என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவ்வையார் அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பெண்கள்.
    X
    அவ்வையார் அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பெண்கள்.

    இன்று ஆடி கடைசி செவ்வாய்: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது

    ஆடிப்பூர விழாவான நாளை பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர். கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்படும்.
    ஆடி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் திருமணங்கள் கைகூடும், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

    இதனால் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    தாழக்குடிஅருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனை தரிசிக்க பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவில் முன்புள்ள தென்னந்தோப்புகளில் பெண்கள் கொழுக்கட்டை அவித்து வழிபட்டனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அவ்வையார் அம்மனை தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டனர்.

    அம்மன் பிறந்த ஆடி பூர விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆடிப்பூர விழா நாளை (11-ந்தேதி) வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளது.

    ஆடிப்பூர விழாவான நாளையும் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர். கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்படும். பக்தர்கள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். நாளை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாததால் ஆடி செவ்வாய்க்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் பொங்கல் வழிபாடு, கூழ் படைத்து வழிபாடு வெகுவிமரிசையாக நடந்தது. கோவில்களில் கூட்டமும் இன்று அதிகமாக காணப்பட்டது.
    Next Story
    ×