என் மலர்
வழிபாடு

திருச்செந்தூர் கோவிலில் நாளை மறுநாள் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு
- தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
- புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு செய்வதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தவாறு உள்ளனர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டு தோறும் தைப் பொங்கலுக்கு முன்பு பாதயாத்திரையாக முருகன் படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் முன் ஆடி பாடி வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் (15-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.






