search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dinakarna"

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் அமைச்சர்கள் பாதி பேர் பாஜகவுக்கு ஓடி விடுவார்கள் என்று தினகரன் பேசியுள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்க ஓட்டு போட்டீர்கள். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதுக்கு பரிசுபெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். 2016-ல் யாரை நீங்கள் வெற்றிபெறச்செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் வெற்றிபெற்ற பின் உங்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. மீண்டும் மந்திரி பதவி கிடைக்காததால் சோகமாக திரிந்தார்.

    அவருக்கு தன்னை தவிர யார் மீதும் நம்பிக்கை இல்லை. இங்குள்ள பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரைக்கும், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் தாக்குபிடிக்க முடியாமல் தி.மு.க.வில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவரது சுபாவத்திற்கு ஏற்ற கட்சி தி.மு.க.தான்.

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதுபோல தி.மு.க. வில் வேட்பாளர் பஞ்சம் இருக்கிறது. தி.மு.க. இப்போது அகதிகள் முகாம் ஆகி விட்டது. இளைஞர் பட்டாளம் அந்த கட்சியில் இல்லை. வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக தி.மு.க. ஆகி விட்டது.

    இப்போது மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்க முடியாமல் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவோம் என்கிறார். இது ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என எங்கள் மீது தி.மு.க.வினர் பொய்களை பரப்பி விட்டனர்.

    நீதி விசாரணை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் நமது வக்கீலின் வாதத்தால் உண்மையை சொல்ல நேரிடுமே என பயந்து கொண்டு ஆஜராகாமல் இருக்கிறார்.

    ஜெயலலிதாவின் உடல்நிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை என்பதே உண்மை. உடல் நலம் தேறி வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் விசாரணை கமி‌ஷனில் கூறியுள்ளனர். நீதிமன்றங்களை விட மக்கள் மன்றங்கள்தான் பெரிது. அ.தி.மு.க. தொண்டனின் உடலில் தி.மு.க. எதிர்ப்பு ரத்தம் ஓடுகிறது.

    எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் என் சித்தியிடம்(சசிகலா) சொல்லி நானே முதல்வராக பதவி ஏற்றிருப்பேன். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஆனால் முதல்வராக்கிய சசிகலாவையும், என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அரசியலில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்தவர்களை விடக்கூடாது. மோடியின் ஆட்சியில் தொழில்கள் முடங்கி விட்டன. 6 லட்சம் தொழிலாளர்கள் நடு ரோட்டுக்கு வந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் இருக்கும் அமைச்சர்களில், கைகளில் கயிறு கட்டி இருக்கும் பாதிபேர் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தொழிலை பார்க்க போய்விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர் பி.எஸ். என். தங்கவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×