search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    மறைக்க ஒன்றுமில்லை.. டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் கைதுக்கு வலுக்கும் கண்டனம் - 20 ஆண்டுகள் சிறையா?
    X

    மறைக்க ஒன்றுமில்லை.. டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் கைதுக்கு வலுக்கும் கண்டனம் - 20 ஆண்டுகள் சிறையா?

    • டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
    • கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    துபாயை தலைமையிடமாக கொண்டு உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து டெலிகிராம் நிறுவனம் கண்டன அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், 'ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் வகுத்த விதிகளின்படியே டெலிகிராம் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் சிஇஓ பாவெல் துரோவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அவர் அடிக்கடி ஐரோப்பா சென்று வருபவர், தளத்தைத் தனி நபர்கள் தவறாக பயனப்டுத்துவற்காக அந்த தளத்தையோ நிறுவனத்தின் தலைவரையோ குற்றம் கூறுவது என்பது அபத்தமானதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட பாவெல் துரோவை அடுத்த 96 மணி நேரத்துக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாவெல் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே பாவெல் துரோவின் கைதை கண்டித்து உலகம் முழுவதிலும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×