என் மலர்
வழிபாடு

திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவுடன் நிறைவு - 7.9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
- ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர்.
- தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி இரவு வைகுண்ட துவார வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதல் 3 நாட்களுக்கு முன்பதிவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னுரிமை என்ற அடிப்படையில் திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் 5 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டது.
வைகுண்ட துவார தரிசனம் வழியாக தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
வைகுண்ட துவார தரிசனம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு கோவிலில் தினசரி வழிபாடு வழக்கம்போல் நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 9 நாட்களில் 7, 09,831 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 75 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துள்ளனர். ரூ.36.86 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். மேலும் தங்கம், வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 85, 752 பேர் தரிசனம் செய்தனர். 19,443 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






