search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cow Pongal"

    • மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
    • சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து `கணுப்பிடி’ வைப்பார்கள்.

    பொங்கலுக்கு அடுத்த நாள், மாட்டுப் பொங்கல் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை `கணுப் பொங்கல்' என்றும் சொல்வார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து `கணுப்பிடி' என்றும் வைப்பார்கள். (முதல் நாள் தைப் பொங்கல் அன்று, பொங்கல் வைத்த பானையில் இருந்து முழுவதையும் எடுத்து விடாமல், சிறிது மீதி வைத்திருப்பார்கள். அதனை கையால் பிடித்து வைப்பார்கள்.

    அந்த காலத்தில் நதிக்கரை, குளத்தங்கரையில் அல்லது திறந்தவெளியில் செம்மண் கோலம் போட்டு, மஞ்சள் இலை அல்லது வாழை இலையை கிழக்கு நுனியாக வைத்து முதல் நாள் சாதத்தில் சிறிது மஞ்சள், குங்குமம் சேர்த்து தனியாக மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், வெள்ளை சாதம் என்று ஒவ்வொன்றும் ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் உருண்டை பிடித்து வைப்பார்கள். பின்னர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஆரத்தி காட்டுவார்கள்.

    பொங்கல் பானையில் இருந்த மஞ்சளை எடுத்து வயதான பெண்களிடம் கொடுத்து திருமாங்கல்யத்திலும், நெற்றியிலும் தேய்த்துக் கொள்வார்கள். இதன் பின் தான் குளித்து புதுத் துணி அணிவார்கள். இவ்வாறு செய்வதால் தன் உடன் பிறந்த சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பிக்கை. காக்கை உருவில் எமதர்மராஜா வந்து இந்த உணவை சாப்பிடுவதாக ஐதீகம்.

    சகோதரர்களும் உடன்பிறந்த சகோதரிகளுக்கு பணமோ அல்லது துணியோ பரிசாக அனுப்பி வைப்பார்கள். மாட்டுப் பொங்கல் அன்று காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோ பூஜை செய்ய நல்ல நேரம். பொதுவாக பசு மாடு வளர்ப்பவர்கள் பசுக்கொட்டிலில் பூஜை செய்வார்கள்.

    வீட்டில் பசு இல்லாதவர்கள் பசுவை வரவழைத்து பூஜிப்பது விசேஷத்தை தரும். பசுவையும், கன்றையும் குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வாசனை பூக்களால் அர்ச்சிப்பது நன்மை தரும். பசு மாட்டிற்கு சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், கரும்பு கொடுக்க வேண்டும். இது சகல தோஷங்களையும் விலக்கும்.

    கோபூஜை முடித்த பிறகு பசுவிற்கு பொங்கலும் கொடுப்பார்கள். அன்று மாலை பசுக்களை சந்தோஷமாக வைத்திருக்க எண்ணி, அவற்றின் இஷ்டம் போல் ஓட விடுவார்கள். இதற்கு `ஸ்வச்சந்த சாரம்' என்று பெயர் .

    மாட்டுப்பொங்கல் அன்று, கிராமங்களில் ஊர் கூடி ஊருக்கு வெளியே, ஒரு பெரிய மேடான இடத்தில் கள்ளிமரச் சுள்ளிகளைக் கொண்டு மிகப்பெரிய வட்டத்தை உருவாக்குவார்கள். அதில் சிறிது எண்ணெய் சேர்ப்பார்கள். இந்த மேட்டிற்கு `திட்டாணி மேடை' என்று பெயர். இதை பாதுகாக்க ஒருவரை நியமிப்பார்கள். அவரை `திட்டாணி காவலர்' என்பார்கள்.

    பின்னர் ஊரில் உள்ள மாடுகளை அந்த வட்டத்திற்குள் கொண்டு வந்து கலச தீர்த்தத்தை அதன் மேல் சிறிது தெளித்து, அதன்பிறகு ஆவாரம் பூ, பிரண்டை ஆகியவற்றை, கோரை புல்லால் மாலையாக தயார் செய்து பசு மாடுகளுக்கு அணிவிப்பார்கள். ஒருவர் சேகண்டி அடிப்பார். ஒருவர் தீச்சட்டி எடுப்பார். ஒருவர் சங்கு ஒலிப்பார். எல்லோரும் மகிழ்ச்சியாக விசேஷமாக பாடிக்கொண்டு திட்டாணி மேடையை சுற்றி வருவார்கள்.

    அப்போதும் `பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல்' என்று அனைவரும் கூறுவார்கள். இதை மாலையில் தான் ஆரம்பித்து செய்வார்கள். இரவு நீண்ட நேரம் ஆகிவிடும். அப்பொழுது திட்டாணி மேடையில் ஊர் கூடி பொதுப்பொங்கல் வைப்பார்கள். ஒரு பெரிய வாழை இலையில் பொதுப் பொங்கலை கொட்டி கற்பூரம் காட்டி பூஜை செய்வார்கள். பொங்கலை பசுமாடுகளுக்கு கொடுப்பார்கள்.

    தாங்களும் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள். பின் அனைவரும் பசு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து, அவரவர் வீட்டு வாசலில் நிற்க வைத்து வைகோலை கொளுத்தி திருஷ்டி கழிப்பார்கள்.

    கோ பூஜை மந்திரம்

    மாட்டுப் பொங்கல் அன்று கோ பூஜை செய்யும் போதும், பசுவை பூஜிக்கும் பொழுதும் கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி பூக்களால் அர்ச்சிக்கவும். இதில் `நம' என்று வரும் இடத்தில் 'நமஹா' என்று உச்சரிக்கவும்.

    ஓம் காமதேனவேநம

    ஓம் பயஸ்வின்யை நம

    ஓம் ஹவ்யகவ்ய நம

    ஓம் பலப்ரதாயை நம

    ஓம் வ்ருஷப பத்ன்யை நம

    ஓம் ஸௌரபேய்யை நம

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம

    ஓம் ரோஹிண்யை நம

    ஓம் ச்ருங்கிண்யை நம

    ஓம் க்ஷுரதாரிண்யை நம

    ஓம் கம்போஜஜனகாயை நம

    ஒம் பப்லஜகாயை நம

    ஓம் யவனஜனகாயை நம

    ஓம் மாஹேய்யை நம

    ஓம் நைசிக்யை நம

    ஒம் சபள்யை நம

    நானாவித பரிமள பத்ர

    புஷ்பாணி சமர்ப்பயாமி

    ×