என் மலர்
உலகம்

இந்திய தேர்தல் அமைப்பில் தவறு இருக்கிறது - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
- தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது
- நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர்.
மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது.
ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.
நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.






