search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "encourage"

    ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் உஷாராணி (திருவண்ணாமலை), கார்த்திகா (செய்யாறு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    12-ம் வகுப்பு தேர்வு முடிவைவிட 10-ம் வகுப்பு தேர்வு முடிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 12-ம் வகுப்பை மாணவர்கள் முடித்த பிறகு ஒரு போட்டி உலகத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனால் ஆசிரியர்கள் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை அதிக பள்ளிகள் பெற்று உள்ளன. 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இதனை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்.

    மெல்ல கற்கும் மாணவர்களின் திறனறிந்து செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் சரியான திட்டமிட்டு மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியர்களை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் தயாராக உள்ளது. வரும் கல்வி ஆண்டில் எல்லா மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலருடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதில் அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணி, இடை நிலைக்கல்வி உதவி திட்ட அலுவலர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×