search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaliyuga Venkatesh Perumal Temple"

    • நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில்.
    • நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார்.

    கோவில் தோற்றம்

    பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவிலில், நித்திய சொர்க்க வாசல் அமைந்துள்ளது. இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தா்கள், பின்னர் சொக்கவாசலைப் பயன்படுத்தி வெளியே வருவதை தினமும் செய்கிறார்கள். எனவே இத்தலம் நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

    தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வெங்கடேசப் பெருமாள், `தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசலைப்போல நுழைவுவாசல் வைத்து ஒரு கோவில் கட்டு' என பணித்தார். மேலும் அவர் கூறுகையில், `இத்தலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கலியுக வெங்கடேசப் பெருமாளாகவும், மகாலட்சுமி சமேதராக சதுர்புஜ வரதராஜப் பெருமாளாகவும் இரு கோலத்தில் எழுந்தருளி காட்சி தருவேன்.

    இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்ய சொர்க்க வாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனையும், வைகுண்ட பதவியையும் தந்தருள்வேன்' என்று கூறி மறைந்தாராம்.

    அதன்படி தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள், மராட்டிய சிற்பக்கலைகளின் கருவூலமாக திகழும் வகையில் இக்கோவிலை கட்டினார்கள். இத்தலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் புரட்டாசி சனிக்கிழமைதோறும் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.

    தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். இதன் காரணமாக இக்கோவில் 'நித்திய சொர்க்கவாசல் கோவில்' என அழைக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள், இத்தலத்தில் ஆண்டு முழுவதும் நித்ய சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வரலாம்.

    இந்த கோவிலில், நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார். இதன் மேல் தளத்தில் கல்லினால் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த சன்னிதிக்கு தனி விமானமும், கலசமும் உள்ளது. இங்குள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    வைணவத் திருக்கோவிலான இந்த ஆலயத்தில், சிவாலயங்களில் காணப்படும் கணபதி, கொற்றவை, பிச்சாடனர், நடராஜர் ஆகிய தெய்வங்கள் கருவறை கோஷ்டத்தில் இடம் பெற்று உள்ளன. மேலும் சிவாலயங்களில் சிவனுக்குரிய வில்வ மரம் இந்த கோவிலில் மகாலட்சுமி அம்சமாகவும், தல விருட்சமாக இருப்பது அபூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    ×