என் மலர்tooltip icon

    மற்றவை

    • நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம்.
    • கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு.

    உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி.

    கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

    ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? ....

    முதல் இலக்கணம் இறப்பும், பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன்.

    பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும், பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும், பிறப்பும் கிடையாது.

    இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி,சங்கர ஜெயந்தி இப்படி..

    எந்தக் கோவிலிலாவது சிவ ஜெயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு, இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம்.

    -வாரியார்

    • ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை.
    • வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பது பழமொழி.

    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய், (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.

    முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.

    ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம். கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை போன்ற நோய்கள் குணமாகும்.

    மாதவிடாய் தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தலாம்.

    தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை.

    "வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்" என்பது பழமொழி. இதே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும்.

    -சிவசங்கர்

    • நமது கர்மாவில் இருந்தால் சுப நிகழ்வுகளை, மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாது.
    • பித்ருக்களின் கர்ம சுமைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    விதி காரகன் என்று அழைக்கப்படக்கூடிய. சூரியன், இயக்க ஸ்தானமான பத்தாம் இடத்தில் அமர்கின்ற மாதத்தைதான் தை மாதம் என அழைக்கிறோம்.

    தை பிறந்தால் வழி பிறக்கும், என்ற நம்பிக்கை நம் மக்கள் மனதில் ஊறி இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம், விதியும் இயக்கமும் இணையும் போது அங்கே ஒரு நல்ல நிகழ்வு நடந்தே தீர வேண்டும்.

    எனவேதான் தை மாதத்தில் ஏராளமான, புண்ணிய நாட்களை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

    வருடத்தின் 12 அமாவாசைகளில் மிக முக்கியமான அமாவாசைகள், ஆடி அமாவாசை,

    மஹாளய அமாவாசை, தை அமாவாசை.

    இந்த மூன்று அமாவாசை நாட்களும் மிகுந்த சூட்சுமம் நிறைந்த நாட்கள்.

    பித்ருக்களின் உதய பொழுது தை அமாவாசை!

    பித்ருக்களின் அந்திப்பொழுது ஆடி அமாவாசை !

    பித்ருக்களின் கர்மாவை கரைக்கும் மிக முக்கிய நாள் மகாளய அமாவாசை !

    நாம் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கான காரணத்தை அறிவதற்கும், அதற்கான தீர்வை பெறுவதற்கும், ஜாதகம் பார்க்க வேண்டியதில்லை, கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்ய வேண்டியது இல்லை. மிக எளிமையான வேலை பித்ருக்களின் சுமையை அகற்றுவது !

    எவ்வளவு பெரிய சுப ஜாதகமாக இருந்தாலும், நமது பித்ருக்களின் சுமைகள், நமது உடலில், நமது கர்மாவில் இருந்தால் சுப நிகழ்வுகளை, மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாது.

    தற்காலத்தில் நாம் தீர்க்க இயலாத பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை அனைத்திற்கும் மூல காரணம் பித்ருக்களின் கர்ம சுமைகள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    இதைத்தான் அறிவியலும் மருத்துவமும் ஜெனிடிக் குறைபாடு என அழைக்கிறது. ஜெனட்டிக் குறைபாடு அகற்றும் வழிமுறை, மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் இன்னும் கண்டறியவில்லை.

    ஆனால், ஆன்மீகத்தில் நமது முன்னோர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அந்த வழிமுறைதான் பித்ரு வழிபாடு !

    தை மாதத்தில் நிகழும் மிக முக்கியமான நிகழ்வான தை அமாவாசையில் பித்ரு வழிபாட்டை செய்து, நமது முன்னோர்கள் சுமை அகற்றி, நாமும் நமது வாரிசுகளும் நன்மை அடையும் வழிமுறைகளை செய்வோம்.

    -ஜோதிடர் சிவ. இராம. கணேசன்

    • சென்னையில் குதிரை மீது அமர்ந்த மன்றோ சிலையைப் பார்த்திருப்பிர்கள்.
    • மேய்ச்சல் நிலங்களை அரசுடமை ஆக்கினார்.

    பொறம்போக்கு- சென்னையில் இது ஒரு கெட்ட வார்த்தை ." போடா பொறம்போக்கு" என்று திட்டுவார்கள். இது எப்படி வந்தது தெரியுமா?

    சென்னையில் குதிரை மீது அமர்ந்த மன்றோ சிலையைப் பார்த்திருப்பிர்கள். இந்த மன்றோ பிரபு 1820இல் " பெம்புரோக் சட்டம்" என்றச் ஒன்றைக் கொண்டு வந்தார். இதன்படி மேய்ச்சல் நிலங்களை அரசுடமை ஆக்கினார். இந்த அரசு நிலங்களில் தற்காலிகமாகக் குடியேறிய ஏழைகளை "பெம்புரோக்" என்று கேவலமாக அழைத்தார்கள். நாளடைவில் பெம்புரோக் என்பது மருவி "பொறம்போக்கு"ஆகி விட்டது.பொறம்போக்கு நிலம் என்பது இன்றைக்கும் வழக்கில் இருக்கிறது.

    -இந்திரன் ராஜேந்திரன்

    • காற்றடைக்கப்பட்ட டயர்களைத் தயாரித்து பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
    • எதிர்காலத்தில் ரப்பர் இல்லாத சக்கரங்கள் சந்தைக்கு வரலாம்.

    அமெரிக்காவைச் சேர்ந்த "சார்லஸ் குட்இயர்" என்ற பொறியாளர் 1839 ஆம் ஆண்டு, மிருதுவான ரப்பரில் கந்தகத்தை கலந்து உயர் வெப்பத்தில் அழுத்தினால் கடினமான, ரப்பர் கிடைக்கும் என்று கண்டுபிடித்தார். இந்த செயல்முறை வல்கனைஸிங் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கனமான ரப்பரில் வளையங்கள் செய்து, அதை வாகனங்களின் இரும்புச்சக்கரங்களின் மேற்புறத்தில் பொருத்தியதால் உராய்வு குறைந்து வாகனங்களின் இயங்குதிறன் மேம்பாடு அடைந்தது.

    பின்னர்,1895ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் "மிச்செலின் எல்'கிளேர்" என்ற நிறுவனம் "நுமாட்டிக் டயர்" எனப்படும் காற்றடைக்கப்பட்ட டயர்களைத் தயாரித்து பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

    1887 இல் டன்லப் நிறுவனம் உட்குழாயை (Tube) சந்தையில் அறிமுகம் செய்து சாதனை புரிந்தது .

    1900 களின் முற்பகுதியில், ரப்பர் பற்றாக்குறை மற்றும் முதல் உலகப் போரின் போது டயர்களில் காற்றை நிரப்புவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியர்கள் 1916 இல் ஒரு ஸ்டீல் ஸ்பிரிங் டயரை, வடிவமைத்தனர், ராணுவ வாகனங்களுக்கு ஏற்றதாக இவை கருதப்பட்டன. ஆனால் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை .

    எதிர்காலத்தில் ரப்பர் இல்லாத சக்கரங்கள் சந்தைக்கு வரலாம்..

    -சுந்தரம்

    • இருதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன்.
    • வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை.

    "எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெருத் திண்ணையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு. ஒரு நாள் பௌர்ணமி தினம் இரவு சுமார் மணி 12.30 இருக்கும். நல்ல நிலவு ஒளி திண்ணையில் கால் பாகம் இருக்கிறது. நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்சோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார். எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது.

    அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன். 'நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கப் போகிறேனப்பா. இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே' என்று கூறிய வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்டேன். உருவமும் பார்த்தேன். அருள்பாலித்த உரையும் கேட்டேன். உடனே காட்சி மறைந்துவிட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.

    என் மனைவியை எழுப்பிக் கூறி மகிழலாம் என்றால் பிறரிடம் அப்போதே கூறவும் கூடாது என்ற அருள் ஆணை.. என்ன செய்வேன். இருதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால் வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை. அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயம். இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் என் எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்."

    - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    • ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும்.
    • ஜாதக பலம் உள்ளவர்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள்.

    ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் "பதவி பூர்வ புண்ணியானாம்" என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்முடைய இந்த பிறவி பயன், பலன் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொறுத்தே உள்ளது என்பதுதான் அந்த வார்த்தையின் அர்த்தம்.

    ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த ஸ்தானத்தில் இருந்துதான் மற்ற அமைப்புகளை கணக்கிடுகிறோம். லக்னம் ஒன்றாம் இடம். இதற்கு அடுத்த வீடு தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம். இந்த வரிசையில் ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் ஆகும். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாமிடமும், ஆறாம் அதிபதியுமே கடன் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியவர்.

    பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்துவிடுகிறது. ஒரு சில மகா பாக்கியவான்களை தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது.

    இதில் சுபவிரயமும், அசுபவிரயமும் அடக்கம். மகன், மகள் கல்வி செலவு, பிள்ளைகள் திருமணம், வியாபாரம், தொழில், வழக்குகள், ஆடம்பர வாழ்க்கை, மருத்துவ செலவுகள் என பல விஷயங்கள் நம்மை கடனாளி ஆக்குகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள்.

    கடன் தீர பரிகாரம்; மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது. ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும், அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

    அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும்.

    தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும்.

    - ஜோதிடர் சுப்பிரமணியன்

    • எகிப்தை பிடித்த ஆங்கிலேயரால் பிரமிடுகளை எப்படி கட்டினார்கள் என புரிந்துகொள்ளவே முடியவில்லை.
    • முதன் முதலாக விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்கள் ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்கள் என எழுதினார்கள்.

    எகிப்தின் கீசா பிரமிடின் உயரம் 455 அடி. தஞ்சை பெரிய கோவிலை விட இரு மடங்கு உயரம். பெரியகோவிலுக்கு 3560 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டது. இன்று அதை கட்டி 4584 ஆண்டுகள் ஆகின்றன.

    கீஸா பிரமிடின் உச்சியில் 80 டன் எடையுள்ள கல்லை வைத்தார்கள். கிபி 1311ம் ஆண்டுவரை அதுதான் உலகின் மிக உயரமான கட்டிடம்.

    ஒப்பீட்டளவில் கிஸா பிரமிட் ஹரப்பா, மொகஞ்சதாரோ காலகட்டத்தை ஒட்டியது. கிளியோபாட்ரா ஆட்சி நடக்கையிலேயே கீஸா பிரமிட் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருந்தது.

    அன்றே பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களுல் ஒன்றாக அறிவிக்கப்பட்டு அவற்றை பார்க்க ஏராளமான கிரேக்க, ரோமானிய சுற்றுலா பயணிகள் வந்தார்கள்.

    பின்னாளில் 19ம் நூற்றாண்டில் எகிப்தை பிடித்த ஆங்கிலேயரால் பிரமிடுகளை எப்படி கட்டினார்கள் என புரிந்துகொள்ளவே முடியவில்லை.

    முதன் முதலாக விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்கள் ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்கள் என எழுதினார்கள்.

    சயன்ஸ் பிக்ஷன் நாவல்களில் பரபரப்பாக உலா வந்த இந்த கருத்தாக்கத்தை 1962ல் எரிக் வான் டானிக்கனின் "கடவுளின் தேர்கள்" (Charriots of Gods) எனும் நூலில் நிஜமாகவே இதை கட்டியது ஏலியன்கள் தான் என எழுதிவிட்டார். சயன்ஸ் சேனல், ஹிஸ்டரி சேனல் எல்லாம் அதை இன்றும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

    - நியாண்டர் செல்வன்

    • ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்னை வந்து பார்த்தீங்க இல்ல..?
    • எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போலவே அவரைப் போய் பார்த்தேன்.

    1969.. சென்னை பரணி ஸ்டுடியோவிலிருந்து, ஒரு தெலுங்கு பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு வெளியே வருகிறார் எஸ்.பி.பி. (அப்போது அவர் தமிழில் அறிமுகம் ஆகவில்லை). அதே நேரம் எதிரில் 'விறு விறு' என நடந்து வருகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.

    அவரை பார்த்தவுடன் சட்டென்று ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று வணங்கி வழிவிடுகிறார் எஸ்.பி.பி. வேகமாகப் போய்க் கொண்டிருந்த எம்.எஸ்.வி, ஒரு நொடி நின்று... திரும்பிப் பார்த்து,"நீ... பாலசுப்பிரமணியம் தானே..!"

    எஸ்.பி.பி. பதட்டத்துடன்,

    "ஆமா சார்..!"

    "ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்னை வந்து பார்த்தீங்க இல்ல..?"

    "ஆமா சார் !"

    "அப்புறம் ஏன் திரும்ப வரல?"

    "அப்போ என் தமிழ் உச்சரிப்பு சரியா இல்லைன்னு சொன்னீங்க. அதை சரி பண்ணிக்கிட்டு வந்து பார்க்கச் சொன்னீங்க..."

    "இப்போ உச்சரிப்பு சரியா இருக்கே... நாளைக்கு வந்து என்னை பாரு !"

    அதன் பின் நடந்தது பற்றி எஸ்.பி.பி :

    "எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போலவே அவரைப் போய் பார்த்தேன். 'ஹோட்டல் ரம்பா' என்ற ஒரு படத்திற்காக ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. சகுனம் சரியில்லை என்று சொல்லி விடுவாரோ என நினைத்து பயந்தேன். ஆனால் அடுத்து 'சாந்தி நிலையம்' என்ற படத்தில் 'இயற்கை என்னும் இளைய கன்னி' பாடலை பாடும் வாய்ப்பை கொடுத்து, என் வாழ்க்கைக்கு ஒரு அடையாளத்தை, அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் ஐயா எம்.எஸ்.வி அவர்கள். அதுமட்டுமல்ல. நல்ல பண்பையும் கூட நிறைய கற்றுக் கொடுத்தார்.

    நாங்க ரெண்டு பேரும் தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவர் 'பாலு'என்று உரிமையில் அழைப்பார். பலர் முன்னிலையில் 'பாலு அவர்களே' என்றுதான் கூப்பிடுவார். ஒரே ஒரு நாள் கூட அவர் இந்த பண்பு தவறியதில்லை."

    இதை நெகிழ்ச்சியோடு சொன்ன எஸ்.பி.பி., மகிழ்ச்சியோடு சொன்ன இன்னொரு விஷயம்...

    "என் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று சொன்ன அதே எம்.எஸ்.வி, அழகழகான தமிழ் உச்சரிப்பு உள்ள பாடல்களை எனக்கு கொடுத்து பாட வைத்தார். அதில் எனக்கு முழுமையான திருப்தி."

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    • பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தில் தான் தேடமுடியும்.
    • பூமியில் இருந்து எந்த ரேடியோ சிக்னலும் போயிருக்காது.

    நமக்குத் தெரிந்த பிரபஞ்சம் என்பது இதுவரை நம் டெலெஸ்கோப்களால் அறியமுடிந்த அளவே. பூமியில் உள்ள மணல் துகள்களை விட அதிக எண்ணிக்கையில் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உள்ளன என்றால் பார்த்துக்கலாம்.

    இத்தனை கோடானுகோடி நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றே ஒன்றில் கூடவா உயிர்கள் இல்லாமல் போகும்? நிச்சயமாக இருக்கும். ஆனால் நாம் அவர்களை கண்டறிவது சாத்தியமில்லை. ஏனெனில் நம் தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளரவில்லை.

    ஆனால் அவர்கள் ஏன் நம்மை கண்டறியவில்லை?

    இதற்கான விடையை பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தில் தான் தேடமுடியும்.

    அதாவது உலகின் உயிர்கள் தோன்றி சுமார் 4 கோடி ஆண்டுகள் ஆகியிருந்தாலும், 100 ஆண்டுகளுக்கு முன்புதான் ரேடியோவை கண்டுபிடித்தோம்.

    இந்த 4 கோடி ஆண்டுகளில் பூமியை நோக்கி எந்த ஏலியன் கிரகத்தின் ரேடியோ ரிசீவர்கள் குறிவைத்திருந்தாலும், பூமியில் இருந்து எந்த ரேடியோ சிக்னலும் போயிருக்காது.

    நம் ரேடியோ சிக்னல்கள், டிவி. சிக்னல்கள் எல்லாம் சென்ற தூரத்தை எல்லாம் கணக்கிட்டால்..

    நாம் அறிந்த பிரபஞ்சத்தின் அளவு ரஷ்யா என வைத்துக்கொண்டால், நம் ரேடியோ சிக்னல்கள் கவர் செய்த பகுதியின் பரப்பளவு ஒரு நெல்மணிக்கு சமமானதே.

    அதாவது ரஷியாவில் எங்கோ மூலையில் இருக்கும் ஒரு ஏலியன், ரஷியாவில் எங்கோ கிடக்கும் ஒரு நெல்மணியை கண்டுபிடிப்பதற்கு ஒப்பானது நம்மை ஏலியன்கள் கண்டுபிடிப்பது.

    அதனால் ஏலியன்கள் யாரும் நம்மை கண்டுபிடிக்கும் வாய்ப்பு எதுவும் தற்போதைக்கு சுத்தமாக இல்லை.

    இருங்க..ஏதோ தோட்டத்தில் ஒரு பறக்கும் தட்டு இறங்குவதுபோல இருக்கு.. என்னனு பார்த்துவிட்டு வருகிறேன்.

    - நியாண்டர் செல்வன்

    • முகப்பொலிவை ஏற்படுத்தி உடல் எடையை கூட்டும்.
    • தோல் சுருங்கி காணப்படும் கிழட்டுத்தனம் போன்றவற்றையும் சரி செய்யக்கூடியது அமுக்கிராங்கிழங்கு.

    அமுக்கரா என்று சொன்னதும் சிலர் கேலி, கிண்டல் செய்வார்கள். ஆனால், அதன் மகிமை தெரிந்தவர்கள் அப்படி கிண்டல் பேச மாட்டார்கள்.

    அமுக்கரா, அமுக்கராங்கிழங்கு, அமுக்கிரான்கிழங்கு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேத வைத்தியத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதை லேகியமாகவும் செய்து விற்கிறார்கள்.

    அமுக்கராங்கிழங்கில் உள்ள மருந்து சாரங்கள் ஆஸ்துமா மற்றும் மூட்டு வாத நோய்களுக்கு பயன்படக்கூடிய ஸ்டீராய்டுகளில் ஒன்றான கார்டிசோன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமுக்கிராங்கிழங்கை எந்த வடிவத்தில் சேர்த்தாலும் நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு இந்திரியத்தின் தரத்தையும், அளவையும் அதிகரிக்கச்செய்வதோடு முகப்பொலிவை ஏற்படுத்தி உடல் எடையை கூட்டும்.

    தாம்பத்ய உறவில் நாட்டமில்லாதவர்கள் அமுக்கிராங்கிழங்கு பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். போக சக்தியை அதிகரிக்கச்செய்து ஆண்மைக்குறைபாட்டை சரி செய்யக்கூடியது. நீர்த்துப்போன இந்திரியத்தை கட்டித்தன்மை பெறச்செய்யும்.

    காச நோய், மூட்டு - முடக்கு வாதம், குழி விழுந்த கன்னம் மற்றும் தோல் சுருங்கி காணப்படும் கிழட்டுத்தனம் போன்றவற்றையும் சரி செய்யக்கூடியது அமுக்கிராங்கிழங்கு.

    நாட்டு மருந்து கடைகளில் உலர்ந்த கிழங்காக கிடைக்கும் இந்த அமுக்கிராங்கிழங்கை வாங்கி வந்து பொடியாக்கி 250 கிராம் அளவு எடுத்து 75 மில்லி தேன், 75 மில்லி பசுநெய் விட்டு கலந்து சூடாக்கி லேகியம் போல் செய்து வைத்துக்கொள்ளலாம். இதில் ஒரு டீஸ்பூன் காலை, மாலை சாப்பிட்டு சூடான பால் குடித்து வந்தால் ஹார்மோன் வளர்ச்சி அதிகரிக்கும். பெண்களின் மார்பகம் செழித்து வளர உதவும். ஆண் - பெண், பெரியவர் - சிறியவர் என யார் சாப்பிட்டாலும் உடல் பலவீனம் போக்கி நரம்புத்தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சி பெறச்செய்யும்.

    -மரிய பெல்சின்

    • ஆவி பறக்கும் படையலுக்கு தீப ஆராதனை செய்து பக்தர்களுக்கும் படையல் தரிசனம் படைக்கிறார்கள்
    • சிலைமிளிரும் ஆவுடையார் கோயிலில் சிவனுக்கான உற்சவமூர்த்தி இல்லை.

    பாரதத்தில் உள்ள பல்லாயிரம் கோயில்களும், மன்னர்களாலும் வள்ளல்களாலும் நிர்மாணிக்கப்பட்டவை!

    ஆவுடையார் கோயிலைக் கட்டியவர், அருள்ஞானக் கவிக்கதிர் மணிவாசகத் திருமகனார்!

    தமிழ் இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் அநாதிமூர்த்தித் தலம், ஆதி கயிலாயம், உபதேசத் தலம், குருந்தவனம், ஞானபுரம், திருப்பெருந்துறை என பலபல பெயர்கள் இந்த ஊருக்குச் சூட்டப் பட்டுள்ளன!

    மக்களோ ஆவுடையார் கோயிலென கோயிலின் பெயரையே ஊருக்கும் நிரந்தரமாக்கி விட்டார்கள்!

    மற்ற கோயில்களில் சாமிக்குப் படைக்கும் உணவை, பக்தர்கள் பார்த்துவிடாமல், மூடிய பாத்திரத்தில் கொண்டுசென்று ரகசியமாக காட்டுவார்கள்!

    ஆவுடையார் கோயிலில் குடிகொண்ட ஆத்மநாத சாமிக்கு நமது வீடுகளில் அமரர்க்குப் படைப்பதைப் போலவே செய்கிறார்கள்!

    கருவறைக்கும் பக்தர்கள் எல்லைக்கும் நடுவில் வெளியரங்கமாக ஒரு படையல் மேடை, எல்லாரும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது!

    ஆவி பறக்கப் பறக்கப் புழுங்கல் அரிசிச் சோற்றை கொண்டுவந்து இந்தப் படையல் மேடையில் குன்றுபோலக் கொட்டுகிறார்கள்! அப்பம், அதிரசம், தேன்குழல் பலகாரங்களை சூழ வைக்கிறார்கள். ஆவி பறக்கும் படையலுக்கு தீப ஆராதனை செய்து பக்தர்களுக்கும் படையல் தரிசனம் படைக்கிறார்கள்!

    சிவாலயம் எனில் கொடிமரம் இருக்கும், நந்தி இருக்கும், பலிபீடம் இருக்கும், கருவறையில் சிவலிங்கம் இருக்கும், உற்சவமூர்த்தியும் இருக்கும்!

    மாணிக்க வாசகப் பெருமகனார், கலை இழைத்துக் கட்டிய சிலைமிளிரும் ஆவுடையார் கோயிலில் சிவனுக்கான உற்சவமூர்த்தி இல்லை, கருவறையில் லிங்கம் இல்லை, பலிபீடம் இல்லை, கொடிமரமும் இல்லை!

    பிறவா யாக்கைப் பெரியோன் உருவமற்றவன் என்ற கொள்கையின் வெளிப்பாடாய் அமைக்கப்பட்ட கருவறையில் சிறிய ஆவுடைப் பீடம், அதன் மேல் அழகிய குவளையைச் சாற்றி அலங்காரம் செய்து காட்சிப் படுத்தி தீபம் காட்டுகிறார்கள்!

    ஆமாம் அய்யன் ஆத்மநாதரையும் அம்மன் யோகாம்பிகையையும் சிந்தனை உளியில் நாம்தான் செதுக்கி வணங்க வேண்டும்!

    வருடத்திற்கு இருமுறை நடக்கும் திருவிழாக்களில், நான்கு தேவபாட்டைகளிலும் பவனிவரும் உற்சவ மூர்த்தி யார்?

    அது மாணிக்கவாசகரின் மூர்த்தி! இது சிவ மகா கவிக்குக் கிடைக்கின்ற செம்மைச் சிறப்பு! கோயிலுக்குள்ளும் மணிவாசகரை வணங்கிய பிறகு தான் ஆத்மநாதர் எனும் அரூபத்தை வணங்கவேண்டும்!

    -ஆறாவயல் பெரியய்யா

    ×