என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகா சிவராத்திரியின் மகிமை
    X

    மகா சிவராத்திரியின் மகிமை

    • பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி.
    • சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி.

    சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. மாசி மாத சிறப்புகளின் மகுடம் மகாசிவராத்திரி. தேய்பிறை சதுர்தசி திதி நாள் சிவராத்திரி ஆகும். என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

    சாந்திராயனம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின் படி இந்த மாதத்தை `மகா' மாதம் என்று கூறுவர். எனவே இந்த மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கின்றனர்.

    பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.

    தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை சிவபெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.

    உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதலும் இந்த நாளில்தான் நடக்கும் என்கின்றன புராணங்கள்.

    மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவன் மீது மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமான் குறித்த அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.

    மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.

    Next Story
    ×