search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு: கோவை- மதுரையில் தங்கியிருந்த ஷாரிக்
    X

    ஷாரிக்

    மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு: கோவை- மதுரையில் தங்கியிருந்த ஷாரிக்

    • குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இருந்து ஒருவர் அடிக்கடி ஷாரிக்குடன் பேசிய விவரம் தெரியவந்தது.
    • மங்களூர் போலீசார் கன்னியாகுமரி போலீசாரை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காயம் அடைந்த பயணி சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்(22) என்பதும், ஏற்கனவே இவர் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இவர் தான் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டை எடுத்து சென்றுள்ளார்.

    ஷாரிக் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து, நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகா போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷாரிக்கின் வீட்டில் சோதனை மேற்கொண்டு ஆணி, வெடி பொருட்கள், இணைப்பு கருவிகள் மற்றும் சில போலி ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

    மேலும் ஷாரிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? அவர் எங்கெல்லாம் சென்று வந்தார்? அவரை யாராவது இயக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஷாரிக் குக்கர் குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தமிழகத்திற்கு வந்துள்ளார். இங்கு கோவை, மதுரை, ஊட்டி போன்ற இடங்களில் தங்கி இருந்த விவரம் தெரியவந்தது. ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு வந்தார்.

    பின்னர் கோவை சிங்காநல்லூரில் விடுதியில் தங்கியுள்ளார். சில நாட்கள் இங்கு தங்கியிருந்த அவர் அதே விடுதியில் இருந்த சுரேந்திரன் என்பவரிடம் நட்பை ஏற்படுத்தி, அவரின் ஆதார் கார்டை வாங்கி செல்போன் சிம்கார்டு வாங்கியதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி, மதுரை பகுதிக்கும் சென்று உள்ளார். இங்கு தங்கி இருந்தபடி ஷாரிக் சதி திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதும் தெரியவந்தது.

    மேலும் கர்நாடகாவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவமும், கோவையில் கடந்த மாதம் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவமும் ஒத்துப்போவதால் ஷாரிக்குக்கும், கோவை குண்டு வெடிப்பில் இறந்த முபினுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு எழுந்துள்ளது.

    ஏனென்றால் முபின் முதலில் பெங்களூருவில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதேபோல் ஷாரிக் கோவை குண்டு வெடிப்புக்கு முன்பு கோவை வந்து சென்று உள்ளார். மேலும் இவர்கள் 2 பேரும் ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்களாக இருந்து உள்ளனர்.

    இதனால் ஷாரிக்கும், முபினும் கோவையில் சந்தித்து பேசி குண்டு வெடிப்பு நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து தமிழக போலீசார் ஷாரிக் கோவை, மதுரையில் எத்தனை நாட்கள் தங்கி இருந்தார். கோவையில் தங்கி இருந்த போது முபினை சந்தித்தாரா? வேறு யாருடனும் இங்கு தொடர்பில் இருந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஷாரிக் தன்னுடைய கூட்டாளிகளுடன் அல் ஹிந்த் ஐ.எஸ் என்ற அமைப்பை தொடங்கி பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அந்த அமைப்பை வலுப்படுத்த திட்டமிட்ட தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

    இந்த இயக்கத்தில் தொடர்புடைய சிலரை கர்நாடக போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

    மேலும் ஷாரிக் கடந்த 2020-ம் ஆண்டு மங்களூருவில் தனது நண்பர்களுடன் மதில் சுவரில் கருப்பு மையால் மத வாசகங்கள் எழுதியிருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக ஷாரிக் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். ஷாரிக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். தற்போது குக்கர் குண்டு வெடித்ததால் அவரின் சதி அம்பலமாகி உள்ளது.

    கோவையில் ஜமேஷா முபின் தற்கொலைப்படை தாக்குதல் போல் செயல்பட்டு இறந்தார். அது போன்று தான் ஷாரிக்கும் ஆட்டோவில் குக்கரை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் போல் செயல்பட்டுள்ளார்.

    இந்த இரு சம்பவங்கள் குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் அல் ஹிந்த் ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையவர்கள் யார்? என்ற பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஷாரிக், கோவையில் வாங்கிய சிம்கார்டு மூலம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

    அப்போது குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இருந்து ஒருவர் அடிக்கடி ஷாரிக்குடன் பேசிய விவரம் தெரியவந்தது. இதுபற்றி மங்களூர் போலீசார் கன்னியாகுமரி போலீசாரை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தனர்.

    குமரி போலீசார் அந்த நபரை பிடித்தனர். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கு பானிபூரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருடன் ஷாரிக் தொடர்பில் இருந்தது ஏன், அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசியது என்ன, குமரி மாவட்டத்தில் நாசவேலையில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டார்களா என்பது பற்றி அசாம் நபரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×