என் மலர்
வழிபாடு

திருச்செந்தூர் போறீங்களா...? கோவில் நிர்வாகம் கொண்டு வந்த புதிய நடைமுறையை தெரிஞ்சிக்கோங்க!
- பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நேற்று முதல் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
- கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர் இந்தப்பணியில் ஈடுபட்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதினால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் பக்தர்கள் மறுநாள் சுவாமியை தரிசனம் செய்யலாம் என கருதி இரவு நேரங்களில் கடற்கரை பகுதியில் தங்குவது வழக்கமாக இருந்தது.
இந்த நிலையில் சமீப காலமாக கடற்கரையில் தங்கும் பக்தர்கள் உடைமைகள் திருட்டு போவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.
எனவே பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நேற்று முதல் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் பேரில் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. நேற்று கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர் இந்தப்பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் யாரும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோவில் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

நேற்று கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதி வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் தங்கிய பக்தர்களை போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோவில் வளாகம் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறும் கூறினர்.
இதனால் தற்பொழுது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையானது இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.






