search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "body hand over"

    செய்துங்கநல்லூர் அருகே பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் பலியான‌ மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #sterliteprotest
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பஸ் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதனால் பதட்டமான சூழல் நிலவியதால் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில் கடந்த 25-ந்தேதி உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கி ஒரு அரசு டவுண் பஸ் சென்று கொண்டிருந்தது. செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் பாலத்தில் அந்த பஸ் வந்த போது சிலர் வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மெஞ்ஞானபுரம் நவ்வலடி விளையை சேர்ந்த சுடலை (வயது70), அவருடைய மனைவி வள்ளியம்மாள்(63), காரைக்குடியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்த போதிலும் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த வள்ளியம்மாள் கடந்த 31-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வள்ளியம்மாளின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு கலவரத்தில் பலியானவர்க்கு வழங்குவது போல், பஸ் எரிப்பில் பலியான வள்ளியம்மாள் குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் நிவாரணம் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

    தங்களது கோரிக்கையை நிறைவேற்று வரை வள்ளியம்மாளின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது மகன் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வள்ளியம்மாள் துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை என்றும், தீவைப்பு சம்பவத்தில் இறந்ததால் ரூ.5 லட்சம் நிவாரனம் வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது.

    இது தொடர்பாக வள்ளியம்மாளின் உறவினர்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

    தங்களின் கோரிக்கை குறித்து வள்ளியம்மாளின் மகன் ஆறுமுகம் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இந்த நிலையில் நேற்று வள்ளியம்மாளின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் குடும்பத்தினரிடம் நேற்று மாலையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. உதவி கலெக்டர் தங்கவேலு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வள்ளியம்மாள் மகன் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது, அரசு நிவாரண தொகை ரூ.10 லட்சத்தை பெற்று கொள்வதாகவும், நாளை(அதாவது இன்று) தனது தாயாரின் உடலை பெற்று இறுதி சடங்கு செய்வதற்கும் ஆறுமுகம் ஒப்புக் கொண்டார். அத்துடன் தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக உதவி கலெக்டர் உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வள்ளியம்மாளின் உடல் இன்று அவரது மகன் ஆறுமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து வள்ளியம் மாளின் உடல் அவரது சொந்த ஊரான நவ்வலடிவிளைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #sterliteprotest
    ×