search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்தியா கூட்டணியில் தி.மு.க.வினர் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்- நாராயணசாமி
    X

    இந்தியா கூட்டணியில் தி.மு.க.வினர் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்- நாராயணசாமி

    • காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது.
    • கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் திடீர் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பொங்கல் விழாவை நடத்தியது புதுவை தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகள் பேசினர். இதனால் காங்கிரஸ், தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் அஜோய்குமார், ஹரீஸ் சவுத்ரி ஆகியோர் புதுவைக்கு வந்தனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளோடு அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என தி.மு.க.வுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினர். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    இம்முறை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் அமோக வெற்றி பெற அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    2 நாட்கள் முன்பு தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கத்தையும், என்னையும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்து, கூட்டணி தத்துவத்தை மீறியுள்ளனர்.


    காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. தி.மு.க. தலைவர்கள் இந்தியா கூட்டணியில், மதச்சார்பற்ற கூட்டணியில் பல போராட்டங்களை இணைந்து நடத்தியுள்ளோம்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசையும், அவர்களின் ஊழலையும், மத்திய மோடி அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

    இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற தேர்தல் நேரம். நானும், வைத்திலிங்கமும், முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோம்.

    மத ஒற்றுமை, மோடி அரசால் சிறுபான்மையினர் தாக்கப்படுவது, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியின் ஊழல், மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை விளக்கினோம்.

    அந்த கூட்டத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான நேரு கலந்து கொண்டார். அவர் எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. நாங்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியைத்தான் விமர்சித்தோம். இதுதான் அங்கு நடந்தது. இதற்காக தி.மு.க. தலைவர்கள் எங்களை ஒருமையில் பேசி, விமர்சித்து, மக்கள் மத்தியில் எங்களுக்கு கெட்டபெயர் உருவாக்க சிலர் திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளனர்.

    நாங்கள் எந்த காலத்திலும் கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. கூட்டணி தர்மத்தை மீறியது தி.மு.க.தான்.

    வில்லியனூர் தொகுதியில் ஷாஜகான் காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்தார். அவரை தி.மு.க.வில் சேர்த்தது யார்? மணவெளி தொகுதி காங்கிரஸ் செயல்தலைவர் சண்முகத்தை தி.மு.க.வில் இணைத்தது யார்? கூட்டணி தர்மத்தை மீறி இவர்கள் செயல்பட்டு விட்டு, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்ய உரிமை உண்டு, கட்சியை வளர்க்க உரிமை உண்டு. தங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க உரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தவறாக விமர்சித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    முதலில் நாம் நம் நடவடிக்கையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க மாட்டோம். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளது. கூட்டணியில் தி.மு.க. குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.

    சீட் ஒதுக்கீடு செய்வது கூட்டணி கட்சித் தலைவர்கள்தான். கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, 'இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவர் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வர். யாரை சொன்னாலும் அவர்களுக்கு வேலை செய்வோம்' என்றார். முதுகில் குத்தும் காங்கிரஸ் என தி.மு.க., கடுமையாக விமர்சனம் செய்துள்ளதே என அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அதை நாங்கள் நேரடியாக கேட்கவில்லை. எனவே அதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் காதில் அப்படிப்பட்ட விமர்சனம் விழவில்லை என்றார்.

    Next Story
    ×