search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜ.க. வேட்பாளராக நமச்சிவாயத்துக்கு வாய்ப்பு? காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வைத்திலிங்கம்
    X

    பா.ஜ.க. வேட்பாளராக நமச்சிவாயத்துக்கு வாய்ப்பு? காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வைத்திலிங்கம்

    • இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.
    • புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் உள்ள பா.ஜனதா தலைவர்களில் பெரும் பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவரும், புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

    அதே நேரத்தில் உள்ளூர் அரசியலில் தொடர விரும்புவதால் அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். அதோடு கட்சி மேலிடத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற செய்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் கட்சி மேலிடம் அவரை வேட்பாளராக நிறுத்தத்தான் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனிடையே அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பெயர்களும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    ஆனால் புதுச்சேரியை சாராத இவர்கள் போட்டியிட்டால் எதிர்கட்சிகள் அதனை சாதகமாக வைத்து பிரசாரம் செய்வார்கள் என்பதால் பா.ஜனதா தலைமைக்கே தயக்கம் உள்ளது.

    இதுதவிர பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர் குறித்து கட்சி தலைமையின் முடிவுக்காக பா.ஜனதாவினர் காத்திருக்கின்றனர்.

    இதே போல எதிர்கூட்டணியான இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.

    ஆனால் ஏற்கனவே காங்கிரசின் சிட்டிங் சீட் என்பதால் தமிழகத்தில் தொகுதிகளை குறைத்தாலும், புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் போட்டியிடுவதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள வைத்தி லிங்கத்திற்கும், உள்ளூர் அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் உள்ளது. ஏனெனில் 2026-ல் சட்ட மன்ற தேர்தல் வரும்போது, மீண்டும் தனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என விரும்புகிறார்.

    இதனால் வெளிப்படையாக இதுவரை தான் எம்.பி. பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறவில்லை.

    அதேநேரத்தில் காங்கிரசில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். கூட்டணியில் தமிழகத்தில் பேச்சுவார்த்தை முடிந்து, புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் போதுதான் இதற்கு முடிவு கிடைக்கும்.

    உள்ளூர் அரசியலில் ஈடுபட புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து விருப்பம் காட்டி வருவதால் வேட்பாளர் தேர்வில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க. போட்டியிட்டால் 4 பிராந்தியத்துக்கும் அறிமுகமான புதுவை மாநில செயலாளர் அன்பழகன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

    ஒரு வேளை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் புதுவை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் களமிறக்கப் படலாம். ஏனெனில் பா.ம.க.வும் புதுவை தொகுதிக்கு குறி வைக்கிறது.

    Next Story
    ×