search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birth story of Ashtakalis"

    • பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான்.
    • பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார்.

    ஒருசமயம் அரசர் குலத்தை சேர்ந்த தானாவதி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று சொல்லி பிரம்மதேவனை நோக்கி தவம் மேற்கொண்டார். அந்த கடும் தவத்தினை பார்த்த பிரம்மதேவர் தானாவதிக்கு முன் தோன்றி அவள் கேட்ட வரத்தினை அளித்தார்.

    பிரம்மதேவன் அளித்த வரத்தின் பயனாக தானாவதிக்கு மகிஷாசுரன் என்ற மகன் பிறந்தான். அனைத்து கலைகளையும், வேதங்களையும் கற்ற மகிஷாசுரன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். மகிஷாசுரனின் தவத்தை கண்டு அவன் முன் தோன்றிய சிவபெருமான் அவன் கேட்ட வரங்களை எல்லாம் அளித்தார்.

    மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணமே வரக்கூடாது. அதுமட்டுமில்லாமல் பெண் வயிற்றில் பிறக்காத பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கு சிவபெருமானும் தந்தோம் என்று அருளினார்.

    சிவபெருமானிடம் வரத்தை வாங்கிய மகிஷாசுரன் இனி தனக்கு மரணம் நேர வாய்ப்பில்லை என்று ஆணவத்தில் மகேந்திரிகிரி பர்வதம் என்ற பகுதியை ஆட்சி செய்து வந்தான். சுயநலத்துடன் மகிஷாசுரன் பல கொடுமையான செயல்களை எல்லாம் செய்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் இறைவனாகிய சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இந்த சமயத்தில் கயிலாயத்தில் பார்வதி தேவி, விநாயகர், முருகன் இருக்கும்போது சிவபெருமான் ஒரு நாள் திறந்த கண்களுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சிவபெருமானின் ஆழ்ந்த தியானத்தை கண்ட விநாயகர் தனது அன்னையான பார்வதிதேவியிடம் தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார். தியானம் என்றால் கண்களை மூடிக்கொண்டு தானே செய்வார்கள்.

    இதைக்கேட்ட பார்வதி தேவி, விநாயகரிடம் உனது தந்தையின் கண்ணொளியில் தான் அண்டசராசரங்கள் இயங்குகிறது. உன்னுடைய தந்தை கண்களை மூடினால் இந்த அண்டமும் இருண்டுபோகும் என்று கூறினாள். அப்போது குறுக்கிட்ட முருகப்பெருமான் தாயிடம் அப்படியானால் தந்தை ஒருமுறை கண்களை மூடி காட்ட சொல்லுங்கள் என்றார். உலகம் எப்படி இருட்டாகும் என்பதை நானும் பார்க்கிறேன் என்றார் முருகன்.

    இதை எப்படி தந்தையிடம் சொல்வது என்று சொல்கிறார் விநாயகர். உடனே பார்வதிதேவி அதை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டாம். நானே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு பார்வதிதேவி, சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூடினார். உடனே இந்த அகில உலகமும் இருளில் மூழ்கியது. சிவபெருமான் சக்தியின் கைகளை விலக்கிக்கொண்டு கண்களை கோபத்துடன் திறந்தார். என்ன விளையாட்டு இது, என்று கோபத்துடன் கேட்டார் சிவபெருமான்.

    சிவபெருமானின் கோபத்தை கண்ட பார்வதிதேவி அப்படியே குனிந்து நின்றார். பிள்ளைகள் கேட்டதனால் தான் நான் இவ்வாறு செய்தேன். என்னை மன்னியுங்கள் என்று வேண்டினார் பார்வதிதேவி. சிவபெருமான் மிகுந்து கோபத்துடன் பார்வதிதேவியை பார்த்து நீ செய்த செயலுக்கு கண்டிப்பாக வருந்தியே ஆக வேண்டும். நீ இனி நாககன்னியின் வயிற்றில் அஷ்டகாளியாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமான், பார்வதிதேவிக்கு சாபம் கொடுத்துவிட்டார்.

    இதைகேட்டதும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து இந்த சிறிய தவறுக்கு மானிடப்பிறப்பா? அதுவும் நாகத்தின் வழியாகவா... என்று கூறி மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு அந்த இடத்தைவிட்டு எழுந்து நகரமுற்பட்டார் பார்வதிதேவி. உடனே சிவபெருமான் கடுமையான கோபம் கொண்டு நெற்றிக்கண்களை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியை எரித்து 8 பிண்டங்களாக்கியது.

    உடனே அந்த 8 பிண்டங்களையும் சிவபெருமான் தனது கையில் எடுத்து பாதாள உலகத்தில் நாககன்னி என்பவர் பிள்ளைவரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான் தன்னிடம் இருந்த ௮ பிண்டங்களையும் சாப்பிடுமாறு நாகக்கன்னியிடம் கொடுத்தார். அதை சாப்பிட்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது 8 முட்டைகளாக உருமாறி வெளிவந்தது.

    உடனே அந்த 8 முட்டைகளையும் அடைகாத்து வந்தார். நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் 8 முட்டையில் இருந்து 8 பெண்குழந்தைகள் பிறந்தது. முதலாவது பெண் குழந்தை முத்துமாரி என்ற முத்தாரம்மன் என்று பக்தர்கள் பெருமையாக அழைப்பார்கள்.

    இரண்டாவதாக பிறந்தவர் தான் மாகாளி என்ற பத்ரகாளி. மூன்றாவதாக மூன்று முகங்களுடன் பிறந்த முப்பிடாதி. மூன்று தலைகள் இருந்ததால் இவரை முப்பிடறி என்று அழைக்கப்பட்டார். இதுவே காலப்போக்கில் மறுவி முப்பிடாதி என்று அழைக்கப்படார்.

    நான்காவதாக பிறந்தவர் தான் உலகளந்தாள் என்ற உலகம்மன். உலகநாயகி என்று அழைப்பார்கள். ஐந்தாவதாக பிறந்தவர் அரியநாச்சி என்ற அங்கயர்கன்னி. இவர் நாகாத்தம்மனாகவும், நாகக்கன்னி என்றும் அழைக்கப்படுகிறார். ஆறாவதாக பிறந்தவர் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி. இவர்களை செல்லியம்மன் என்று அழைக்கின்றனர். ஏழாவதாக பிறந்தவர் சந்தனமாரி. இவர் சடைமாரி, ஆகாசமாரி என்றும் அழைக்கின்றனர். கடைசியாக பிறந்தவர் காந்தாரி.

    இந்த பிள்ளைகள் 8 பேரையும் நாகக்கன்னி மிகுந்த அன்போடும், அரவணைப்புடனும் வளர்த்து வந்தார். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆனார்கள். வளர்ந்து வந்த பிள்ளைகள் அனைவரும் அவர்களுடைய அம்மா நாகக்கன்னியை பார்த்து அம்மா என்னுடைய முகமும், உங்களுடைய முகமும் வேறுபட்டு இருக்கிறதே? ஏன் அம்மா என்று கேட்டனர்.

    உடனே நாகக்கன்னி அந்த 8 பிள்ளைகளையும் பார்த்து எல்லாம் அந்த சிவபெருமானின் செயல் என்று கூறினார். உடனே அந்த பெண்களும் நம்மை ஏன் தாயை போல் நாகக்கன்னியாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைத்தார் இந்த சிவபெருமான். இந்த நாககுலத்தில் மனிதபிறப்பு எடுத்து என்ன பயன்பெறப்போகிறோம். அதை அந்த சிவபெருமானிடமே கேட்போம் என்று அக்காள், தங்கை 8 பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் புரியத்தொடங்கினர்.

    அஷ்டகாளிகளின் தவத்தை பார்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் தோன்றினார். அஷ்டகாளிகள் சிவபெருமானிடம் தங்களுடைய பிறப்பு குறித்து கேட்டனர். அதற்கு சிவபெருமான் மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டுவரக்கூடிய மகிஷாசுரனை வதம் செய்வதற்காக தான் நீங்கள் படைக்கப்பட்டீர்கள் என்று கூறினார்.

    உடனே அந்த அஷ்டாகாளிகள் அனைவரும் சிவபெருமானிடம் நாங்கள் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று அந்த மகிஷாசுரனை வதம் செய்த பிறகு எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணம்முடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு சிவபெருமானும் ஒப்புக்கொண்டார்.

    அதன்பிறகு மகிஷாசுரனை அழிக்கக்கூடிய வகையில் அந்த 8 பேருக்கும் அனைத்து வரங்களையும் வழங்கினார் சிவபெருமான். சிவபெருமானின் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வதமலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் கடுமையாக சண்டை நடந்தது. தனித்தனியாக நின்று போரிடுவதைவிட ஒன்றுசேர்ந்து நின்றால் தான் பலம் அதிகம் என்று அஷ்டகாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சாமூண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

    மகிஷாசுரன் இறக்கும்போது சாமூண்டீஸ்வரியை பார்த்து தாயே என்னை மன்னித்துவிடுங்கள். வாழும் வரை மனிதகுலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி தாயே உம்மை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என்று பணிவுடன் கேட்டார்.

    இதைகேட்டதும் ஆங்கார ரூபினியான சாமூண்டீஸ்வரி அதன்பிறகு சாந்த சொரூபினியாக மாறினார். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக மாற்றி தன்னுடைய வாகனமாக்கிக்கொண்டார். அன்றில் இருந்து அஷ்டகாளிகள் 8 பேரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டார்.

    அதன்பிறகு ஒருநாள் அஷ்டகாளிகள் 8 பேரும் கயிலாயம் சென்றனர். கயிலாயம் விட்டு வந்த அஷ்டகாளியர் பொதிகைமலைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி மக்களுக்கு உணர்த்தி கோவில் கொண்டு அப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    ×