search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் திடீர் விரிசல்?
    X

    புதுவை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் திடீர் விரிசல்?

    • நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர்.
    • தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்தியலிங்கம் எம்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

    புதிதாக பொறுப்பேற்ற வைத்திலிங்கம் எம்.பி. கூட்டணி கட்சித்தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்தார்.

    இந்த சந்திப்பு சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அவருடன் புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்றக்கட்சி தலைவர் வைத்தியநாதன் மற்றும் காங்கிரசார் உடன் சென்றிருந்தனர்.

    வழக்கமாக கூட்டணிக்கட்சித் தலைவர்களை புதுவை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்திக்கும் போது அந்த கட்சியின் புதுவை மாநில தலைவர்கள் மூலம் அனுமதி பெற்றுதான் சந்திப்பார்கள். இதுதான் நடைமுறை வழக்கம்.

    ஆனால் இந்த சந்திப்பில் தி.மு.க. அமைப்பாளர் சிவாவோ, அக்கட்சி நிர்வாகிகளோ இல்லை. நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

    அதேநேரத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க 6 எம்.எல்.ஏ.க்கள் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

    தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சியான காங்கிரசுடன் இணக்கமான உறவை தொடரவில்லை.

    காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சி கூட்டத்துக்கு அழைத்தபோது காங்கிரஸ் அலுவலகத்துக்கு வர முடியாது என்று தி.மு.க. பதில் அளித்தது.

    இதனால், ஓட்டல்களிலோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திலோ கூட்டணி கட்சி கூட்டம் நடந்து வருகிறது. இது புதுவை காங்கிரசுக்கும்-தி.மு.க.வுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே தி.மு.க. அமைப்பாளர் சிவாவை புறக்கணித்து விட்டு நேரடியாகவே ஸ்டாலினை புதுவை காங்கிரசார் சந்தித்துள்ளனர். இது புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×