search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank employee dies"

    சாமியார் பேச்சை நம்பி புதையலை தேடி காட்டுக்குள் சென்ற வங்கி ஊழியர் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நகரி:

    ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் உள்ள கனரா வங்கியில் கேஷியராக பணிபுரிந்தவர் கட்டா சிவக்குமார். இவரது நண்பர் கிருஷ்ணாநாயக்.

    இவர்களுக்கு குண்டூர் மாவட்டம் முல்லிங்கியை சேர்ந்த சாமியார் அனுமந்தராவிடம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம், பிரகாசம் மாவட்டம் நாகெல்லமுடிபி - தாடிவாரி பள்ளி கிராமங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் உள்ள பெரிய மலைக்குன்றில் மன்னர் காலத்து புதையல் இருப்பதாக சாமியார் கூறினார். அந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறினார்.

    இதை கட்டா சிவக்குமார், கிருஷ்ணாநாயக் ஆகியோர் நம்பினர். இதையடுத்து 3 பேரும் புதையலை எடுக்க முடிவு செய்தனர். சிவக்குமார், கிருஷ்ணாநாயக் தங்களது குடும்பத்தினரிடம் சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சாமியாருடன் கடந்த 12-ந்தேதி காட்டுக்கு புறப்பட்டனர்.

    2 நாட்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து சென்று மலையடிவாரத்தில் தங்கினர். அதன்பின் வெயில் காரணமாக மலை ஏற முடியாமல் சோர்வடைந்தனர்.

    மேலும் உணவு, தண்ணீர், மோர் ஆகியவை தீர்ந்துவிட்டதால் ஊருக்கு திரும்ப முடிவு செய்து கிளம்பினர். அப்போது குடிநீருக்காக அலைந்த 3 பேரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிட்டனர். இதில் கிருஷ்ணாநாயக் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டார். அவருக்கு அங்குள்ள கிராமத்தினர் உணவு, தண்ணீர் கொடுத்தனர்.

    அதன்பின்னர் கிருஷ்ணா நாயக் புதையலை தேடி காட்டுக்குள் சென்ற தகவலை சிவக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் காட்டுக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது நடுக்காட்டில் சிவக்குமார் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர்.

    சிவக்குமார் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் இறந்தது தெரியவந்தது. மாயமான சாமியார் அனுமந்த்ராவை தேடி வருகின்றனர். நல்ல வசதியுள்ள சிவக்குமார் புதையலுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதியில் நண்பர்களுடன் குளித்த போது தடுப்பணையில் மூழ்கி வங்கி ஊழியர் மரணம் அடைந்தார்.
    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் தேங்காய் கடை நடத்தி வருபவர் ரவி.

    இவரது மகன் திவாகர் (20) கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று திவாகர் நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரை சாவடி தடுப்பணை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றார்.

    அப்போது அணையின் மேற்கு பகுதியில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது திவாகர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் சுழலில் சிக்கி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை நேரத்திற்கு மேலாக போராடி, தடுப்பணையில் சேற்றில் சிக்கியிருந்த திவாகரை பிணமாக மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×