புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்

அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்.ரமலான் மாதத்தில் செய்யப்படும் எந்த ஒரு நற்காரியத்திற்கும் எழுபது மடங்கு நன்மை அதிகமாக வழங்கப்படுகிறது.
புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்
Published on

மனித வாழ்க்கை தினமும் பல்வேறு திருப்பங்கள் நிறைந்தது. வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நிலைகள் மனிதனுக்கு ஏற்படுவது உண்டு. அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு சமாளிப்பதில் தான் மனிதனின் வெற்றியே இருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு எப்போதுமே நாம் தயாராக இருக்க வேண்டும்.

"நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள். நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள். எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்". (திருக்குர் ஆன் 3:200)

மேற்கண்ட இறைமறை வசனம், நாம் எப்போதும் பொறுமையாகவும், அதே சமயம் எதற்கும் தயாராகவும் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் தான் நாம் வெற்றி பெற முடியும் என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறது.

நபிகள் நாயகம் சொன்னார்கள்: ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது முதுமை வரும் முன் இளமை, நோய் வரும் முன் ஆரோக்கியம், ஏழ்மை வரும் முன் செல்வம், வேலை வரும் நேரத்துக்கு முன் ஓய்வு, மரணம் வரும் முன் வாழும் நாள்". (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: ஹாகிம்)

இந்த ஐந்தும் நமக்கு வருவதற்கு குறிப்பிட்ட நேரமோ, காலமோ இல்லை. அது எப்போது வேண்டுமானாலும், எந்த வடிவத்திலும் வரலாம். அதற்கு நாம் தான் எந்த நேரமும் மிகத் தயாராக, முன் தயாரிப்புடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக மரணத்தை நாம் மறந்து விடக்கூடாது. இந்த ஒரு நினைவு இருந்தாலே போதும் நமது பல்வேறு காரியங்கள் மிகச் சிறப்பாக நடந்தேறி விடும். நமது மரணம் நமக்கு அவ்வளவு சீக்கிரம் இப்போதைக்கு வராது என்ற எண்ணம் தான் நம்மை சோம்பேறிகளாக்கி விடுகின்றன. நமது தயார் நிலையும் கேள்விக்குறியாகி விடுகிறது.

எனவே நல்ல காரியங்களை முன் கூட்டியே செய்து விட வேண்டும். நாளை பார்க்கலாம்; நாளை மறுநாள் பார்க்கலாம் என்று சொல்வதெல்லாம் நிச்சயம் அவை நடக்கப் போவதில்லை என்பதற்கான அடையாளமே தவிர வேறொன்றுமில்லை.

மரணம் மனிதனுக்கு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: "இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்து விடுமானால், 'என் இறைவனே, நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக. அங்கு நான் நற்செயல் புரிவேனே, என்று அவன் கூறத் தொடங்குவான்". ஆனால் அவ்வாறு ஒருபோதும் நடக்காது". (திருக்குர் ஆன் 23:99,100)

ஆகவே, போன உயிர் போனது தான். அது திரும்பவும் இங்கு வரப் போவதில்லை. எனவே தான் நாம் வாழும் காலத்திலேயே நல்ல பல நற்செயல்களை செய்து கொள்ள வேண்டும். அது தான் நமது வாழ்க்கையை வளமானதாக, வளர்ச்சியுடையதாக மாற்றும் என்பதையும் இறைவன் இப்படிக் கூறிக் காட்டுகின்றான்:

"ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.". (திருக்குர் 16:97)

எனவே, அன்றாடம் நாம் நற்செயல்களை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிற போதெல்லாம் உதவி உபகாரங்களை, சரியான சேவைகளை, பயனுள்ள தொண்டுகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். இவற்றில் தான் நமக்கான வெற்றி ஈருலகிலும் இருக்கிறது.

புனிதமிகு ரமலான் மாத நன்னாட்களை பெரும் வாய்ப்பாக பயன்படுத்தி நற்காரியங்களைச் செய்ய நாம் முன்வர வேண்டும். அதற்கு இப்போதிருந்தே நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ரமலான் மாதத்தில் செய்யப்படும் எந்த ஒரு நற்காரியத்திற்கும் எழுபது மடங்கு நன்மை அதிகமாக வழங்கப்படுகிறது என நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

இதனால் தான் 'ரமலான் மாதத்தை யார் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லையோ அவர்கள் நாசம் அடையட்டும்' என்று சாபமிட்டார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் என்றைக்குமே எதற்கும், யாரையும் சாபமிட்டவர்கள் அல்ல. அதை அவர்கள் விரும்பியதுமில்லை. சபிப்பதும், சாபமிடுவதும் நமது பழக்கமல்ல என்றெல்லாம் நம்மை எச்சரித்த நபிகளே இப்படிப்பட்டவர்களை சபிக்கிறார்கள் என்றால் ரமலான் மாதம் எவ்வளவு முக்கியமானது என்றும், அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் நன்கு புரிந்துணர்ந்து செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com