search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmendra Yadav"

    • இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் பதவி பறிபோகும்.
    • சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாடி 37 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பா.ஜனதாவினால் 33 இடங்களை மட்டுமே கைபற்ற முடிந்தது.

    இதனால் மத்தியில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது. இதற்கு உத்தரபிரேதசத்தில் அவர்கள் வென்ற 43 இடங்கள் முக்கிய காரணமாக அமைந்து உள்ளன.

    இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்ற உத்தரபிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மீது உள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

    இதில், காஜிபூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அப்சல் அன்சாரி பா.ஜ.க.வின் பராஸ்நாத் ராயை 1, 24, 861 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் மீது ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரால் இம்முறை தேர்தலில் போட்டியிட முடிந்தது.

    ஜூலை மாதம் அவரது வழக்கில் வழங்கப்பட இருக்கும் தீர்ப்புதான் அவரது புதிய எம்.பி. பதவி நீடிக்கப்படுமா அல்லது பறிக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும்.

    இதேபோன்று அசம்கார் தொகுதியில் வென்ற தர்மேந்திரயாதவ் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருவேளை அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்.பி. பதவியும் பறிபோகும்.

    ஜான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் பாபு சிங் குஷ்வாஹா மீது உள்ள சொத்து மோசடி உள்ளிட்ட 8 வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் அவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அவரது எம்.பி. பதவியும் கைவிட்டுப் போய்விடும்.

    சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மேனகா காந்தியை தோற்கடித்த ராம்புவால் நிஷாத் மீது குண்டர் சட்டம் உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சந்தவுலி தொகுதியில் பா.ஜ.க.வி.ன் மகேந்திரநாத் பாண்டேவை தோற்கடித்த சமாஜ்வாடியின் வீரேந்திர சிங் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சஹாரன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் இம்ரா மசூத் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு தாக்கல் செய்திருப்பதால் அவரது எம்.பி. பதவிக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

    இறுதியாக, உ.பி.யில் சுயேச்சையாக வென்ற பட்டியலின தலைவர் சந்திர சேகர் ஆசாத்மீது 30 வழக்குகள் தொடுக்கப்பட்டு இருப்பதால் அவரது அரசியல் வாழ்க்கைக்கே பேராபத்து நேரும் அபாயம் உள்ளது.

    இதனால் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.

    ×