என் மலர்
உலகம்

மெக்சிகோ: கீழே விழுந்து நொறுங்கிய விமானம்- 7 பேர் பலி
- விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார்.
- விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் சாலை விபத்துகள் மறுபுறம், ரெயில் விபத்துக்கள் மற்றும் விமான விபத்துகளும் நடக்கின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது மெக்சிகோவில் நிகழ்ந்த தனியார் விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரண்டு ஊழியர்கள் மற்றும் எட்டு பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி உடனடியாக அருகே இருந்த கால்பந்து மைதானத்தில் தரை இறக்க முயற்சித்தார். ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தானது டோலுகா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், மெக்சிகோ நகரத்தில் இருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சான் மேடியோ அட்டென்கோவில் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏழு உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக மெக்சிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாக மேயர் அனா முனிஸ் தெரிவித்தார். விபத்துக்கான காரணங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






