என் மலர்
வழிபாடு

கோவில் ராஜகோபுரம்
அகத்தியர் வழிபட்ட கதித்தமலை வெற்றி வேலாயுதன்
- அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார்.
- வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் கதித்தமலை என்று அழைக்கப்படும் மலை மீது முருகப்பெருமான், வெற்றி வேலாயுதசுவாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அகத்தியர் வழிபட்ட தலம், அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலம் என பல சிறப்புகளை இக்கோவில் பெற்றுள்ளது.
தல வரலாறு
முருகப்பெருமான் மீது அதிக பக்தி கொண்ட அகத்திய முனிவர், அவர் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி, ஒரு சமயம் அகத்தியர் முருகனை தரிசிக்க சென்றார். உடன் நாரதர் மற்றும் தேவர்கள் இருந்தனர். ஓரிடம் வந்ததும், அகத்தியர் முருகனுக்கு பூஜை செய்ய எண்ணினார். ஆனால் அங்கு நைவேத்தியம் செய்ய நீர் கிடைக்கவில்லை. மேலும், அவருக்கும் மிகுந்த தாகம் எடுத்தது.
இதனால் அகத்தியர், முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றி தன் கையில் வைத்திருக்கும் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்றை ஏற்படுத்தினார். இதையடுத்து, நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியரும் மகிழ்ச்சி அடைந்து பூஜைகளை முடித்து, தன் தாகத்தையும் தீர்த்துக் கொண்டார். முருகனால் தோன்றுவிக்கப்பட்ட ஊற்று, இன்றுவரை வற்றாமல் நீரை கொடுத்து வருகிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் இப்பகுதி 'ஊத்துக்குளி' என அழைக்கப்பட்டது. பின்னர், இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோவிலும் எழுப்பப்பட்டது.
கோவில் அமைப்பு
கோவில், மலைமீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் ஒரு அழகிய மண்டபத்தில் முருகப் பெருமான் தனியாக அருள்பாலிக்கிறார். வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர். இதற்கு காரணமும் கூறப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் தனிமையில் இருந்தார். அப்போது முருகப்பெருமானை மணம் முடிக்க விரும்பிய இரு பெண்கள், இம்மலைக்கு வந்து தங்களை ஆட்கொள்ளும்படி வேண்டினர். இதையடுத்து, முருகப் பெருமானும் அருளாசி வழங்கினார். அதன்படி, இந்திரனின் மகளாக தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இங்குள்ள முருகப்பெருமான், திருமணத்துக்கு முந்தைய நிலையில் எழுந்தருளி இருப்பதால் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர்.
மற்றொரு காரணமாக, வள்ளி, தெய்வானை, வேல் ஆகியவை முறையே இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை குறிக்கிறது. இவை மூன்றும் ஆசை, செயல், அறிவு ஆகிய மூன்று சக்திகளை குறிக்கின்றன. இவை மூன்றும் பரபிரம்மாவாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. இதன் காரணமாகவே பெரும்பாலான கோவில்களில் இச்சாசக்தியும், கிரியா சக்தியும் முருகனுக்கு இருபுறமும் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படுகிறது. இம்மூன்றில் மிக முக்கியமான ஞான சக்தியை, இச்சையும், கிரியையும் இருந்தால் தான் பெற முடியும். இருப்பினும் இவ்வாலயத்தில் இருக்கும் முருகப்பெருமான், இவ்விரண்டும் இல்லாமலேயே ஞான சக்தி பெற்றவர் என்பதை இது குறிக்கிறது.
கோவிலில் இடும்பனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலுக்கு கீழே தென்கிழக்கில் சுப்பராயர் சன்னிதி எனும் பாம்பு புற்றுக்கு தனிக் கோவில் உள்ளது. வள்ளி, தெய்வானை சன்னிதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் சுக்குமலையான் சன்னிதி காணப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுக்குமலையானை வழிபட்டு செல்கிறார்கள்.
கோவில் தோற்றம்
வழிபாடு
திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோவிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூச விழாவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் கதித்த மலை முருகன் கோவில் உள்ளது.






