search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rising"

    கஜா புயல் சேதத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers
    சென்னை:

    கஜா புயல் தாக்கியதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து விட்டன.

    இதனால் தென்னந்தோப்பு வைத்திருந்த விவசாயிகள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு தினசரி 100 லாரிகளில் தேங்காய் மற்றும் இளநீர் அனுப்பப்படும். ஆனால் இப்போது தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் சாய்ந்து கிடப்பதால் சென்னைக்கு வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தேங்காய் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை தேங்காய் விலை உயர்ந்து விட்டது. 20 ரூபாய்க்கு விற்ற நடுத்தர தேங்காய் இப்போது 25 ரூபாய்க்கு விற்கிறார்கள். 15 ரூபாய்க்கு கிடைத்த சிறிய தேங்காய் 20 ரூபாயாக உயர்ந்து விட்டது. பெரிய தேங்காய் 30 ரூபாய் இருந்து 37 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை, வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, தி.நகர், அடையார், மயிலாப்பூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளிலும் தேங்காய் விலை அதிகளவு உயர்ந்து விட்டது.

    இதுபற்றி சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் தேங்காய் வியாபாரி ராமசாமி கூறியதாவது:-

    சென்னைக்கு தினசரி அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சாவூர், மன்னார்குடி, பொள்ளாச்சி, தேனி, நாகர்கோவில், ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் தேங்காய் வரும்,

    இப்போது கஜா புயல் சேதத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்த தேங்காய் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது.

    ஒரு லாரிக்கு 10 டன் வீதம் தினசரி 60 லாரிகளில் தேங்காய் வருவது நின்று விட்டது. இதனால் தேங்காய் விலை 5 முதல் 7 ரூபாய் வரை உயர்ந்து விட்டது.

    அதேபோல் இளநீர் விலையும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது. புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் 40 வருடத்து மரம் ஆகும். இனி மேல் மரம் வைத்தால் 7 ஆண்டுக்கு பிறகுதான் பலன் கிடைக்கும்.

    இதுவரை காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்ற ஊர்களுக்கு தேங்காய் அனுப்பி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி அவர்களின் தேவைக்கு மற்ற ஊர்களில் இருந்து தேங்காய் அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கஜா புயலில் சாய்ந்து கீழே முறிந்து கிடக்கும் மரங்களில் இருந்து தேங்காய் பறித்து இப்போது அனுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு இதுவும் நின்று விடும். அப்போது தேங்காய் விலை மேலும் உயரும்.

    இவ்வாறு வியாபாரி ராமசாமி கூறினார்.  #GajaCyclone #DeltaDistricts #DeltaFarmers

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை திடீரென உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. கள்ளிமந்தயம், காவேரியம்மாபட்டி, மூலசத்திரம், சத்திரப்பட்டி, கேதையெறும்பு, அத்திக்கோம்பை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காய விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பட்டறைகளில் வெங்காயங்களை பதுக்கி வைத்தனர்.

    மேலும் குறைந்த அளவே விலை போனதால் அவர்கள் கவலையில் இருந்தனர். தற்போது ரம்ஜான் பண்டிகை வர உள்ளதையொட்டி பிரியாணி மற்றும் தயிர் பச்சடி தயாரிக்க வெங்காயம் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக கேரள மாநிலத்திற்கு அதிக அளவு வெங்காயங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் வரத்தும் குறைந்துள்ளளது. 60 டன் வரவேண்டிய இடத்தில் 40 டன் மட்டுமே வெங்காயம் வந்துள்ளது. இதனால் தற்போது ஒரு கிலோ ரூ.42 வரை விலைபோனது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தாங்கள் பட்டறையில் வைத்திருந்த வெங்காயங்களையும் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். வெங்காய விலை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு விலை ஓரளவு கட்டுப்படியானதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கேரளா, கோவை ஆகிய பகுதிகளுக்கு லாரி மூலம் அதிக அளவு வெங்காயங்கள் அனுப்பப்படுகிறது. மேலும் வியாபாரிகளும் அதிக அளவு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    ×