search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி- புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நாளை(வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பவித்ரோத்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசல் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு இரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார்.

    அங்கிருந்தவாறு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். இதையடுத்து அங்கிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான நாளை காலை 9.30 மணியளவில் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

    மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைல காப்பிடப்படுகிறது. பவித்ரோத்சவ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுதலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×