என் மலர்
உலகம்

சட்டென வீடு திரும்பிய மனைவி... தப்பிக்க 10-வது மாடி பால்கனியில் இருந்து தொங்கிய கள்ளக்காதலி
- ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை.
- குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தை சேர்ந்த திருமணமான ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் பலமுறை நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று காதலன் வீட்டுக்கே சென்று அந்த இளம்பெண் ஜாலியாக இருந்துள்ளார். இந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்துள்ளது. காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துள்ளார்.
இதனால் பதறிப்போன கணவர், தனது காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனால் காதலி பதற்றம் அடைந்தார். காதலனின் மனைவி பால்கனிக்கு வந்து விட்டால் நாம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், காதலி பால்கனியின் மேல் பகுதியில் இருந்து, கீழே உள்ள வீட்டின் பால்கனி நோக்கி இறங்க ஆரம்பித்தார்.
அங்குள்ள 10-வது மாடியில் இருந்து குழாய் பைப்பை பிடித்து இறங்கினார். இதை அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் கீழே இருக்கும் வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்டுள்ளார். உடனே அந்த வீட்டில் இருந்தவர், வீட்டுக்குள் பாதுகாப்பாக இழுத்து, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டார். இதனை அங்குள்ள குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த ஒரு பயனர், இந்த பெண் ஸ்பைடர்மேன் குரூப்பில் சேர்ந்து கொள்ளலாம் போலயே? என்று கிண்டலாக பதிவிட்டார்.
மற்றொருவர், இதில் திருப்பம் என்னவென்றால் இந்த பெண்ணை காப்பாற்றிய நபரே அந்த கணவரின் மனைவியிடம் அவள் இங்கேதான் இருக்கார் என்று சொல்லி இருப்பார் போல என பதிவிட்டுள்ளார்.
சில நெட்டிசன்கள், ஒரு ஆணுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பது சரியல்ல. ஒருத்தனுக்காக உயிரையே ஆபத்தில் விட வேண்டிய அவசியமில்லை. இப்படி ஆபத்தில் விட்டுவிட்டு, தன் மனைவிக்காக வாழ்பவனை நீ உதறி தள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.






