என் மலர்

  நீங்கள் தேடியது "Editorial"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத உலோக சிலைகள் மீட்பு
  • திருக்கோவில்களில் இருக்கும் அனைத்து விலைமதிப்பற்ற சிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

  கடல் கடந்து போன தமிழனின் களவாடப்பட்ட பெருமை ரெயிலில் வந்து இறங்கியது...

  ஆம், வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் சென்னையில் ரெயிலில் வந்து இறங்கியதும் இப்படித்தான் தோன்றியது.

  மீட்கப்பட்டு இருப்பது தொன்மையான கோவில் சிலைகள் மட்டுமல்ல தமிழர்களின் தொன்மையான கலையும் தான் என்பதே உண்மை.

  தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத உலோக சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின்போது அந்த சிலைகளை மீட்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் 10 சிலைகள் இந்தியா வந்து சேர்ந்தது.

  அந்த சிலைகள் முறைப்படி டெல்லியில் மத்திய மந்திரி மூலம் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பெற்றுக் கொண்டார். இன்று கும்பகோணம் கோர்ட்டில் அந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

  2 துவார பாலகர்கள் சிலை, தென்காசி அத்தாள மூன்றீஸ்வரர் கோவிலிலும், கங்காள மூர்த்தி, நந்திகேஸ்வரர் சிலைகள் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோவிலிலும், நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னை நல்லூர் கைலாச நாதர் கோவிலிலும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலிலும், சிவன்- பார்வதி சிலை தஞ்சை தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோவிலிலும், சம்பந்தர் சிலை ஒன்று நாகப்பட்டினம் சுகவனேஸ்வரர் கோவிலிலும் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அந்த சிலைகள் அனைத்தும் அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்படும்.

  மற்றொரு நடனமாடும் சம்பந்தர் சிலை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சிலைகள் மீண்டு வந்திருப்பது தமிழர்களின் இழந்த பெருமை மீண்டது போல் உள்ளது.

  காலத்தை கணிக்க முடியாத இந்த சிலைகள் அந்த காலத்திலும் தமிழன் எவ்வளவு கலை நுட்பங்களுடன் இருந்திருக்கிறான் என்பதற்கான அடையாளம்.

  பூமிக்கு அடியில் தோண்டி தமிழர்களின் வாழ்க்கையையும், வரலாற்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிலை வடிவான இந்த கலை பொக்கிஷங்கள் மீட்பு பெருமைப்பட வைக்கின்றன.

  கடல் கடந்து கடத்தி செல்லப்பட்ட இந்த சிலைகளின் இருப்பிடத்தையும் துப்புதுலக்கி கண்டு அறிந்த பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்கள். மீட்கப்பட்ட இந்த சிலைகள் மட்டுமல்ல தமிழகத்தில் இருந்து கொள்ளை போன அனைத்து கலைபொருட்களையும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மீட்டு வரவேண்டும்.

  தமிழகத்தில் திருக்கோவில்களில் இருக்கும் அனைத்து விலைமதிப்பற்ற சிலைகளையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

  அந்தகாலத்தில் கவனக்குறைவும், உரிய பாதுகாப்பும் இல்லாததால் சிலைகள் களவாடப்பட்டுள்ளன. இனி அவ்வாறு நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்கள் பாதுகாப்பும், பராமரிப்பும் சாதாரணமானதல்ல. தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் போற்றி பாதுகாப்பதாகும்.

  ×