என் மலர்
கதம்பம்

அப்புறம் ஏன் திரும்ப வரல..?
- ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்னை வந்து பார்த்தீங்க இல்ல..?
- எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போலவே அவரைப் போய் பார்த்தேன்.
1969.. சென்னை பரணி ஸ்டுடியோவிலிருந்து, ஒரு தெலுங்கு பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு வெளியே வருகிறார் எஸ்.பி.பி. (அப்போது அவர் தமிழில் அறிமுகம் ஆகவில்லை). அதே நேரம் எதிரில் 'விறு விறு' என நடந்து வருகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.
அவரை பார்த்தவுடன் சட்டென்று ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று வணங்கி வழிவிடுகிறார் எஸ்.பி.பி. வேகமாகப் போய்க் கொண்டிருந்த எம்.எஸ்.வி, ஒரு நொடி நின்று... திரும்பிப் பார்த்து,"நீ... பாலசுப்பிரமணியம் தானே..!"
எஸ்.பி.பி. பதட்டத்துடன்,
"ஆமா சார்..!"
"ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்னை வந்து பார்த்தீங்க இல்ல..?"
"ஆமா சார் !"
"அப்புறம் ஏன் திரும்ப வரல?"
"அப்போ என் தமிழ் உச்சரிப்பு சரியா இல்லைன்னு சொன்னீங்க. அதை சரி பண்ணிக்கிட்டு வந்து பார்க்கச் சொன்னீங்க..."
"இப்போ உச்சரிப்பு சரியா இருக்கே... நாளைக்கு வந்து என்னை பாரு !"
அதன் பின் நடந்தது பற்றி எஸ்.பி.பி :
"எம்.எஸ்.வி அவர்கள் சொன்னது போலவே அவரைப் போய் பார்த்தேன். 'ஹோட்டல் ரம்பா' என்ற ஒரு படத்திற்காக ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. சகுனம் சரியில்லை என்று சொல்லி விடுவாரோ என நினைத்து பயந்தேன். ஆனால் அடுத்து 'சாந்தி நிலையம்' என்ற படத்தில் 'இயற்கை என்னும் இளைய கன்னி' பாடலை பாடும் வாய்ப்பை கொடுத்து, என் வாழ்க்கைக்கு ஒரு அடையாளத்தை, அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் ஐயா எம்.எஸ்.வி அவர்கள். அதுமட்டுமல்ல. நல்ல பண்பையும் கூட நிறைய கற்றுக் கொடுத்தார்.
நாங்க ரெண்டு பேரும் தனிமையில் இருக்கும்போது மட்டும்தான் அவர் 'பாலு'என்று உரிமையில் அழைப்பார். பலர் முன்னிலையில் 'பாலு அவர்களே' என்றுதான் கூப்பிடுவார். ஒரே ஒரு நாள் கூட அவர் இந்த பண்பு தவறியதில்லை."
இதை நெகிழ்ச்சியோடு சொன்ன எஸ்.பி.பி., மகிழ்ச்சியோடு சொன்ன இன்னொரு விஷயம்...
"என் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று சொன்ன அதே எம்.எஸ்.வி, அழகழகான தமிழ் உச்சரிப்பு உள்ள பாடல்களை எனக்கு கொடுத்து பாட வைத்தார். அதில் எனக்கு முழுமையான திருப்தி."
-ஜான்துரை ஆசிர் செல்லையா






