என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chandrashtama"

    • சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.
    • திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.

    உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் சந்திராஷ்டம காலம். பொதுவாக சந்திராஷ்டம நாள் தோஷமான நாளாகத்தான் கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த நாட்களில் பயணம் செய்ய மாட்டார்கள், தேவையில்லாமல் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள், அதிலும் சிலர் வாயைத் திறந்து பேசக் கூட மாட்டார்கள்.

    ஏனென்றால் இந்த நாட்களில் தேவையில்லாமல் மனம் அலைபாயும், நினைத்த காரியங்கள் கைகூடாமல் போகும், அதனால் மன உளைச்சல் கூட ஏற்படலாம் என நம்புகின்றனர். அதனால் இந்த நாட்களில் அமைதியாக இருப்பதே நல்லது என நினைத்து அதிகம் பேசாமலேயே இருந்துவிடுகின்றனர்.

    அதிலும் செவ்வாய்கிழமையில் சந்திராஷ்டமம் வந்துவிட்டால் அவ்வளவு தான். சிலர் அந்த நாளில் எந்தவொரு முக்கியமான வேலையையும் தொடங்க மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு சாந்திராஷ்டம நாளிலும் பார்த்து பார்த்து அந்த நாளை கடக்க வேண்டும் என்றில்லை. பின்வருபவற்றை பின்பற்றினாலே போதும். அன்றைய நாளில் மன அமைதியாய் நிறைவாய் இருக்கலாம்.

    * சந்திராஷ்டம நாளில் காலை எழுந்தவுடன் சந்திர பகவானை மனதார நினைத்து 'ஓம் ஸ்ரீ சந்திராய நமஹ' எனும் மந்திரத்தை உச்சரித்து அன்றைய நாளை தொடங்கலாம்.

    * சந்திராஷ்டம நாட்களில் தங்களால் முடிந்தவர்கள் குல தெய்வத்தை நேரில் சென்று வணங்கலாம். முடியாதவர்கள் மனதார நினைத்துக்கொள்ளலாம்.

    * உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவில் அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.




    * தங்களால் முடிந்தவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.

    * தெய்வ வழிபாடு செய்யும்போதே முன்னோர் வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு முதலானவற்றை மனதார செய்துவிட்டு அன்றைய தினத்தைத் தொடங்கலாம்.

    * முக்கியமாக அன்றைய தினம் தேவையில்லாமல் மற்றவர்களைப் பற்றி புறம்பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * தேவையில்லாமல் யாரிடமும் வாக்குவாதமும் செய்யக்கூடாது.

    * திடீர் முடிவுகளை எடுப்பதையும், அவற்றைப் பற்றி வெளியே சொல்வதையும் தவிர்த்துவிட வேண்டும்.

    * எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நிதானமாக யோசித்து எடுக்க வேண்டும்.

    இன்று சந்திராஷ்டம நாள் விபரீதமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று எப்போதும் எதிர்மறையாக யோசித்துக்கொண்டே இருக்காமல் இறைவுணர்வோடு, நேர்மறை எண்ணங்களோடு அன்றைய நாளை கடக்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும்.
    • சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

    நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேப்பர் படிக்கும் பொழுதும் சரி, காலையில் தினசரி காலண்டரை காணும்போது சரி, அதில் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு அதைப்பற்றி தெரியாத தால் பெரும்பாலானோர் அதை பொருட்படுத்துவது இல்லை.

    ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்.


    சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.

    சந்திராஷ்டமம்=அஷ்டமம்+ சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறோம்.

    அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.

    பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.

    மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள்.


    மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள், பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

    புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.

    எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும்.

    17-ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன். உங்கள் நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாட்களில், நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.
    ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
    ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
    தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
    ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

    பொதுப்பொருள்:

    வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட  சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும்,  ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.  

    - இத்துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.
    ×