என் மலர்tooltip icon

    உலகம்

    மாணவர் அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை- வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை
    X

    மாணவர் அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை- வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை

    • மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி.
    • தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர்.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை ஒடுக்க நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயங்கர வன்முறை வெடித்தது.

    இதையடுத்து ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவராக இருந்தவர் மாணவர்கள் இயக்கமான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி(வயது 32).

    வங்காளதேசத்தில் வருகிற பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு அதில் போட்டியிட முடிவு செய்த ஷெரீப் உஸ்மான் ஹாடி தனது பிரசாரத்தை கடந்த 12-ந்தேதி மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் தொடங்கினார்.

    அப்போது அவர் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்து ஷெரீப் உஸ்மான் ஹாடி படுகாயம் அடைந்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஷெரீப் உஸ்மானின் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவரை மேல்-சிகிச்சைக்காக விமான ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு இடைக்கால அரசாங்கம் அனுப்பியது.

    சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் ஷெரீப் உஸ்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், அவர் இறந்த செய்தியை அறிந்ததும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    நேற்று இரவு தலைநகர் டாக்காவில் உள்ள சாலைகளில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ஷெரீப் உஸ்மான் கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள ஷாபாக் சந்திப்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.

    ஷெரீப் உஸ்மானை கொன்றவர்களை கைது செய்யத் தவறியதற்காக உள்துறை ஆலோசகரின் உருவ பொம்மையை எரித்தனர்.

    நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் குவிந்ததால் போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. மேலும் நாட்டின் மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியது.

    தலைநகர் டாக்காவில் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதோம் அலோ ஆகிய 2 செய்தி அலுவலகங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் அந்த அலுவலக கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதில் அக்கட்டிடங்களுக்குள் ஊழியர்கள் சிக்கி கொண்டனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டுத் தீயை அணைத்தனர்.

    டாக்கா முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம்-வன்முறையை கட்டுபடுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.

    அவர்களை பல இடங்களில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனாலும் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை.

    ராஜ்ஷாஹியில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லத்திற்கும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதடைந்தன.

    மேலும் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனா வீட்டுக் கும் தீ வைக்கப்பட்டது. சிட்டகாங்கில் ஒரு முன்னாள் அமைச்சரின் இல்லத்தையும் தாக்கினர். டாக்கா-மைமன்சிங்கை இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் போராட்டகாரர்கள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். ராஜ ஷாஹி நகரில், போராட்டக்காரர்கள் இந்தியத் தூதரக அலுவலகத்தை நோக்கிச் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்தியத் துணைத்தூதரக அலுவலகம் அருகே கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன. சிட்டகாங்கில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. அப்போது இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    நேற்று முன்தினம் டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தது. அப்போது ஷெரீப் உஸ்மான் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்களை திருப்பி அனுப்பும் வரை இந்திய தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே ஷெரீப் உஸ்மான் இறந்ததால் இந்திய தூதரகத்தை போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    தலைநகர் டாக்கா, சிட்ட காங் மற்றும் பிற நகரங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இன்று காலை வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஆனால் ஷெரீப் உஸ்மான் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட் டம் தொடரும் என்று மாணவர் இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்காளதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

    Next Story
    ×