search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Navy Commander"

    உலகை சுற்றும் சர்வதேச படகுப் போட்டியின்போது புயலில் சிக்கி காயமடைந்த இந்திய கடற்படை அதிகாரி மூன்று நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். #GoldenGlobeRace2018 #IndianSailorRescued
    கொச்சி:

    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி புயலில் சிக்கினார். கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, கடந்த வெள்ளிக்கிழமை அவரது படகை ராட்சத அலைகள் தாக்கியது. முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் டோமியால் படகை விட்டு  நகர முடியவில்லை. மேலும் 130 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியதால் படகையும் செலுத்த முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் அவர் தகவல் அனுப்பினார். அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் மற்றும் ஒரு பிரான்ஸ் மீன்பிடி கப்பல் ஆகியவை டோமியை மீட்க விரைந்தன.



    இதில் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும் பிரான்ஸ் மீன்பிடி கப்பலும் இன்று டோமி இருக்கும் பகுதியை நெருங்கின. பின்னர் பிற்பகல் 1 மணியளவில் அதிகாரி டோமியை பத்திரமாக மீட்கப்பட்டு பிரான்ஸ் மீன்பிடி கப்பலில் ஏற்றப்பட்டார். இத்தகவலை இந்திய கடற்படை டுவிட்டர் மூலம் வெளியிட்டது.

    அதிகாரி டோமி மீட்கப்பட்டதை பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனும் உறுதி செய்துள்ளார். டோமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று மாலை ஆம்ஸ்டர்டாம் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் மொரிஷியஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  #GoldenGlobeRace2018 #IndianSailorRescued 
    ×