search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Store"

    • புதிய ஐபோனை வாங்க பல வாடிக்கையாளர்கள் மும்பை விரைந்தனர்.
    • சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு.

    உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் கோபமுற்றனர். இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை, மோதலில் நிறைவுற்றது. சம்பவத்தின் போது, ஐபோன் 15 கிடைக்க தாமதமானதால் கடையில் பணியாற்றிய விற்பனையாளரை தாக்கினர்.

    வடக்கு டெல்லியில் உள்ள கம்லா நகர் சந்தையில் உள்ள ஐபோன் விற்பனை மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக ஆமதாபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மும்பைக்கு சென்று புதிய ஐபோனை வாங்க விரைந்தனர் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகளை ஆப்பிள் ஸ்டோரில் (பி.கே.சி.) வாங்க வரிசையில் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களில் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர்.
    • பணியாளர்களின் வேலை நேரம் வியாபார நேரங்களை பொருத்து வேறுப்படும்.

    ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை மையங்களை மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் கடந்த வாரம் திறந்தது. இரு ஸ்டோர்களிலும் கூட்டாக சேர்த்து மொத்தத்தில் 170 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசக்கூடியவர்கள் ஆவர். இந்திய ஆப்பிள் ஸ்டோர்களில் பணியாற்றுவோர் பெரும்பாலும் எம்பிஏ, பி டெக், பிஎஸ்சி போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இவர்களில் சிலருக்கு மாதம் ரூ. 1 லட்சம் வரையிலான சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மற்ற மின்சாதன ஸ்டோர்களில் பணியாற்றி வரும் நிர்வாக அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தை விட இது மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகம் ஆகும். ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களில் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

     

    சில பணியாளர்கள் வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆப்பிள் ஸ்டோர்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளனர். இந்திய ஸ்டோர்களில் பணியாற்ற மேலும் சிலருக்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பணியாளர்களின் வேலை நேரம் வியாபார நேரங்களை பொருத்து வேறுப்படும்.

    மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். ஸ்டோர்களை திறந்து வைத்ததோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு மத்திய மந்திரிகளை டிம் குக் சந்தித்து பேசினார்.

    • மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாக இருக்கிறது.
    • ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.

    டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து, வாடிக்கையாளர்களை வரவேற்றார். டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் இந்த விற்பனையகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆப்பிள் ஸ்டோர் டெல்லியின் பல்வேறு கேட்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    சகெட் ஸ்டோர் என்று அழைக்கப்படும் டெல்லி ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிகேசி ஸ்டோரை விட அளவில் சற்றே சிறியதாக இருக்கிறது. மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாகவே இருக்கிறது. இதற்கான வாடகையாக ஸ்டோரின் மொத்த விற்பனையில் ஒரு பகுதி அல்லது மாதம் ரூ. 40 லட்சம் என்று எந்த தொகை அதிகமாக இருக்கிறதோ அதனை ஆப்பிள் நிறுவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

     

    சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் ஆப்பிள் சாதனங்கள் குறித்த செயல்முறை விளக்கம் பெற்று, முழு தகவல்களை அறிந்துள்ளனர். நாட்டின் 18 மாநிலங்களை சேர்த்து, இவர்கள் அனைவரும் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசும் திறன் கொண்டுள்ளனர்.

    முன்னதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்தார்.

    2016 வாக்கில் இந்தியாவுக்கு வந்திருந்த டிம் குக் ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையங்களை திறந்து வைக்க டிம் குக் இந்தியா வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் நாட்டின் முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை மும்பையில் டிம் குக் திறந்து வைத்தார்.

    • ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
    • டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.

    இந்தியாவில் தனது சாதனங்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது. மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் இந்தியாவில் திறக்கப்பட இருப்பதை அறிந்து பலர் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முன்பே அங்கு கூடியிருந்தனர். ஆப்பிள் பிகேசியை திறந்து வைத்த டிம் குக் சுமார் ஏழு நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை ஸ்டோருக்கு வரவேற்றார்.

     

    ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

    மும்பையை தொடர்ந்து டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் சில்லறை விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய விற்பனை மையம் ஆப்பிள் சகெட் என்று அழைக்கப்படுகிறது.

    • மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்று அழைக்கப்படுகிறது.
    • ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனை மையம் மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியில் ஆப்பிள் விற்பனை மையம் திறக்கப்பட இருக்கிறது. மும்பையில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் பிகேசி என்றும் டெல்லியில் துவங்கப்பட இருக்கும் ஸ்டோர் ஆப்பிள் சகெட் என்றும் அழைக்கப்படுகிறது.

     

    புதிய ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தினுள் உள்ள பேரிகார்டுகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேட்களை தழுவி டிசைன் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்டோர் என்ற வகையில் பிரத்யேக கலை வடிவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட இருப்பதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் பிகேசி சார்பில் டுடே அட் ஆப்பிள் எனும் சீரிஸ் 'மும்பை ரைசிங்' என்ற பெயரில் அறிவித்து இருக்கிறது. ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முதல் நாளில் இருந்து ஏப்ரல் 18 ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும். 

    ஆப்பிள் பிகேசி போன்றே ஆப்பிள் சகெட் சார்பில் புதிய வால்பேப்பர் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதவிர ஆப்பிள் சகெட்டுக்காக பிரத்யேக ஆப்பிள் மியூசிக் பிளே லிஸ்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் உருவாகி இருக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோரான ஆப்பிள் பிகேசி ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.

    டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் சகெட் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது.

    ×