என் மலர்
மற்றவை
- பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள் என்பது சில ஆய்வுகள் சொல்லும் உண்மை.
- ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை மட்டுமே இருக்கிறது. அது இருவரும் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். மற்றபடி உடலில் இருந்து உள்ளம்வரை முழுக்க முழுக்க வேறுபாடுகள்தான் நிரம்பியிருக்கின்றன.
ஏன் இப்படி? இதில் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ எதுவுமேயில்லை. உலகம் ஆரம்பித்த நாளில் இருந்து இப்படித்தான் இருக்கிறது.
இது தெரியாமல் பல காதலர்கள் புலம்புவதுண்டு; "என்னுடைய ரசனையும், என் சிந்தனையும் அப்படியே ஒத்துப்போகிறது, அதனால்தான் காதலித்தோம்" என்பார்கள். இப்படி கூறுபவர்கள் விரைவில் பெரும் அதிர்ச்சிகரமான உண்மையை சந்திப்பார்கள். இருவருக்கும் ஒற்றுமைகள விட வேற்றுமைகளே அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள்.
அப்படியென்றால் ஆண்கள் வேறு, பெண்கள் என்பதுதான் அர்த்தமா? இதுவும் பொய். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பது தான் மெய். யாராவது ஒருவர் "அவரை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன்" என கூறினால் அது அப்பட்டமான அறியாமையாகும்.
எந்த ஒருவரையும் வேறு ஒருவரால் புரிந்துகொள்ளவே முடியாது. இதை இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், ஒவ்வொரு நேரத்திலும் ஒருவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை அவனே அறியமாட்டான்.
அதனால் காதலிக்கும் முன் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது ஓர் அபத்தமான பொய் மூட்டை ஆகும்.
அப்படியென்றால் என்ன செய்வது? பெண்களின் இயல்புகள் பற்றி ஆண்களும், ஆண்களின் இயல்புகளைப் பெண்களும் ஓரளவாவது தெரிந்து கொள்வது மிகவும் பயன்தரக்கூடிய செயலாக இருக்கும்.
பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள் என்பது சில ஆய்வுகள் சொல்லும் உண்மை. ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
குழந்தைகள் மீது அதிக அளவில் அன்பும், பாதுகாப்பும் தர பெண்கள் விரும்புவதுண்டு. ஆண்கள் எப்போதும் குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் தலையிட விரும்புவதில்லை. அதனை தொல்லை என தப்பித்துப் போகவே விரும்புவார்கள்.
பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள். ஆண்கள் எப்போதும் எவரும் பாதுகாப்பதை விரும்புவதில்லை. உடல் அளவிலும் இருவருக்கும் பெரும் மாற்றங்கள் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள், குழந்தைப் பிறப்பு சங்கடங்கள், பாலூட்டுதல் என ஆண்களுக்கு இல்லாத பல்வேறு உடற்கூறுபாடு மாற்றங்கள் உண்டு.
ஆண்களுக்குத் தேவையில்லாத 'கற்பு' பெண்களுக்கு புனிதமாக சொல்லப்படுகிறது.
பெண்கள் பார்வையில் ஆண்களைப் பார்த்தால் 'பலமுள்ளவர்கள்' உழைக்கப் பிறந்தவர்கள், காதலிப்பதற்காக ஆயிரம் பொய் சொல்பவர்கள், திருமணத்திற்குப் பின் அடக்கியாள விரும்புபவர்கள், என்பதுடன் இன்னும் பல்வேறு பிம்பங்கள் உண்டு.
ஆனால் ஆண்களின் பார்வையில் இருக்கும் பெண்ணின் உருவம் மிகவும் மோசமானது ஆகும். பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு உயிரும், உணர்வும் உள்ளமும் இருக்கிறது என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. அவர்களது எண்ணப்படி பெண்கள் என்பவர்கள், ஆண்களின் விளையாட்டுக்காகப் படைக்கப்பட்ட ஓர் உயிரில்லாத பொம்மை என்பதுதான்.
சின்னஞ்சிறு வயதில் தாய்க்கு அடிமையாக இருக்கவேண்டும்; வளர்ந்த பின் திருமணம் முடியும்வரை, ஒவ்வொரு பெண்ணும் தந்தைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பின் கணவனுக்கு அடிமையாவும், பின் கடைசி காலம் வரை பெற்ற பிள்ளைகளுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என ஆண்கள் ஆசைப்படுவதுண்டு.
இதே விஷயத்தை பெண்களும் விரும்பத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரால் அன்புடன் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள், அடிமைகளாக அல்ல.
இப்படி ஆரம்பம் முதல் முடிவு வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமைகள் மட்டுமே நிரம்பி வழிகிறது. இதனை எளிமையான விஞ்ஞான மொழியில் சொல்லப்போனால் ஆண்கள் என்பது ஒரு கட்டம். பெண்கள் என்பது ஒரு வட்டம்..
இரண்டும் ஒன்றல்ல, கட்டத்திற்குள் வட்டமோ, அல்லது வட்டத்திற்குள் கட்டமோ செல்லமுடியாது. அப்படிப் போனாலும் அதில் நிறைவு இருக்காது.
கட்டம் என்பதும் வட்டம் என்பதும் வெவ்வேறு உருவகங்கள் என்பது எத்தனை தூரம் உண்மையோ, அத்தனை சத்தியமான வார்த்தைதான் ஆணும், பெண்ணும் வெவ்வேறு படைப்புகள் என்பது.
இருவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனும் பொழுது, ஈர்ப்பு மட்டும் எவ்வாறு ஏற்படுகிறது?
இதுதான் உலக இயற்கை. தன்னிடம் இருக்கும் ஒரு பொருளின் அருமை எவருக்கும் தெரியாது; இல்லாத பொருள்தான் மிகவும் உயர்ந்ததாகத் தோன்றும்.
இரும்பு காந்தத்தை மட்டுமே ஈர்க்குமே தவிர, இரும்பினை அல்ல. தன்னிடம் இல்லாத ஏதோ ஓர் அதிசயம் ரகசியம் எதிர் பாலினத்திடம் இருக்கிறது என்பதை அறிந்து தேடத் தொடங்குகிறார்கள்.
சூரியனும், பூமியும் பரஸ்பரம் சேர்ந்துவிடாமலும், விலகி விடாமலும் ஈர்த்துக்கொண்டே இருப்பதுபோல, ஆண்களும் பெண்களும் சேரவும் முடியாமல், விலகவும் முடியாமல் ஆனால் ஒன்றாகும் விருப்பத்துடன் மட்டும் இருக்கிறார்கள்.
ஆணும் பெண்ணும் தனித்தனி என்பதை மட்டும் அறிந்து கொள்வது போதாது, இந்த உலகில் யாரும் முழுமையில்லை என்ற உண்மையினையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இருக்கும்வரை போதும் என்ற மனதுடன் துணை தேட வேண்டும் என்பது அடிப்படை பாடமாகும்.
- அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் ‘பாடு நிலாவே’ பாடல்” என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.
- ‘ராஜபார்வை’ படத்தில் ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலை வசந்தா என்னும் ராகத்தில் அமைத்திருப்பார்.
ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் தமிழர்களின் கூடவே கொண்டாட்டம், கோபம், கொதிப்பு, தவிப்பு, சோகம் எல்லாவற்றிலுமே பயணப்பட்டு வந்து கொண்டிருப்பவர் இளையராஜா.
திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இசைஞானி இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள்.. 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த இவை போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படி எல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்...
"என்னோடு நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை மாநகரத்தை சேர்ந்த உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வரதராஜன் வாங்கினார். இதில் பயிற்சி பெற்றுத்தான் இசை அமைப்பாளராக ஆனேன். என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்" என்கிறார் இளையராஜா.
"இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்திலுள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக் குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் 'பாடு நிலாவே' பாடல்" என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.
'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என்று குரலெடுத்து தமிழ்த்திரையில் 1976-இல் இளையராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த்திரை ரசிகர்களது மனம். 'மச்சானைப் பாத்தீங்களா' என்று எஸ்.ஜானகி வசீகரக் குரலில் இழைத்த கிராமிய மெட்டு, அவரை அதிகமாகக் கவனிக்க வைத்தது.
வாத்தியார் படம், தலைவர் படம் என்ற நிலைமாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே கால கட்டத்தில், இசையை வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பதில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. இசைக்காகவே திரைப்படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை வர வைத்தவர் இசைஞானி. அதனால்தான் அந்தக் கால கட்டத்தில் தயாரிப்பாளர்கள் போஸ்டர்களில் 'இசைஞானி இசையில்' என்று இருந்தால், கண்களை மூடிக்கொண்டு படங்களை வாங்கி திரையிடத் தயாராக இருந்தார்கள். இளையராஜா இசையினால் புகழோடு ஓடிய படங்கள் வரிசையில் கரகாட்டக்காரன் தொடங்கி சிந்து பைரவி, முதல் மரியாதை, புன்னகை மன்னன், தேவர் மகன், நாயகன், தளபதி என்று ஒரு பெரிய பட்டியல் உண்டு. வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், 'என் கண்மணி உன் காதலி' பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும்.
அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் கமழும் இசையை அவர்தான்- அவரேதான் கொடுத்தார். மண்வாசனை படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டுடைய இசையில் அவர் கொடுத்திருக்கும் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த இயல்புநிலைதான் அவரின் தனித்தன்மை.
'ராஜபார்வை' படத்தில் 'அந்தி மழை பொழிகிறது' பாடலை வசந்தா என்னும் ராகத்தில் அமைத்திருப்பார். மழையில் குடை பிடித்தபடி நாயகனும் நாயகியும் திரையில் தோன்றுவார்கள். அந்தப் பாடலின் இசையைக் கேட்கும் போது நாமே மழையில் நனைவது போன்ற உணர்வு ஏற்படும்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடலின் முகப்பு இசை முடிந்து, பாடல் தொடங்கும் போதே, பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் உண்டாகும்.
தளபதி படத்தின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலினூடே ' குனித்த புருவமும்' என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என இளையராஜாவின் சிறப்புக்கள் சொல்ல ஏராளமானவை.
தேநீர் விடுதிகளில் அந்தக் கால கட்டங்களில் சப்தமாக இசைத்தட்டுகள் இரவு நேரங்களில் பாடவிடப்படும். எல்லாம் இளையராஜாவின் அருளாசி தான். அன்னக்கிளி, 16 வயதினிலே, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, செம்பருத்தி, தர்மயுத்தம், மெல்லத் திறந்தது கதவு, சொல்லத் துடிக்குது மனசு, நீங்கள் கேட்டவை, மறுபடியும், இளமைக்காலங்கள், பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்களின் பாடல்களைக் கேட்பதற்கு என்றே நண்பர்கள் குழுவுடன் பலமுறை தேநீர் அருந்தச் சென்று, நின்று, தலையாட்டி மணிக்கணக்கில் பாடலையும் ரசிப்போம், ருசிப்போம்!
'நாயகன்' படத்தில் 'தென் பாண்டிச் சீமையிலே' பாடலின் இழைப்பில் தெறிக்கும் சொற்களுக்கு அப்பாற்பட்ட சோகத்தின் பிழிவு, கதையின் ஆவேச பகுதிக்கேற்ற பாவங்களோடு வாணி ஜெயராம் குரலில் ஒலித்த "கவிதை கேளுங்கள்" (புன்னகை மன்னன்) பாடலின் அசாத்திய இசைக் கலவை, துள்ளாட்டம் போடும் 'சின்னச் சின்ன வண்ணக்குயில்' (மௌன ராகம்), மெல்லென்ற தென்றலாக வீசும் 'என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி), நெகிழ வைக்கும் 'ஒன்ன நெனச்சேன் பாட்ட படிச்சேன்' (அபூர்வ சகோதரர்கள்) என்று அவரது இசையில் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனது இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடுத்தத் தலைமுறைகளும்தான்.
கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை) பிறந்தது.
1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தளபதி படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்ணலதா பாடிய 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் 2003-இல் பிபிசி நடத்திய 'வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்' சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க, 4-ஆம் இடம் பெற்றது.
கவிதை வரிகளின் அழகு, சொற்கள் இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது, தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை.
அற்புதமான பாடகர்களின் மிக அருமையான பாடல்கள் ராஜாவின் இசையில் மிதந்து வந்தது ரசிகர்களது பொற்காலம். பாலமுரளி கிருஷ்ணாவின் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' (கவிக்குயில்) , கே.ஜே.ஜேசுதாஸின் 'கலைவாணியே ..' (சிந்து பைரவி), டி.எம். சவுந்திரராஜனின் 'அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்' (தீபம்), பி.சுசீலாவின் 'ராகவனே ரமணா' (இளமைக்காலங்கள்),
எஸ்.ஜானகியின் 'ராசாவே உன்னை நம்பி' (முதல் மரியாதை), வாணி ஜெயராமின் 'நானே நானா..' (அழகே உன்னை ஆராதிக்கிறேன்),எஸ்.பி.பியின் 'இளைய நிலா பொழிகிறதே' (பயணங்கள் முடிவதில்லை) என்று சொன்னால், இதைப்போலவும் இதைவிடவும் இனிமையான வேறு பல பாடல்களது பட்டியலை வேறொரு ரசிகர் சொல்லக் கூடும். அதுதான் இளைய ராஜா!
பத்ரகாளி படத்தின், 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' பாடல் மொத்தத்தையும் இந்த முதல் வரியை வைத்தே பாடி விட முடியும்.
அப்படியான ஒரு மெட்டு அது. தாளக் கட்டின் நயத்தை, 'வளையோசை கலகல' (சத்யா), 'பூவை எடுத்து ஒரு மாலை' (அம்மன் கோவில் கிழக்காலே), 'மணியே மணிக்குயிலே' (நாடோடி தென்றல்) போன்ற பல நூறு பாடல்களில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். பனி விழும் மலர் வனமும் (நினைவெல்லாம் நித்யா), தென்றல் வந்து தீண்டும் போதும் (அவதாரம்), மழையும், சாரலும், பனியும், வெயிலும் எல்லாமே இசையில் நிகழ்த்திக் கொண்டே இருக்கும்இளையராஜா என்ற மனிதனின் நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! இசைதான்! இசையே தான்!
-அம்ரா பாண்டியன்
- தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத உலோக சிலைகள் மீட்பு
- திருக்கோவில்களில் இருக்கும் அனைத்து விலைமதிப்பற்ற சிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
கடல் கடந்து போன தமிழனின் களவாடப்பட்ட பெருமை ரெயிலில் வந்து இறங்கியது...
ஆம், வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் சென்னையில் ரெயிலில் வந்து இறங்கியதும் இப்படித்தான் தோன்றியது.
மீட்கப்பட்டு இருப்பது தொன்மையான கோவில் சிலைகள் மட்டுமல்ல தமிழர்களின் தொன்மையான கலையும் தான் என்பதே உண்மை.
தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத உலோக சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது அந்த சிலைகளை மீட்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் 10 சிலைகள் இந்தியா வந்து சேர்ந்தது.
அந்த சிலைகள் முறைப்படி டெல்லியில் மத்திய மந்திரி மூலம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெற்றுக் கொண்டார். இன்று கும்பகோணம் கோர்ட்டில் அந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2 துவார பாலகர்கள் சிலை, தென்காசி அத்தாள மூன்றீஸ்வரர் கோவிலிலும், கங்காள மூர்த்தி, நந்திகேஸ்வரர் சிலைகள் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோவிலிலும், நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னை நல்லூர் கைலாச நாதர் கோவிலிலும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலிலும், சிவன்- பார்வதி சிலை தஞ்சை தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோவிலிலும், சம்பந்தர் சிலை ஒன்று நாகப்பட்டினம் சுகவனேஸ்வரர் கோவிலிலும் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அந்த சிலைகள் அனைத்தும் அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்படும்.
மற்றொரு நடனமாடும் சம்பந்தர் சிலை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிலைகள் மீண்டு வந்திருப்பது தமிழர்களின் இழந்த பெருமை மீண்டது போல் உள்ளது.
காலத்தை கணிக்க முடியாத இந்த சிலைகள் அந்த காலத்திலும் தமிழன் எவ்வளவு கலை நுட்பங்களுடன் இருந்திருக்கிறான் என்பதற்கான அடையாளம்.
பூமிக்கு அடியில் தோண்டி தமிழர்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிலை வடிவான இந்த கலை பொக்கிஷங்கள் மீட்பு பெருமைப்பட வைக்கின்றன.
கடல் கடந்து கடத்தி செல்லப்பட்ட இந்த சிலைகளின் இருப்பிடத்தையும் துப்புதுலக்கி கண்டு அறிந்த பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள். மீட்கப்பட்ட இந்த சிலைகள் மட்டுமல்ல தமிழகத்தில் இருந்து கொள்ளை போன அனைத்து கலைபொருட்களையும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மீட்டு வரவேண்டும்.
தமிழகத்தில் திருக்கோவில்களில் இருக்கும் அனைத்து விலைமதிப்பற்ற சிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
அந்தகாலத்தில் கவனக்குறைவும், உரிய பாதுகாப்பும் இல்லாததால் சிலைகள் களவாடப்பட்டுள்ளன. இனி அவ்வாறு நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்கள் பாதுகாப்பும், பராமரிப்பும் சாதாரணமானதல்ல. தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் போற்றி பாதுகாப்பதாகும்.
- தமிழிலில் இரட்டை சொற்கள் நிறைய உள்ளன.
- அவற்றில் சிலவற்றின் பொருளை தெரிந்துக் கொள்வோம்.
குண்டக்க , மண்டக்க :
குண்டக்க - இடுப்புப்பகுதி,
மண்டக்க - தலைப் பகுதி,
சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,
வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதுதான்...
அந்தி, சந்தி:
அந்தி - மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது..
சந்தி - இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது..
அக்குவேர், ஆணிவேர்:
அக்குவேர் - செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்...
ஆணி வேர் - செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்...
அரை குறை:
அரை - ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..
குறை - அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது...
அக்கம், பக்கம்:
அக்கம் - தன் வீடும், தான் இருக்கும் இடமும்...
பக்கம் - பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்...
இடக்கு முடக்கு:
இடக்கு - கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்...
முடக்கு - கடுமையாக எதிர்த்து தடுத்து பேசுதல்...
அலுப்பு சலிப்பு :
அலுப்பு - உடலில் உண்டாகும் வலி...
சலிப்பு - உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,..
தோட்டம் துரவு , தோப்பு துரவு,
தோட்டம் - செடி, கொடி கீரை பயிரிடப்படும் இடம்...
தோப்பு - கூட்டமாக இருக்கும் மரங்கள்...
துரவு - கிணறு...
காடு கரை :
காடு - மேட்டு நிலம் (முல்லை)...
கரை - வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்)...
நத்தம் புறம்போக்கு :
நத்தம் - ஊருக்குப் பொதுவான மந்தை...
புறம்போக்கு - ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்...
பழக்கம் வழக்கம் :
பழக்கம் - ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது...
வழக்கம் - பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது..
சத்திரம் சாவடி :
சத்திரம் - இலவசமாக சோறு போடும் இடம்
சாவடி - இலவசமாக தங்கும் இடம்...
கிண்டலும் கேலியும்:
கிண்டல் - ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது....
கேலி - எள்ளி நகைப்பது,..
ஒட்டு உறவு :
ஒட்டு - இரத்த சம்பந்தம் உடையவர்கள்...
உறவு - கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்கமானவர்கள்...
பட்டி தொட்டி :
பட்டி - கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்)...
தொட்டி - மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்...
கடை கண்ணி :
கடை - தனித்தனியாக உள்ள வியாபார நிலையம்...
கண்ணி - தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்...
பேரும் புகழம் :
பேர் - வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்புப்பெருமை..
புகழ் - வாழ்விற்குப் பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை....
நேரம்,காலம் :
நேரம் - ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கெள்வது
காலம் - ஒரு செயலைச்செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு..
கூச்சல்,குழப்பம்:
கூச்சல் - துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்... (கூ - கூவுதல்)
குழப்பம் - துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தை கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்...
நகை, நட்டு :
நகை - பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)
நட்டு - சிறிய அணிகலன்கள்..
பிள்ளை, குட்டி:
பிள்ளை - பொதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்...
குட்டி - பெண் குழந்தையைக் குறிக்கும்...
பங்கு, பாகம்:
பங்கு - கையிருப்பு.. பணம், நகை, பாத்திரம். ( அசையும் சொத்து)...
பாகம் - வீடு, நிலம்.. அசையாத்சொத்து...
ஈவு, இரக்கம் :
ஈவு- (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்...
இரக்கம் - பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்...
சூடு, சொரணை:
சூடு- ஒருவர் தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும் மனக்கொதிப்பு...
சொரணை - நமக்கு ஏற்படும் மான உணர்வு...
- ஜெலட்டின் கலந்த உணவுகள் இப்போது ஏராளம்.
- பல வண்ணங்களில் கிடைக்கும் ஜெல்லி அல்லது ஜெல்லடின் பவுடராக, சிறு குச்சிகளாக, சிறு துகள்களாகக் கிடைக்கிறது.
குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி மற்றும் ஜெலட்டின் வகை உணவுகள் எதில் இருந்து எடுக்கப்படுகிறது தெரியுமா..?
சைவம், அசைவம் என்று எந்த வகை உணவும் எடுத்துக் கொள்பவர்கள், இறுதியாக ஏதேனும் பழம் அல்லது இனிப்பு கலந்த உணவு எடுத்துக் கொள்வது வழக்கம். அது ஐஸ்கிரீம், ஐஸ் கிரீம் கலந்த பழக் கலவை, ஃபலூடா என்னும் பழங்கள், நட்ஸ், ஜெல்லி, ஐஸ்கிரீம் கலவை, கஸ்டர்ட், பழ ஜூஸ், மில்க் ஷேக், வெறும் இனிப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இப்போதைய டிரண்டிங்கில், வாசனையாக, வண்ணமயமாக, ஆசையையும், ஆர்வத்தையும் தூண்டும் அளவிற்கு உணவுகளை பரிமாறுவது தான் அனைவருக்கும் பிடிக்கும் ஒன்று. அதில் நுணுக்கமான சமையல் கலையும் அடங்கியுள்ளது.
அந்த வகையில், ஜெலட்டின் கலந்த உணவுகள் இப்போது ஏராளம். பல வண்ணங்களில் கிடைக்கும் ஜெல்லி அல்லது ஜெல்லடின் பவுடராக, சிறு குச்சிகளாக, சிறு துகள்களாகக் கிடைக்கிறது. இதைத் தண்ணீருடன் கலந்து குளிர்விக்கும் போது, கொழகொழப்பான அதே நேரம் கெட்டியான, தளதளவென்ற பதத்தில் சிறு சிறு கேக்குகள் கிடைக்கும். இவைதான் பல வகையான இனிப்புகளில் சேர்க்கப்படுகின்றன.
உண்மையில் இந்த ஜெலட்டின் என்பது, விலங்குகளின் எலும்பு, ஜவ்வு, இணைப்புத் திசுக்கள், மென்மையான எலும்பு திசுக்கள் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இது பலகட்ட செய்முறைகள் கடந்து வேதிப் பொருட்கள், வண்ணங்கள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
சைவ உணவாளர்கள், இது தெரிந்தவர்கள், இந்த ஜெல்லியை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பலருக்கும் இது தெரிந்திருப்பது இல்லை. அந்த பாக்கெட்டின் குறிப்பிலேயே 'animal origin's என்று இருக்கும். அதைப் பார்த்துதான் வாங்கவேண்டும்.
இதே ஜெல்லி, தாவர வகையில், கடல் பாசியில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதை சைவப் பிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இரு வகை ஜெல்லியிலும் அதிக சர்க்கரை தான் கலக்கப்படுகிறது. எனவே கலோரியும் அதிகம். இது ஒருபுறம் இருக்க, அதிகப்படியான வண்ணங்கள், preservatives சேர்க்கப்படுவதால் பல வகையில் குழந்தைகளுக்கு உடல்நலக் கேடுகளையே கொடுக்கிறது. குறிப்பாக உடல்பருமன் மற்றும் பற்களில் சொத்தை, பசியின்மை போன்றவை ஏற்படும்.
- வண்டார்குழலி ராஜசேகர்






