search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured students"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் மாணவர்கள் காயம் அடைந்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    தடியடியில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த ஒவ்வொருவரும் போலீசார் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளனர். இது தொடர்பாக காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மடத்தூரை சேர்ந்த வியாபாரி சால்ராஜ் கூறியதாவது:-

    அமைதியான முறையில் போராட சென்ற எங்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நான் கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அதன்பிறகு இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். என்னால் எழுந்து நிற்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரத்திற்கு செல்ல முடியாத நிலையில் நான் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி அருகே உள்ள திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் செல்வம் (47) கூறியதாவது:-

    நான் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்தேன். ஊரில் நடந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, அங்கு வந்த போலீசார் துப்பாக்கியால் எங்கள் மீது சுட்டனர். இதில் என்னுடைய வலது இடுப்பு பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நான் துடித்துக் கொண்டு இருந்தேன்.

    அப்போது, அங்கு வந்த போலீசார் என் மீது ஏறி மிதித்து சென்றனர். அந்த வழியாக வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நான் மீன்பிடி தொழிலுக்கு சென்று தான் எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். தற்போது, காயம் அடைந்ததால் 6 மாதம் மீன்பிடிக்க செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் எனது குடும்பம் அவதிப்பட்டு வருகிறது. எனது மகன் ஸ்டார்வின் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளான். அவனை கல்லூரியில் சேர்ப்பதற்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் தவித்துக் கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சண்முகராஜ் (31) என்பவர் கூறுகையில், ‘‘ போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு இருந்து அருகில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி ஓடினேன். அப்படி இருந்தும் என்னை போலீசார் விரட்டி வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டனர். இதனால் எனது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது’’ என்றார்.

    கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தடியடி சம்பவத்தில் தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த இசக்கி (35) என்ற கட்டிட தொழிலாளி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து இசக்கி கூறுகையில், ‘‘ நானும், எனது 15 வயது மகனும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம். அப்போது, போலீசார் சரமாரியாக துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினார்கள். அந்த சமயத்தில் என்னையும், எனது மகனையும் சூழ்ந்து போலீசார் தடியால் தாக்கினார்கள். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தோம். எனது மகன் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளான். தடியடியில் அவன் காயம் அடைந்துள்ளதால், அவனை 11-ம் வகுப்பில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தடியடியில் காயம் அடைந்ததால் என்னாலும் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.
    ×