என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கும்.
    பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் “கோவிந்தா” என்றுதான் சொல்லும். ‘கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று அர்த்தமாகும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

    எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.
    கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்றும் பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

    “பார்வதி பதியே” என்று ஒரு பக்தர் சொன்னால், மற்ற பக்தர்கள் அவளது துணைவரான சிவபெருமானை குறிக்கும் வகையில் ‘ஹர ஹர மகாதேவ’ என்று சொல்வது வழக்கம். ஆனால், கோவிந்தநாமத்தைச் சொல்லும்போது முதலில் சொல்பவர் ‘கோவிந்தா’ என்று சொன்னால் கேட்பவர்களும் “கோவிந்தா கோவிந்தா” என்று தான் சொல்வார்கள்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது இந்த கோவிந்தா நாம கோஷத்தை கேட்டிருக்கலாம். ‘கோவிந்தா’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான் என்று அர்த்தமாகும். இந்த கோவிந்தா பெயர் எப்போது உருவானது தெரியுமா? பசுக்கூட்டத்தோடு பாலகிருஷ்ணனாக திரிந்த வேளையில் ‘கோவிந்தன்’ என்ற பெயர் உருவானது.
    ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் அந்த தோஷத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ராகு தோஷமும்.. பரிகாரமும்..

    * ராகு 2-ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது.

    * ராகு 4-ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும்.

    * ராகு 7-ல் இருந்தால் திருமண தோஷம் உண்டாகும்.

    * கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

    * அரசமரமும், வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்பக் கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.

    * செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு.

    கேது தோஷமும்.. பரிகாரமும்..

    * திருமணத் தடையை ஏற்படுத்துவார்.

    * குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார்.

    * பழிச்சொல்லுக்கு ஆளாக்குவார்.

    * கேது 12-ல் இருந்தால் மோட்சம் தருவார்.

    * விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

    * காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும். 
    எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க நம் வழிபாட்டு முறை பல பரிகாரங்களைச் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    மக்கள் அனைவரும் இன்பங்களாலும், துன்பங்களாலும் சூழப்பட்டவர்கள். இன்பங்களை வரவேற்கத் தெரிந்தவர்களுக்கு, துன்பங்களை தாண்டிப் போகும் மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. தங்களின் துயரங்களை துடைத்தெரிய அவர்கள் கடவுளை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க நம் வழிபாட்டு முறை பல பரிகாரங்களைச் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    சிவன்‬ கோவிலில் இருக்கும் தல விருட்சங்களுக்கு சக்தி அதிகம். சிவாலயத்தில் இருக்கும் வன்னி மரம் அல்லது வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது பிரச்சினைகளைத் தெரிவித்தால் நல்ல பலன் கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். ஆலய தல விருட்சங்களுக்கு நாம் கூறுவதைக் கேட்கும் சக்தி இருப்பதாக ஐதீகம் உண்டு.

    இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை ராகு கால வேளையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, செவ்வரளிப்பூ சூட்டி, அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் நெய் தீபம் ஏற்றி தம்பதியரின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட தம்பதியர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் அது சரியாகும். இது ரிஷிகள் கூறிய எளிய பரிகாரமாகும்.

    அதிக கடன் பிரச்சினையில் அவதிப்படுபவர்கள், யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லை, பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, திருமணத் தடை போன்றவை விலகும். இது தவிர திருஷ்டி, செய்வினை போன்றவை நீங்குவதற்கு, ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சைப் பழத்தை குத்தி வைத்து வழிபடலாம்.

    வீட்டில் ஏதாவது துர்ஷ்ட சக்திகளின் சேட்டைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டால் அந்த துர்சக்திகள் அடங்கிவிடும்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதியில் தொடர்ச்சியாக 48 நாட்கள், நெய் தீபம் ஏற்றிவைத்து 12 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், தொழில் விருத்தி ஏற்படும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வராமல் இருக்கும் கடன் தொகை வசூலாகும். கொடுத்த கடன் வசூலாக, பைரவர் சன்னிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனையும் செய்யலாம்.

    ஒருவரது ஜாதகத்தில் சனி பகவானின் பாதிப்பு அதிகமாக இருந்தால், அந்த நபர் திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் சனி பகவானின் பாதிப்பு குறையலாம். மேலும் சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றுவதும் நல்ல பலன் தரும்.

    சிவன் கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வந்தால் செய்வினை தோஷம் நெருங்காது.

    வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கணவன்- மனைவி இடையிலான கருத்து வேறுபாடு நீங்கும்.

    பிரதோஷ காலத்தில், ரிஷப வாகனத்தில் அருளும் அம்பாளையும் ஈசனையும் வழிபாடு செய்தவர்கள், 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். அதிலும் ஈசான்ய மூலையில் சிவபெருமானுக்கு தீபாராதனைக் காட்டும் போது தரிசனம் செய்தால் நோய்களும், வறுமையும் நீங்கும்.

    மாதந்தோறும் வரும் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 11 மாதங்கள் செய்ய வேண்டும்.

    நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தடையின்றி நடைபெற துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது சிறந்தது. அதுவும் ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரமான அமிர்த கடிகை நேரத்தில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    அதே போல் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலான ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டில் திரி போட்டு, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தெய்வ குற்றம் மற்றும் குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபங்கள் விலகிடும். ஹஸ்தம் நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு சிவப்பு பட்டு துணி சாற்றி, சிவப்பு தாமரையை பாதத்தில் வைத்து, 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர, திருமண பாக்கியம் கைகூடும்.

    சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், சங்கடங்கள் தீரும். அதே போல் அந்த நாளில் எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிள்ளைகளின் கல்வியின் முன்னேற்றம் காணப்படும். இரட்டைப் பிள்ளையார் அருளும் ஆலயத்தில், ரோகிணி நட்சத்திரத்தில் சந்தனக் காப்பு செய்து வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும்.

    செவ்வாய்க்கு அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான். எனவே அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், மூன்று மாதத்திற்குள் உத்தியோகம் கிடைக்கும். விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று, முருகனுக்கு வேலில் எலுமிச்சைப் பழம் சொருகி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    இறைவனின் அருள்கடாட்சம் உள்ள ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் ஆகியவை உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு செய்வினை அண்டாது என்று சொல்லப்படுகிறது.

    பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளித்து வந்தால், தோஷம், தீட்டு நீங்கி, வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பசுவில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்த கலவையே ‘பஞ்ச கவ்யம்’ ஆகும்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி நாளில், கால பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் மகப்பேறு பாக்கியம் உண்டாகும். இது தவிர வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் உணவருந்தாமல் விரதம் இருந்து, மாலையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வந்தால் விரைவில் கருத்தரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியை சுற்றி வந்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

    வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமல் இருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், ஆதரவற்று இறந்து போனவர்களின் உடல் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும் செய்தால், அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.

    பவுர்ணமி நாட்களில் நடைபெறும் சத்திய நாராயண பூஜையில் கலந்து கொண்டால், தொழிலில் இருந்து வந்த தடை அகலும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சி கைகூடும்.

    எத்தைகய கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் சுந்தர காண்டத்தில் வரும் ஒரு அத்தியாயத்தை பாராயணம் செய்து வந்தால் நன்மை ஏற்படும். வாழைத் தண்டு திரியால் வீட்டில் தீபம் ஏற்றினால், குலதெய்வ சாபம் நீங்கும்.
    சயன தோஷம், புத்திர தோஷம், சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்.
    ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.

    மனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.

    குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

    இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.

    நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

    பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது. 
    சேலம் வசிஷ்ட நதிக்கரை சிவாலயத்தில் உள்ள அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
    சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகழூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை எட்டுதிக்கிலும் அஷ்டபைரவர்கள் காவல் காத்து வருகின்றனர். இந்த அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    ஒருமுறை மன்மதன் தனது மனைவி ரதியுடன் சேர்ந்து தம்பதி சமேதரனாய் சிவபெருமானை வழிபட விரும்பினான். வசிஷ்ட நதிக்கரையில் பசுமையான சோலையில் நடுவில் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த லிங்கத்திருமேனியை கண்டான். தனது சிவவழிபாட்டிற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க காலபைரவரிடம் வேண்டினான். காலபைரவர் எட்டுத்திக்கிலும் எழுந்தருளி இடையூறு வந்து விடாமல் காத்தருளினார்.

    நவகிரகங்கங்கள் கால பைரவருக்கு கட்டுபட்டவர்கள் என்பதால் அஷ்டபைரவர்களையும் ஒருசேர வணங்கினால் கஷ்டங்கள் நீங்குவதோடு, நவக்கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெருகும். காலபைரவர் சனீஸ்வரனுக்கு குரு என்பதால் ஏழரைச்சனி பாதிப்பு உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் முற்றிலும் நீங்கப்பெறுவர்.

    செவ்வாய்க்கிழமையில் மயிலம் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையாக கூறுகின்றனர்.
    முருகனுக்குத் திருமணம் நடந்த தலம் மயிலம். அதனால் இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொள்வது விசேஷம் என்று கருதப்படுகிறது. இதை ஒரு வேண்டுதலாகவே செய்கிறார்கள். அதனால் முகூர்த்த நாட்களில் இங்குள்ள மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.

    மண்டபத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் முதலில் இருப்பவர் விநாயகர். அவரை வணங்கி விட்டு நகர்ந்தால் பக்கத்திலேயே பாலசித்தர் ஜீவ சமாதி அடைந்த ஆலயம். பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும்.

    இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் கிளம்பும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார். பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.

    உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!

    மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி - மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.
    முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றியிருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள் சேர்த்திருந்தாலும் அவர்கள் இப்பிறவியில்/மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம், பொருட்கள், பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.

    இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும். மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி - மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.
    பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.
    சிங்கிரிகுடி நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது..
    புதுச்சேரி - விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன.

    அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051--ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

    கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர். லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குர சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவி லில் உள்ளன.

    ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடை பெறுகின்றன. ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார்.

    இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார்.
    பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார்.

    மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

    யார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன. மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது. இங்கே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், பிரம்மோற்சவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன. பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பாடு எழுந்தருளி தீர்த்தவாரி (மாசி மகத்தில்) உற்சவம் கண்டருள்கிறார்.

    சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. வசிஷ்டர் சிங்கிரிக்குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள் சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது..

    புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
    திருமணம் தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் கருட பகவானுக்கு அபிஷேகம் செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
    திருமணம் கைகூட தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்றோ அல்லது சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி வரும் நாளிலோ கருட பகவானுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் மிகச் சிறப்பாக திருமணம் நடந்து புத்திரப்பேறும் சித்திக்கும் கருட வழிபாட்டுடன் கருட தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் கிடைத்துவிட்டால் பலன் உறுதியாகும்.

    திருமண விஷயத்தில் கருடன்

    திருமண சம்பந்தமாகப் பெண் பார்க்கவோ, அல்லது மாப்பிள்ளை பார்க்கவோ புறப்பட்டு போகும் போது கருட தரிசனம் கிடைத்தால் திருமணம் நடக்கும். அந்த தம்பதிகள் ஆண், பெண் குழந்தைகளுடன் சீரும் சிறப்பான, சகல வசதி வாய்ப்புகளுடனும் நன்றாக இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள். வாழ்வின் எவ்வித குறையும் ஏற்படாது.
    கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.
    கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப்பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.

    சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத் தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.

    இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது. இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

    கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.

    கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.

    கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.

    நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.
    நீண்டகாலமாக பலரால் கேட்கப்படும் கேள்வி ஒன்று இருக்கிறது. அது தான் ‘விதியை வெல்ல முடியுமா?’. ‘முடியும்’ என்கிறார்கள் ஒரு சாரார். ‘முடியும் என்பதற்கு பின்னால் முயற்சியும் இருக்க வேண்டும்’ என்பது அவர்கள் கூற்று.

    ‘முடியாது’ என்பது இன்னொரு தரப்பினரின் வாதம். அவர்கள், ஊழ்வினை, பூர்வ புண்ணியம் என்பதை தங்கள் தரப்பு வாதத்திற்கு துணைக்கு அழைக்கிறார்கள். ‘பிறப்பின் போதே அமர்ந்த கிரகங்கள் தான் ஒருவரின் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. எது எப்போது நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று’ என்பது அவர்களின் வாதம்.

    இவை ஒருபுறம் இருந்தாலும், கிரக பலன்களை சொல்ல வந்த ஞானிகள், பரிகாரத்திற்கும் பக்கம் ஒதுக்கியதை மறுக்க முடியாது. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால், அதற்கு எதிர்முனையில் முடிவு ஒன்று இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நம்மை ஆளும் நவக்கிரகங்கள் நம்மை பாதிக்கும் போது, அதில் இருந்து மீள சொல்லப்பட்ட மார்க்கம் தான் பரிகாரம்.

    வியாதி வருவது விதி என்று எடுத்துக் கொண்டால், மருந்து உண்டு நிவாரணம் தேடுவது விதியை வெல்லும் வழி. விதியை வெல்லும் வழியை இறை வழிபாட்டின் மூலமும், சில சமயம் மருந்துகளின் துணையோடும் வெல்ல முயன்றிருக்கிறது மனித இனம். அவர்கள் தான் நம் முன்னோர்கள்.

    ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். மனிதனுக்கு தேவையான 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.

    அதனால்தான்...

    ‘கலையாத கல்வியும், குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும், கன்றாத வளமையுங்
    குன்றாத இளமையும், கழுபிணி யிலாத உடலும்
    சலியாத மனமும், அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும்
    மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்

    தொலையாத நிதியமும்..’ கேட்டு அம்பிகையிடம் வேண்டுதல் வைக்கிறார் அபிராமிபட்டர்.

    அப்படி அபிராமிபட்டர் ‘கழுபிணி இல்லாத உடல்’ என்ற ஒன்றை தர வல்லவர், தன்வந்திரி பகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வது போல், மருத்துவ கடவுள், இந்த தன்வந்திரி பகவான்.

    அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பாற்கடலில் இருந்து தோன்றியவர், தன்வந்திரி பகவான். இறப்பே இல்லாத அமிர்தத்தோடு அவதரித்தவர். நோய்க்கு மருந்து உண்ணும் போது, தன்வந்திரி பகவானை மனதில் எண்ணி, அவர் திருநாமத்தை ஜெபித்தபடியே மருந்தை உண்டால் வெகுவிரைவில் நோய் குணமாகும்.

    அதுமட்டுமல்ல.. மருந்து உண்பதற்கு நேரமும் இருக்கிறது. மனித இனத்திற்கு மகான்கள் கொடுத்த மகத்தான கொடை தான் பஞ்சாங்கம். அது வெறும் நல்லநேரம், கெட்ட நேரத்தை சொல்வதோடு நின்று விடவில்லை. இந்த காலக் கணிதத்தின் வாயிலாக சகலமும் அறியலாம்.

    அந்த பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலில் இருந்து, நாம் எடுக்க நினைக்கும் முத்து தான், அமிர்தகடிகை அல்லது அமிர்த நாழிகை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், வியாதிக்கு மருந்து உண்ணும் நேரம். இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

    மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதயமாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நடப்பில் இருக்கும். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் தொடக்கம் என்பது சூரிய உதயத்தில் இருந்து தொடங்குகிறது.

    அந்த வகையில் அமிர்த நாழிகையை கணக்கிட அன்றைய சூரிய உதயம் தெரிந்திருக்க வேண்டும். அதில் இருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை, மணிக்கணக்காக மாற்றி அதை பின்பற்ற வேண்டும். அவ்வாறு சரியான அமிர்த நாழிகையில் நோய்க்கான மருந்தை உண்பதால் பூரண குணமடைய முடியும் என்பது கவிகாளிதாசர் எழுதிய ‘உத்திரகாலாமிர்தம்’ என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கும் சூட்சுமம்.

    மருந்து உண்ணும் நேரம் பெரும்பாலும் நான்கு நாழிகைக்கு குறைவில்லாமல் இருக்கிறது. எனவே அமிர்த நாழிகை தொடக்கம் முதல் முடிவு வரை 1½ மணிநேரம் இருக்கிறது. முன் பின் சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால் கூட, அதன் மத்திம நேரத்தில் மருந்து உண்ணலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த இடத்தில் இன்னொறு விஷயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவசரகால நிவாரணத்திற்கு இது பொருந்தாது.

    ஒரு பாம்பு தீண்டிவிட்டது. அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக்காக காத்திருக்க முடியாது. அதே போல் இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் மருந்து எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்திற்கு மருந்து உண்டால் அந்த நோய் பூரணமாக குணமாகும்.

    மருந்து உண்ணும் நேரம்

    நோய்கள் குணமாக மருந்து உண்ண வேண்டிய அமிர்த நாழிகை நேரம் வருமாறு:-

    அஸ்வினி 21 முதல் 25 நாழிகைக்குள்

    பரணி 30 முதல் 34 நாழிகைக்குள்

    கார்த்திகை 50 முதல் 54 நாழிகைக்குள்

    ரோகிணி 15 முதல் 18 நாழிகைக்குள்

    மிருகசீரிஷம் 30 முதல் 34 நாழிகைக்குள்

    திருவாதிரை 40 முதல் 44 நாழிகைக்குள்

    புனர்பூசம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    பூசம் 16 முதல் 20 நாழிகைக்குள்

    ஆயில்யம் 40 முதல் 44 நாழிகைக்குள்

    மகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    பூரம் 30 முதல் 34 நாழிகைக்குள்

    உத்திரம் 33 முதல் 37 நாழிகைக்குள்

    ஹஸ்தம் 7 முதல் 11 நாழிகைக்குள்

    சித்திரை 16 முதல் 24 நாழிகைக்குள்

    சுவாதி 22 முதல் 26 நாழிகைக்குள்

    விசாகம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    அனுஷம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    கேட்டை 31 முதல் 35 நாழிகைக்குள்

    மூலம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    பூராடம் 10 முதல் 14 நாழிகைக்குள்

    உத்திராடம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    திருவோணம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    அவிட்டம் 14 முதல் 18 நாழிகைக்குள்

    சதயம் 20 முதல் 24 நாழிகைக்குள்

    பூரட்டாதி 10 முதல் 14 நாழிகைக்குள்

    உத்திரட்டாதி 18 முதல் 22 நாழிகைக்குள்

    ரேவதி 12 முதல் 16 நாழிகைக்குள்

    இந்த கால நேரத்தில் மருந்து உண்டால், நோய்கள் விரைவில் பூரண குணமடையும் என்பது நமது சித்தர்கள் கண்ட ராஜ வைத்தியமாகும். 
    நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன.
    நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

    தீர்த்தமலையின் சிறப்புகளே, இங்குள்ள தீர்த்தங்கள் தான். இங்குள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தல தீர்த்தங்களாக ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவை விளங்குகின்றன. அற்புத மூலிகைகளின் சத்து கலந்து ஓடி வரும் இந்த தீர்த்தங்களால்தான், இங்கு வரும் பக்தர்களின் நோய்கள் நீங்குவதாகவும், பக்தர்கள் புத்துணர்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது.

    மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள்.
    தீர்த்தங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    * ராமபிரானின் பாணத்தால் தோன்றிய தீர்த்தம் ‘ராம தீர்த்தம்’. பாறைகளில் இருந்து வெளிப்படும் அரிய தீர்த்தம் இது. இந்த தீர்த்தத்தில் ‘ராம ஜெயம்’ என்று உச்சரித்தபடி மூழ்கி எழுந்தால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்கிறது தல புராணம்.



    * சூரபத்மனை வதம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட முருகப்பெருமான், தேவர்களின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமே ‘குமார தீர்த்தம்’ என்று அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதாலும், பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

    * இத்தல இறைவியான வடிவாம்பிகை, ஈசனை மணந்து கொள்ளும் பொருட்டு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார். இதுவே ‘கவுரி தீர்த்தம்’ ஆகும். இந்த தீர்த்த நீரைக்கொண்டு, இறைவனையும், இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும். திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்கள் விலகும். கணவன்-மனைவிக்கு இல்லறம் நல்லறமாக அமையும்.

    * அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்ற தீர்த்தம் ‘அகத்திய தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்டது. இதனை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன் படுத்தி வந்தால் ஜீரண சக்தி கிடைக்கும். வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

    * அக்னி தேவனின், பெண்ணாசை காரணமாக அவனுக்கு சாபம் உண்டானது. அதனைப் போக்கிக் கொள்வதற்காக இத்தலம் வந்த அக்னி பகவான் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே ‘அக்னி தீர்த்தம்’. இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடலின் தட்பவெப்ப நிலை சீராகும். ஆஸ்துமா, அடிக்கடி சளி பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும் என் பது நம்பிக்கை.

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.
    ×