search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mangalore Bomb Blast"

    • ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • ஷாரிக், ஆதியோகி சிலையை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்திருந்தது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் மங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் தனது வாட்ஸ்அப்பில் டி.பி.யாக கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் ஆதியோகி சிலையை வைத்திருந்தான். மேலும் அதில் பிரேம்ராஜ் என்ற பெயரையும் பதிவிட்டிருந்தான்.

    இதனால் ஷாரிக் ஈஷா யோகா மையம் சென்றானா? என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கோவை தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஷாரிக், ஆதியோகி சிலையை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்திருந்தது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக், ஆதியோகி சிலையை டிபியாக வைத்துள்ளார். அவர் ஆதியோகி மீதான பற்றின் காரணமாக வைக்கவில்லை. அவருடைய மத அடையாளத்தை மறைப்பதற்காகவே ஆதியோகி புகைப்படத்தை டி.பி.யாக வைத்துள்ளார்.

    மிரட்டல்கள் என்பது எனக்கு புதிது அல்ல. எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எண்ணிலடங்கா மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. நான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக கோவையில் ஷாரிக் தங்கிய விடுதி உரிமையாளர் காமராஜூக்கு மங்களூரு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
    • சம்மன் கிடைத்ததில் இருந்து 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும். விசாரணையின் போது உங்களுக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது.

    சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முகமது ஷாரிக் என்பவன் கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற திட்டமிட்டு இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. மற்றும் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக் கோவை வந்து விடுதியில் தங்கி புதிய சிம்கார்டு வாங்கியதுடன், பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து மங்களூரு போலீசார் கோவைக்கு வந்தனர். ஷாரிக் தங்கிய விடுதிக்கு கோவை மாநகர போலீசாருடன் சென்ற மங்களூரு போலீசார் விடுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    அங்கு இருந்த மேலாளர் மற்றும் பணியாளர்களிடம் ஷாரிக் குறித்து விசாரித்தனர். அவரை யாராவது சந்திக்க இங்கு வந்தனரா? அவரின் நடவடிக்கைகள் எப்படி இருந்தன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஷாரிக் செல்போன் தொடர்பில் கோவை நபர்கள் சிலர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் விசாரித்தனர்.

    விடுதியையொட்டி இருந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி சென்றனர்.

    இந்த நிலையில் மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக கோவையில் ஷாரிக் தங்கிய விடுதி உரிமையாளர் காமராஜூக்கு மங்களூரு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அதில் சம்மன் கிடைத்ததில் இருந்து 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும். விசாரணையின் போது உங்களுக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    சம்மன் கிடைத்ததை தொடர்ந்து விடுதி உரிமையாளர் காமராஜ் மங்களூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அப்போது அவரிடம் ஷாரிக் குறித்தும், விடுதியில் அவர் தங்கி இருந்த போது எந்த மனநிலையில் இருந்தார்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    ஏற்கனவே ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்கி கொடுத்ததாக ஊட்டியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான சுரேந்திரனிடம் மங்களூரு போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக்கின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த பெண், இளைஞர் ஆகியோருடன் அவர் பேசியதாக தெரிந்தது. இதையடுத்து மங்களூரு போலீசார் நாகர்கோவிலுக்கு வந்து இளைஞர் மற்றும் பெண்ணிடம் விசாரித்தனர். இருவர் கூறியதும் உண்மை என்பது தெரியவந்ததால் வாலிபர் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மங்களூரு போலீசார் மீண்டும் நேற்று நாகர்கோவில் வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.என்.ஹரிபிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். ஷாரிக் நாகர்கோவிலுக்கு வந்தது ஏன்? இங்கு சதி செயலில் ஈடுபட்டத் திட்டமிட்டாரா, எங்கு தங்கினார் என மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் விசாரணையும், ஆய்வும் மேற்கொண்டனர்.

    முகமது ஷாரிக் மதுரையில் தங்கியது தொடர்பாகவும் நேற்றுமுன்தினம் கர்நாடக தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மதுரை நேதாஜிரோடு, டவுன்ஹால்ரோடு, கட்ராபாளையம் பகுதிகளில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    ஷாரிக் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகே 2 நாட்கள் தங்கி இருந்ததால் அவன் எந்த நோக்கத்துக்காக மதுரைக்கு வந்தான்? மதுரையில் எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றான்? யாரை எல்லாம் சந்தித்தான் என்பது குறித்து 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

    • குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இருந்து ஒருவர் அடிக்கடி ஷாரிக்குடன் பேசிய விவரம் தெரியவந்தது.
    • மங்களூர் போலீசார் கன்னியாகுமரி போலீசாரை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காயம் அடைந்த பயணி சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்(22) என்பதும், ஏற்கனவே இவர் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இவர் தான் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டை எடுத்து சென்றுள்ளார்.

    ஷாரிக் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து, நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகா போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக்கின் வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆணி, வெடி பொருட்கள், இணைப்பு கருவிகள் மற்றும் சில போலி ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

    மேலும் ஷாரிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? அவர் எங்கெல்லாம் சென்று வந்தார்? அவரை யாராவது இயக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஷாரிக் குக்கர் குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்திற்கு வந்துள்ளார். இங்கு கோவை, மதுரை, ஊட்டி போன்ற இடங்களில் தங்கி இருந்த விவரம் தெரியவந்தது. ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வந்தார்.

    பின்னர் கோவை சிங்காநல்லூரில் விடுதியில் தங்கியுள்ளார். சில நாட்கள் இங்கு தங்கியிருந்த அவர் அதே விடுதியில் இருந்த சுரேந்திரன் என்பவரிடம் நட்பை ஏற்படுத்தி, அவரின் ஆதார் கார்டை வாங்கி செல்போன் சிம்கார்டு வாங்கியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி, மதுரை பகுதிக்கும் சென்று உள்ளார். இங்கு தங்கி இருந்தபடி ஷாரிக் சதி திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதும் தெரியவந்தது.

    மேலும் கர்நாடகாவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவமும், கோவையில் கடந்த மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவமும் ஒத்துப்போவதால் ஷாரிக்குக்கும், கோவை குண்டு வெடிப்பில் இறந்த முபினுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு எழுந்துள்ளது.

    ஏனென்றால் முபின் முதலில் பெங்களூருவில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல் ஷாரிக் கோவை குண்டு வெடிப்புக்கு முன்பு கோவை வந்து சென்று உள்ளார். மேலும் இவர்கள் 2 பேரும் ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்களாக இருந்து உள்ளனர்.

    இதனால் ஷாரிக்கும், முபினும் கோவையில் சந்தித்து பேசி குண்டு வெடிப்பு நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து தமிழக போலீசார் ஷாரிக் கோவை, மதுரையில் எத்தனை நாட்கள் தங்கி இருந்தார். கோவையில் தங்கி இருந்த போது முபினை சந்தித்தாரா? வேறு யாருடனும் இங்கு தொடர்பில் இருந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஷாரிக் தன்னுடைய கூட்டாளிகளுடன் அல் ஹிந்த் ஐ.எஸ் என்ற அமைப்பை தொடங்கி பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அந்த அமைப்பை வலுப்படுத்த திட்டமிட்ட தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

    இந்த இயக்கத்தில் தொடர்புடைய சிலரை கர்நாடக போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

    மேலும் ஷாரிக் கடந்த 2020-ம் ஆண்டு மங்களூருவில் தனது நண்பர்களுடன் மதில் சுவரில் கருப்பு மையால் மத வாசகங்கள் எழுதியிருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ஷாரிக் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். ஷாரிக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். தற்போது குக்கர் குண்டு வெடித்ததால் அவரின் சதி அம்பலமாகி உள்ளது.

    கோவையில் ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் போல் செயல்பட்டு இறந்தார். அது போன்று தான் ஷாரிக்கும் ஆட்டோவில் குக்கரை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் போல் செயல்பட்டுள்ளார்.

    இந்த இரு சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் அல் ஹிந்த் ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையவர்கள் யார்? என்ற பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஷாரிக், கோவையில் வாங்கிய சிம்கார்டு மூலம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இருந்து ஒருவர் அடிக்கடி ஷாரிக்குடன் பேசிய விவரம் தெரியவந்தது. இதுபற்றி மங்களூர் போலீசார் கன்னியாகுமரி போலீசாரை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர்.

    குமரி போலீசார் அந்த நபரை பிடித்தனர். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கு பானிபூரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருடன் ஷாரிக் தொடர்பில் இருந்தது ஏன், அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசியது என்ன, குமரி மாவட்டத்தில் நாசவேலையில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டார்களா என்பது பற்றி அசாம் நபரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • யாசின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஆவார். மாஸ் முனீர் மெக்கானிக் என்ஜினீயர் ஆவார்.
    • இருவரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டனர். யாசின் ரிலே சர்க்கியூட் போர்டு, டைமர் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கினார்.

    பெங்களூரு:

    மங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஷாரிக்கும், சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ்முனீர் ஆகியோரும் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் சையது யாசினும், மாஸ் முனீரும் பி.யூ. கல்லூரியில் படித்தபோது நண்பர்கள் ஆனார்கள்.

    இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீடியோக்களை பார்த்து வந்தனர். மேலும் அதுபோல் இந்தியாவிலும் பயங்கரவாதத்தை நிகழ்த்த திட்டமிட்டு வந்தனர். மேலும் இவர்கள் செல்போன்கள், வாட்ஸ்-அப் மூலமாக தங்களது உரையாடல்களை நடத்தி வந்தனர். மேலும் டெலிகிராம், மெசஞ்சர் செயலி உள்ளிட்டவை மூலமாகவும் தங்களது உரையாடல்களை தொடர்ந்து வந்தனர்.

    இந்த உரையாடல்களின் வாயிலாகத்தான் சையது யாசின், மாஸ் முனீர் ஆகியோருடன் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தைச் சேர்ந்த ஷாரிக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.

    பின்னர் இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான கட்டுரைகள், தகவல்கள் ஆகியவற்றை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொண்டனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிபயங்கர வீடியோக்களான தலை துண்டித்தல், கொடூரமாக கொலை செய்தல் போன்ற வீடியோக்களையும் பார்த்து வந்துள்ளனர். இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான டி.வி. சேனல்களில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

    இதில் யாசின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஆவார். மாஸ் முனீர் மெக்கானிக் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டனர். யாசின் ரிலே சர்க்கியூட் போர்டு, டைமர் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கினார். அலுமினியம் பவுடர் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து பேட்டரிகள், சுவிட்ச்சுகள் ஆகியவற்றை கொண்டு யாசின் மற்றும் முனீர் சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயாரித்தனர்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி அந்த வெடிகுண்டை சிவமொக்கா மாவட்டத்தில் துங்கா நதிக்கரையோரம் குருபுரா-புரலே பகுதிகளுக்கு இடையேயுள்ள ஒரு தோட்டத்தில் வைத்து வெடிக்கச்செய்து பயிற்சி பெற்றனர்.

    ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவில் அது பெரிய அளவில் வெடிக்கவில்லை. இருப்பினும் அதை அவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துக்கொண்டனர். பின்னர் பெரிய அளவில் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும் என்று 3 பேரும் திட்டமிட்டனர். இந்த திட்டங்களுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டு உள்ளார். இதனிடையே போலீஸ் தேடுவதை அறிந்த ஷாரிக் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு, மும்பை, கோவா ஆகிய பகுதிகளுக்கு தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் சிவமொக்காவுக்கு திரும்பி இருந்தனர். ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த யாசின், மாஸ் முனீர் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவே பக்தர்கள் வந்தனர்.
    • நடைதிறந்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

    கூடலூர்:

    கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று அந்த மாநில போலீசார் அறிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். குறிப்பாக மாநில எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குக்கர் குண்டு வெடிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை ஐய்யப்பன் கோவில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தமிழகம் வழியாக செல்கின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவே பக்தர்கள் வந்தனர். இதனால் நடைதிறந்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிகமானவர்கள் வந்திருந்தனர். தற்போது குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து குமுளி மற்றும் கம்பம் மெட்டு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பையா, ராமசந்திரன் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஐய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். காரில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? சந்தேகத்திற்கிடமான நபர்கள் உள்ளனரா? என கண்காணித்து வருகின்றனர்.

    ×