோவிலின் மகாமண்டபத்தின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் தனி சன்னதியில் புவனாம்பிகை நாயகி வடக்கு திசையை நோக்கி எழுந்தருளியுள்ளார்.


    இந்த அன்னையின் முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறை வேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும்.

    பூலோகநாதர் கோவிலில் உள்ள மகா மண்டபத்தின் வலது பக்கத்தில் தெற்கு நோக்கி தனி சன்னிதியாக ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் கிழக்கு நோக்கி யோக நிலையில் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்கள். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

    அமைவிடம்

    இக்கோவில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இக்கோவில் தினசரி காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை மட்டும் அதிகாலை 5 மணிக்கே பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    நெல்லிக்குப்பத்தில் உள்ள பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனும், பெருமாளும் ஒரே கோவிலில் எழுந்தருளி இருப்பது தனி சிறப்பாகும். இந்த கோவில் கும்பாபிஷேக 9-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 25-ந்தேதி மாலையில் பிரசன்ன வெங்கடாசலபதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுதர்சன யாகம் மற்றும் 108 கலசாபிஷேகம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பூலோக நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 2-ம் காலயாகசாலை பூஜையும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும் ஒரே இடத்தில் வைத்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதையொட்டி சாமிகளுக்கு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விஜயலட்சுமியும், பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 
    ×