என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RohingyaRefugees"

    • பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.
    • இந்திய அதிகாரிகளால் சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு கடலில் விடப்பட்ட செய்தி உலக அளவில் கண்டனத்தை குவித்தது.

    உலகளவில் ஆண்டுதோறும் இன்று (ஜூன் 20) அகதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உயிர்தப்பி, உடைமைகளை இழந்து, வேறொரு நாட்டுக்கு நிச்சயமில்லாத எதிர்காலத்தை நோக்கி அகதிகள் ஆபத்தான முறையில் புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

    கடலில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கான அகதிகள் உயிரிழப்பு என்ற செய்திகளை அடிக்கொருமுறை பார்க்க நேரிடுகிறது. சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்கள் மீண்டும் மரணத்தை பிழைத்து தப்பி வந்த அவர்களின் நாட்டுக்கே திருப்பி நாடுகடத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    அகதிகளை ஏலியன்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரையறுக்கிறார். அவரை பின்பற்றியே இந்தியா உள்ளிட்ட நாடுகளின் செயல்களும் சமீப காலமாக இருந்து வருகின்றன. இதற்கு சமீப காலமாக அசாம், டெல்லி உள்ளிட்ட ஆகிய மாநிலங்களில் நடந்து வரும் போலீஸ் வேட்டைகளே சாட்சி.

    வங்கதேசத்தினர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் வங்கதேச எல்லையில் கொண்டு விடப்பட்டதும், பின்னர் அவர்கள் இந்தியர்கள்தான் என நிரூபணமாகி வங்கதேச அதிகாரிகள் அவர்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்த சம்பவங்கள் குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த மாதம், இந்திய அதிகாரிகள் டெல்லியில் வசிக்கும் டஜன் கணக்கான ரோஹிங்கியா அகதிகளை கைது செய்தனர். அவர்களில் பலர் அகதி அடையாள ஆவணங்களை வைத்திருந்தனர்.

    இந்தக் குழுவில் உள்ள சுமார் 40 பேர் கண்கள் கட்டப்பட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் இந்திய கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    படகு அந்தமான் கடலைக் கடந்த பிறகு, அகதிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் கடலுக்குள் வலுக்கட்டாயமாக அவர்களை விட்டு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    உலகெங்கிலும் அதிகரித்து வரும் தேசியவாதம் மற்றும் பெரும்பான்மைவாதம் காரணமாக, அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் முன்னெப்போதும் இல்லாத அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்.

    சமீபத்தில், 'தி லான்செட்' ஆய்விதழ் வெளியிட்ட தகவலின்படி, பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் காரணங்களால் உலகின் எட்டு பேரில் ஒருவர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளும் வாழ்க்கையும் மனிதாபிமானமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றன. 

    பிரிவினை கால அகதிகள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா 1951 அகதிகள் மாநாடு அல்லது 1967 நெறிமுறை எதிலும் இதுவரை கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தங்கள், 1948 ஆம் ஆண்டின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் அடிப்படையில் உருவானவை.

    ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மீறப்படுவதும், அதன் பொதுச் செயலாளரின் எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும், அதன் முகமைகளுக்கான நிதிகள் குறைக்கப்படுவதும் ஐ.நா. அமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக 'தி லான்செட்' சுட்டிக்காட்டியுள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் 'சுகாதாரம் மற்றும் இடம்பெயர்வு திட்டம்' மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அகதிகளுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா தற்போது 80,000 க்கும் மேற்பட்ட திபெத்திய அகதிகளுக்கும், அதே அளவு மியான்மர் அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியுள்ளது.

    இந்தியா "சட்டவிரோத குடியேறிகள்" என்று அடையாளம் காணப்படுபவர்களை நாடு கடத்தும் அதேவேளையில், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுகிறார்கள்.

    2009 மற்றும் 2024 க்கு இடையில், அமெரிக்காவிலிருந்து மொத்தம் 15,564 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

    இவை அனைத்தும், உலகப் போருக்குப் பிந்தைய உலக நாடுகளின் அடிப்படையாக இருந்த அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வு குறைந்து வரும் ஒரு உலகைச் சுட்டிக்காட்டுகின்றன. 56000 பேரை பலிகொண்ட பாலஸ்தீன போர் பற்றிய உலக நாடுகளின் மௌனம் இதற்கு உதாரணம்.

    உலக தலைவர்கள் சர்வதேச மாநாடுகளில் கை குலுக்கி, கட்டி அணைத்துக்கொள்ளும் புகைப்படங்கள் உலா வரும் அதே வேளையில் எதார்த்தம் நேர் எதிராகவே இருந்து வருகிறது.

    உலக தலைவர்கள், 'ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற உணர்வில் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் உள்ளவர்களின் யதார்த்தங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே நாடுகள் என்ற வரையறையை கடந்து மனிதநேயத்திற்காக குரல் கொடுப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது. 

    இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டிடம் தெரிவித்துள்ளது. #RohingyaRefugees #SC
    புதுடெல்லி:

    மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு பயந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவின் ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் பயங்கரவாத இயங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவித்த மத்திய அரசு, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தனிக்குழுவை அமைத்தது.

    மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கவில்ன்கர், சந்திரசூட் அமர்வு விசாரித்து வருகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்த வழக்கின் மறுவிசாரணையின்போது, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை மற்ற மாநிலங்களும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் புதிய கோரிக்கை விடுத்திருந்தனர்.

    மனுதாரர்களின் கோரிக்கையை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எனினும், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அரசு சார்பில் வழங்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில், ’சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 9-ம் தேதி அறிவுறுத்தியதை தொடர்ந்து அரியானாவில் உள்ள மேவாட் ரோஹிங்கியா அகதிகள் முகாம் மற்றும் டெல்லி கலின்டி கஞ்ச் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஆகியவற்றில் கடந்த 23,24 தேதிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது, இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள குடிசைப்பகுதிகளில் வாழும் நம் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சுகாதாரம், குடிநீர், கழிப்பறை, மருத்துவம், கல்வி ஆகிய அடிப்படை வசதிகள் அங்குள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கும் அளிக்கப்படுவதை அதிகாரிகள் குழு கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

    சில கட்டுப்பாடுகளை தவிர, ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதை பரிசீலனைக்கு ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #RohingyaRefugees #SC
    ×