என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brought Kavadi to"

    • தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்க ளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • அதிகாலை முருகனுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    ஈரோடு:

    தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்க ளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி சாமி கோவிலில் இன்று அதிகாலை முருகனுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

    முன்னதாக பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் அதிகாலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலர் திண்டல் மலைக்கு பாத யாத்திரை வந்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம் பவள மலை முத்துக்குமார சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 2-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. விநாயகர் பூஜையும் கொடியேற்றமும், சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து யாக சாலை பூஜை, தீபாரா தனை, யானை வாகனத்தில் முத்துக்குமாரசாமி திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை அபிஷேகமும், யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முத்துகுமாரசாமி கிரிவலம் வந்தார்.

    தைப்பூச விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு முத்து விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பெண்கள் பலர் பதி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.

    இதையடுத்து காலை திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது. இதை தொடர்ந்து மகா தீபாரா தனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது.

    தொடர்ந்து நாளை காலை சண்முகசுப்பிரமணி யருக்கு அபிஷேகம், சிவப்பு சாற்றி அலங்காரமும் நடைபெற உள்ளது.

    மேலும் கோபி பச்சை மலை சுப்பிரமணியசாமி கோவிலிலும் தைப்பூச திருவிழாவையொட்டி மலை அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறு கிறது.

    இதேபோல் கோபி கடைவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில், மூல வாய்க்கால் சுப்ரமணியசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தைப்பூச விழா நடந்தது.

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள இரப்பரை பகுதியில் ஓதிமலை ஆண்டவர் முருகன் கோவில் அமைந்து உள்ளது. தைப்பூச விழாவை யொட்டி 5 முகம் கொண்ட மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    முன்னதாக நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் இளநீர், பன்னீர் காவடிகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து இன்று காலை வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் காவடி எடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதில் சின்ன தேர் மற்றும் பெரிய தேர் என 2 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கி றார்கள்.

    பவானியில் உள்ள பழனியாண்டவர் கோவி லில் தைப்பூச திருவிழா கடந்த 27-ந் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் பழனி யாண்டவருக்கு நடை பெற்றது.

    பழணியாண்டவர் கோவிலில் இருந்து கடந்த 31-ந் தேதி பவானியில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டுச் சென்றனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான இன்று வள்ளி, தெய்வானை உடனமர் பழனியாண்டவருக்கு பக்தர்கள் முன்னிலையில் இன்று காலை பழனி யாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் நடை பெற்றது.

    பின்னர் இன்று காலை பக்தர்கள் அேராகரா கோஷத்துடன் திருத்தேரோட்டம் நடந்தது. தேர் பவானி நகரில் முக்கிய வீதி வழியாக வலம் வந்து நிலை அடைந்தது.

    ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவி லான சென்னிமலை முருகன் கோவிலில் தைப் பூச விழா கடந்த 28–-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜை களுடன் விழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினமும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை உடன் சமேதராக அலங்கார வாக னங்களில் காட்சி அளித்து அருள் பாலித்தார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு வசந்த மண்டபத்தில் திருக் கல்யாணம் நடந்தது. இதை யொட்டி முருகபெரு மானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இன்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேக மும் காலை 5.40 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. 5.55 மணிக்கு தேர் கொண்டு வரப்பட்டது.

    பின்னர் உற்சவ மூர்த்தி கள் தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து சாமியை காலை 6.10-க்கு 3 தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்க ப்பட்டனர்.

    முதல் தேரில் விநயாகப்பெருமானும், பெரிய தேரில் முருப்பெரு மான் அமர்தவள்ளி, சுந்தர வள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், 3-ம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினர்.

    அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம் தலைமையில் சிறப்பு ஆராதனை நடை பெற்று சுவாமி தரிசனம் நடந்தது.

    இதையடுத்து காலை 6.15-க்கு தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் தோப்பு. வெங்கடா ச்சலம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அதை தொடந்து லட்சக்கண க்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் கந்தனுக்கு 'அரோகரா' முருகனுக்கு ''அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவியும், கடலைகாய், நெல் தூவியும் முருகப்பெரு மானை வழிபட்டனர்.

    தேரோட்டத்தில் செயல் அலுவலர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ். செல்வம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செங்கோட்டையன், பிரபு, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேவஸ்தான அலுவலக வளாகத்தில் தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கபட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பலர் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேர் காலை 6.40 மணிக்கு தெற்கு ராஜா வீதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேர் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் வலம் வந்து வடக்கு ரத வீதியில் நிறுத்தப்படும், திருத்தேர் நாளை (திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு நிலை அடைகிறது.

    தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் வரும் 9 -ந் தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணியளவில் நடராஜப்பெரு மானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்த ருளி திருவீதி உலா காட்சி நடைபெறும். இதை காண சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    அந்தியூரில் உள்ள சுப்பிர மணியர் கோவில் தைப்பூசத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

    அந்தியூர் தேர்வீதியில் அமைந்துள்ள சுப்பிர மணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா விமரி சையாக நடந்தது. இன்று காலை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

    விழாவையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, பால் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்த னர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு தங்க கவச அலங்கார பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியை பால தண்டாயுதபாணி கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    ×