என் மலர்
நீங்கள் தேடியது "fear of Naga will be removed"
- சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாகும்.
- ஆலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார்.
ஆய் மன்னர்கள், வேனாடு மன்னர்கள் ஆட்சி செய்த பூமி, யானை தந்தம், மிளகு, இஞ்சி ஏற்றுமதிக்கான வணிகத்தளமாக விளங்கிய ஊர், கருவறை சுற்றி உயிரோட்டமான நாகங்கள் கொண்ட கோவில், நாகதோஷங்கள் நீக்கும் இறைவன், சபரிமலை வாகனங்கள் இளைப்பாறும் இடம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் பழம்பெரும் ஆலயம் என பல பெருமைகள் கொண்ட தலம் நிலக்கல் ஆகும். இங்கு மகாதேவர் ஆலயம் என்ற பெயரில் சிவன் கோவில் அமைந்திருக்கிறது.
சுவாமி ஐயப்பன் வழிபட்ட தலமாக இது விளங்குவதால், இப்பகுதி `இடத்தாவளம்' என்று அழைக்கப்படுகின்றது. நிலக்கல், தொன்மையான வரலாற்று பின்னணி கொண்ட தலமாகும். யானை தந்தம், லவங்கம், மிளகு, இஞ்சி போன்ற பொருட்கள், நிலக்கல் வரும் வணிகர்கள் மூலமாக கொடுங்ளூர், புறக்காடு போன்ற துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடையேழு மன்னர்களில் ஒருவரான ஆய் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்து, பின்னாளில் வேனாடு மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி இது என வரலாறு கூறுகின்றது. இன்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்லும் இடமாக இது விளங்குகின்றது.

ஆலய அமைப்பு
இவ்வாலயத்தின் பிரதான சன்னிதியாக சிவபெருமான் விளங்குகின்றார். இவரின் எதிரில் நந்தி தேவரும், கன்னிமூலக் கணபதியும் அமைந்துள்ளனர். இக்கோவிலின் இடதுபுறம் பள்ளியறக்காவு தேவி சன்னிதி அமைந்துள்ளது. கருங்கல் கருவறையில் இரண்டு அடுக்குகளாக ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மகாதேவர் கருவறை முழுவதுமே கருங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் வாசலிலும், மாடியிலும் உள்ள வாசல்களிலும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். கருவறையின் எட்டு திசைகளிலும் நாகங்கள் கலை நயத்தோடு புடைப்புச் சிற்பங்களாக உயிரோட்டத்தோடு அமைந்துள்ளன.
நாக தோஷம் நீக்கும் தலமாக கூறப்பட்டாலும், வனப்பகுதியில் உள்ள மக்கள் நாகத்தை வணங்கி வழிபட்டதை உணர்த்துவதாக இது உள்ளது. கருவறை கூரை கூம்பு வடிவில் செந்நிற தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
கேரள மாநில அரசின், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இக்கோவிலை நிர்வாகித்து வருகின்றது. இந்தக் கோவிலில் காலையில் உஷா பூஜை, நண்பகலில் உச்ச பூஜை, மாலையில் அத்தாழ பூஜை என, மூன்று கால பூஜைகள் நாள்தோறும் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் இங்கு மகாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். பள்ளியறக்காவு தேவி கோவில், இக்கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது. சபரிகிரி நீர் மின் நிலையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அமைவிடம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துமிடமே நிலக்கல்லாகும். நிலக்கல்லில் இருந்து பம்பா 17 கி.மீ. தூரத்திலும், சபரிமலை 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.
அய்யப்ப தரிசனத்திற்கு முன் நிலக்கல் மகாதேவரை வணங்கிச் செல்வது இன்றும் மரபாக உள்ளது. நாக பயம் மற்றும் நாகதோஷம் உள்ளவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக, நிலக்கல் மகாதேவர் விளங்குகின்றார்.






