search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allah's Bounty"

    • கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
    • பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.

    பிறர் நன்றாக வாழ்ந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், வசதி வாய்ப்புகளோடு சுகமான வாழ்க்கையை அனுபவித்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

    ஒருவரது நிறைவான வாழ்க்கைக்கு காரணம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் என்பதை மனித மனம் ஏற்க மறுக்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் அளவுக்கு அவரது இறையச்சம், வணக்க வழிபாடுகள், நற்சிந்தனை, நற்செயல்கள் அமைந்துள்ளதை காணத் தவறிவிடுகிறார்கள்.

    நாமும் இறையச்சத்துடன் வாழ்ந்து, நற்செயல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வளர்க்க முன்வருவதில்லை. அதற்கு பதிலாக அந்த மனிதர் மேல் பொறாமை கொள்கிறார்கள். `அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பான வாழ்வு கிடைத்துள்ளது' என்று வெறுப்பை வளர்க்கிறார்கள். வெறுப்பு பகை உணர்வை உருவாக்குகிறது.

    உலக வாழ்க்கையில் இன்று மக்களிடம் காணப்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகத்தான் பல்வேறு மோதல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொண்டால் அது அவனையே அழிக்கிறது. பொறாமை குணம் அவனது மனதில் தங்கி கோபத்தையும், குரோதத்தையும் வளர்க்கிறது. இது அவனது உடல் நலத்துக்கே தீங்காக முடிகிறது.

    பொறாமை குணம் இருக்கும் இடத்தில் அமைதியும், சாந்தியும் இருப்பதில்லை. அது மனிதனை தீய வழியில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் பாவங்களை செய்யவும், தவறான வழியில் நடக்கவும் முன்வருகின்றான்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பொறாமை கொள்வது நன்மைகள் அனைத்தையும் தின்று விடும், நெருப்பு விறகை தின்பதைப் போல'.

    ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது 'சுவர்க்கத்திற்கு தகுதியானவர் ஒருவர் வருவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

    நாங்கள் பார்த்தோம், மதீனாவாசிகளில் ஒரு மனிதர் தொழுகைக்கு முன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு (ஒளூ செய்து கொண்டு) தன் தாடியில் தண்ணீர் சொட்ட தனது இரு காலணிகளையும் வலது கையில் கொண்டு வந்தார். மறுநாளும் அதே மாதிரி சொன்னார்கள். அவரே வந்தார்.

    மூன்றாம் நாளும் அவ்வாறே சொன்னார்கள். அவரே வந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அவையை விட்டு சென்ற பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் அவரை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கே சென்று விட்டார்கள். அவரிடம் சொன்னார்கள், `நான் என் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் `தாராளமாக தங்கிக் கொள்ளுங்களேன்' என்றார்.

    ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் மூன்று நாள் அவருடைய வீட்டில் தங்கினார்கள். அதைப் பற்றி சொல்லும் பொழுது `அவரை இரவு நேரத்தில் நான் கண்காணித்தேன். அவர் விழித்திருந்து வணக்கம் புரிவதை நான் காணவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்கும் பொழுது மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் கண்டேன். காலையில் பஜ்ரு நேரம் வந்தவுடன் பர்ளை நிறைவேற்றுகிறார். வேறு எந்த பெரிய வணக்கமும் இல்லை.

    இதை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கும் என் தந்தைக்கும் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவனவாசி என்று கூறினார்கள்.

    தங்களிடம் என்ன தான் அமல் இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காகவும், அதை நான் பின்பற்றலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன். ஆனால் தங்களிடம் எந்த ஒரு பெரிய வணக்கத்தையும் காணவில்லை. விஷயம் அவ்வாறு இருக்க, பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவர்க்கவாசி என்று எப்படி கூறினார்கள்? என்று தெரியவில்லையே' என்று கூறிவிட்டு புறப்படலானேன்.

    பின்னால் இருந்து என்னை அவர் அழைத்தார். அப்போது அவர் சொன்னார் 'நான் யாரின் மீதும் குரோதமோ, பொறாமையோ கொள்ளமாட்டேன். யாருக்கு எதை கொடுக்க இறைவன் நாடியிருக்கிறானோ அதை அவன் கொடுக்கிறான். நாம் ஏன் பொறாமை கொள்ள வேண்டும்' என்றார்.

    உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'ஆம், இது தான் தங்களை சுவனவாசியாக ஆக்கிவிட்டது'. அவர் தான் சஃதிப்னு அபி வக்காஸ் என்ற நபித்தோழர் ஆவார்.

    இந்த சம்பவம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாமல் இருந்தாலே சுவனம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

    நபி (ஸல்) கூறினார்கள்: "பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்." (நூல்: புகாரி)

    நம் மீது யாராவது ஒருவர் பொறாமை கொள்வாரேயானால் பொறுமையை மேற்கொள்ளவேண்டும், பழிவாங்கிவிடக் கூடாது. பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.

    ×