search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Jayame Jayam"

  • பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.
  • எப்போதும் இறைவனோடு நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றது.

  யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். `நாங்களும், பரிசேயர்களும் அதிகமாய் நோன்பு இருக்க, உமது சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை' என்பதே அந்தக் கேள்வி. இயேசுவின் வழியை ஆயத்தம் செய்ய வந்தவர் யோவான்.

  ஆனால் அவருடைய சீடர்கள் இன்னும் பரிசேயர்களின் வழிகளை அளவுகோலாய் வைத்தே நடக்கின்றனர். இயேசு அவர்களுடைய கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாகக் கொடுக்கிறார்.

  'மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவருடைய தோழர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என கேட்கிறார் இயேசு. யூதர்களுடைய திருமணம் ஒரு கோலாகலமான திருவிழாவைப் போல நடக்கும். மணமகனும், மணமகளும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்காக ஓடிப்போவதில்லை. ஒரு வார காலம் வீட்டிலேயே தங்கியிருப்பார்கள். மணமகனுடைய நெருங்கிய நண்பர்கள் கூடவே இருப்பார்கள்.

  ஏழை மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் அத்தகைய நிகழ்வுகள் அத்திப்பூத்தார் போல் நடக்கின்ற அதிசயச் செயல்கள். அந்த நாட்களில் மகிழ்வாக உண்டு, குடித்து, ஆடிப்பாடி அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

  நோன்பு என்பது உள்ளத்தில் துயரம் எழும்போது வருகின்ற ஒரு நிகழ்வாக பல பழங்காலக் குறிப்புகள் சொல்கின்றன. ஏதேனும் ஒரு பெரிய பாவத்தைச் செய்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கவும், இனிமேல் அத்தகைய பாவத்தைச் செய்ய மாட்டேன் என உறுதியெடுக்கவும் மக்கள் நோன்பு இருந்தார்கள்.

  பழைய ஏற்பாட்டில் யோசேப்புவை சகோதரர்கள் விற்று விடுகின்ற நிகழ்ச்சியை நாம் அறிவோம். அந்த பாவத்தில் பங்கு பெற்றதற்காக ரூபன் மிகவும் மனம் வருந்துகிறார். அந்த துயரம் அவரை ஏழு ஆண்டுகள் நோன்பு இருக்க வைக்கிறது.

  இந்த ஏழு ஆண்டுகளும் அவர் எந்த இன்பத்தையும் அனுபவிக்கவில்லை, குடிக்கவில்லை, மாமிசம் உண்ணவில்லை. கடுமையான நோன்பு இருந்து வருந்தினார் என்கிறது ரூபனின் ஏற்பாடு என்கின்ற புற நூல் ஒன்று.

  இறைவனின் பார்வை தங்களை நோக்கி நீள வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான நோன்புகள் பண்டைய காலங்களில் நிகழ்ந்தன. விவிலியம் முழுவதும் அதற்கான பல குறிப்புகள் உள்ளன.

  பென்யமின் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் தங்களுக்கு வெற்றி வேண்டுமென அழுது புலம்பிய இஸ்ரேல் மக்கள், பெத்தேலுக்கு வந்து உண்ணா நோன்பு இருந்தார்கள் என்கிறது நீதித் தலைவர்கள் நூல்.

  வேற்று தெய்வங்களை வழிபட்டு வந்த இஸ்ரேல் மக்கள், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.

  நோன்பு என்பது இறைவனின் கடைக்கண் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக நடப்பது. தங்களுடைய இதயத்தின் துயரமும், வேண்டுதலும் உண்மையானது என்பதை நிரூபிக்க நடப்பது. இறைவனே தங்களோடு இருக்கும்போது அது அவசியமற்றது தானே? என்பதே இயேசுவின் கேள்வி சொன்ன ஒரு மறைமுக பதில்.

  அதே நேரம் இயேசு நோன்பு தேவையில்லை என சொல்லவில்லை. தனது முடிவு சிலுவை என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே அவர் சொல்கிறார், `மணமகன் விடைபெறும் காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள். காரணம், அது துயரத்தின் காலம். அது பிரிவின் காலம். இறைவன் இல்லை என கலங்கும் காலம்'.

  இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் நோன்பை வெளி அடையாளமாகத் தான் செய்து வந்தார்கள். அவர்கள் இறைவனின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதை விட, மனிதர்களின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள்.

  அவர்கள் திங்கட்கிழமைகளையும், வியாழக்கிழமைகளையும் நோன்புக்காக தேர்ந்தெடுப்பார்கள். அது தான் சந்தை கூடும் காலம், கூட்டம் வரும் காலம். அந்த நாட்களில் குளிக்காமல், நல்ல ஆடை அணியாமல், கலைந்த தலையோடு, சோர்ந்த முகத்தோடு கடை வீதிகளில் உலவுவார்கள். சிலர் முகத்தை வெளிறியதாய்க் காட்டும் முகப்பூச்சுகளையும் அணிவதுண்டு.

  அப்போது அவர்களைப் பார்க்கும் மக்கள், 'அடடா.. எவ்ளோ பெரிய ஆன்மிக வாதி' என புகழ்ந்து பேசுவார்கள். அதுவே அவர்களுடைய நோக்கம். அதைக்கண்டிக்கும் விதமாகத் தான் இயேசு 'நோன்பு இருப்பதை மறைவாகச் செய்யவேண்டும்' என்றார்.

  இறைவன் நம்மோடு இருப்பது கொண்டாட்டத்தின் காலம். அவர் நம் இதயத்தில் இருப்பது மகிழ்வின் காலம். ஒருவேளை நாம் பாவம் செய்து அவரை விலக்கி வைத்தால் அந்த நேரத்தில் நாம் நோன்பு இருப்பது அவசியமாகிறது. எப்போதும் இறைவனோடு கூடவே நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றதாகி விடுகிறது.

  ×