search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audit Committee"

    • கூட்டத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. பிரதிநிதிகள் இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தெரிவிக்கபட்டதாக அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
    • மாவட்டம் முழுவதும் ஊரக வேலையளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு நிதி வீணாக்கப்பட்டிருப்பது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்படுகிறது.

    இதற்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.271 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள், நிதி இழப்பு, பணிகள் நடைபெறாமல் ஊதியம் பெறுதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இதையடுத்து இந்த திட்டத்தில் 2020-21, 2021-22-ம் ஆண்டுக்கான தணிக்கையானது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் மாவட்ட வள அலுவலர்கள், ஊரக வளர்ச்சி துறை தணிக்கையாளர் மூலம் கடந்த 5-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிதள பொறுப்பாளர்கள் மூலம் முறைகேடு, நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இதனை சம்பந்தப்பட்ட ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு‌ திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    நாமக்கல் ஒன்றியத்தில் 25 கிராமங்களில் நடந்த இந்த கூட்டத்தில் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் மட்டும் ரூ.7.43 லட்சம் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியப்பட்டு அதிகாரிகள் மூலம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    குறிப்பாக 100 நாள் வேலைக்கு பதிலாக 113 நாட்கள் வரையில் வேலை வழங்கியது, வேலைக்கு செல்லாமல் பலருக்கு ஊதியம் வழங்கியது, கழிவு நீர் கால்வாய் பணிகள் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் அதற்கான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாதது போன்றவற்றை ஆவணங்கள் வாயிலாக மக்களுடைய காண்பித்தனர்.

    இந்த நிலையில் கூட்டத்தில் அமர்ந்திருந்த அ.தி.மு.க. பிரதிநிதிகள் இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தெரிவிக்கபட்டதாக அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அதை வேளையில் தி.மு.க.வினர் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூச்சலிட்டனர். இதனால் இருதரப்புக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு இரு தரப்பையும் கூட்டத்தை விட்டு வெளியேற்றினர்.

    தொடர்ந்து நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது . இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    வரும் நாட்களில் தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தில் அனைத்து அட்டை தாரர்களுக்கும் வேலை நாட்கள் பகிர்ந்து அளிக்கப்படும். நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டம்பாடி ஊராட்சியில் ரூ.7.43 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் மேலும் உள்ள 24 ஊராட்சிகளிலும் சேர்ந்து மொத்தமாக ரூ.13 கோடி வரை நிதியிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    இந்த தொகையை அந்தந்த ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர் மூலம் வசூலித்து அதற்கான வங்கி கணக்குகளில் செலுத்தி வருகிறோம். மாவட்ட முழுவதும் ஊரக வேலையளிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் அரசு நிதி வீணாக்கப்பட்டுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×