search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namperumal"

    • அடியார்கள் பெருமாள் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
    • கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    கி.பி. 1,311-ம் ஆண்டில் டெல்லியை ஆட்சி செய்து வந்த மாற்று மதத்தினர் இந்தியா முழுவதும் படையெடுத்து கோவில்களை தாக்குவது, பொக்கிஷங்களை கொள்ளையடிப்பது, சிற்பங்களை சிதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், கி.பி. 1,323-ம் ஆண்டு டெல்லியை ஆட்சி செய்த மாற்று மதத்தினர் ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து வந்தனர்.

    அப்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆச்சாரியர்கள், அடியார்கள் ஸ்ரீரங்கம் கோவிலையும், கோவில் சொத்துகளையும் பாதுகாக்க முடிவு செய்தனர். அப்போது ஸ்ரீரங்கத்தில் பிள்ளை லோகாச்சாரியார் என்ற வைணவ அடியார் மூலவர் ரெங்கநாத பெருமாள், ரெங்கநாயகி தாயாரை சுவர் எழுப்பி மறைத்தார்.

    மேலும் உற்சவமூர்த்தியான அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி சிலரின் துணையுடன் காவிரி ஆற்றின் வழியாக தெற்கு நோக்கி அழகர் கோவில், கோழிக்கோடு, திருநாராயணபுரம், திருப்பதி, கர்நாடகா என ஊர் ஊராக சுற்றி ஆங்காங்கே அழகிய மணவாளனுக்கு பூஜைகள் செய்து வந்தனர். ஸ்ரீரங்கத்தில் மாற்று மதத்தினர் அச்சம் நீங்கிய நிலையில் அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் கழித்து வைகாசி 17-ம் நாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அவர்தான் நம்பெருமாள் எனக்கூறி அனைவரும் வழிபாடு செய்தனர்.

    அழகிய மணவாளன் நம்பெருமாளாக ஸ்ரீரங்கம் திரும்பி வந்த இந்த நாளை (வைகாசி 17-ம் நாள்) கொண்டாடும் வகையில் திருக்கோவில் திருமடங்கள் சார்பில் ஸ்ரீரங்கம் பெரிய நம்பிகள் மற்றும் ஆச்சாரியார்கள் தலைமையில் ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பிருந்து புறப்பட்ட நூற்றுக்கணக்கான அரங்கன் அடியார்கள் பெருமாள் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நாளை(சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நாளை(சனிக்கிழமை) தொடங்கி நவம்பர் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நாளை நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு 5.30 மணிக்கு வந்தடைகிறார்.

    அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆரத்தி கண்டருளுகிறார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெறும். அதுசமயம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார்.

    இதேபோல் 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் மற்றும் 8-ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார்.

    அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (4-ந்தேதி) நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்று (30-ந்தேதி) வரை நடைபெற்றது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 28-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.30 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி- புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நாளை(வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பவித்ரோத்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார்.

    அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். இதையடுத்து அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நாளை காலை 9.30 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைல காப்பிடப்படுகிறது. பவித்ரோத்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுதலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டார். வழிநடை உபயங்கள் கண்டருளினார். அம்மா மண்டபத்திற்கு மதியம் 1 மணி அளவில் வந்தடைந்தார்.

    படித்துறை வரை நம்பெருமாள் சென்றார். அங்கு பாய்ந்தோடும் காவிரியில் பட்டர்கள் வேத மந்திரங்கள் சிறிது நேரம் ஓதினர். அதன்பின் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலை 4.45 மணி அளவில் காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சந்தனம், சேலை, மாலை உள்பட மங்கல பொருட்களை யானை மீது தாம்பூல தட்டில் வைத்து பட்டர்கள் எடுத்து வந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் யானை மீது இருந்து சீர்வரிசை பொருட்களை காவிரி ஆற்றில் தூக்கி வீசினர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்ட பின் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவ விழாவையொட்டி நம்பெருமாள் நெல் அளவு கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதுடன் அதற்கான புண்ணியாசன பூஜையும் நடந்தது. தொடந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிலையில் விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளினார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வசந்த உற்சவ விழா நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சந்திரபுஷ்கரணி கரையில் தீர்த்தவாரி, திருமஞ்சனம் கண்டருளி வசந்த மண்டபம் வந்தடைவார். இரவில் புறப்பட்டு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார். 
    ×