என் மலர்
உலகம்

போர்ச்சூழல் - உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடை!
- நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
- மறுஅறிவிப்பு வரும்வரை தடை அமலில் இருக்கும்.
அனைத்துவகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடைவிதித்துள்ளதாக ஈரானிய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் போர் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்ய ஈரான் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்தத் தடை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்க அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைக்கான காலக்கெடு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக, உருளைக்கிழங்கு, அதைத் தொடர்ந்து தக்காளி, பேரீச்சம்பழம் மற்றும் முட்டை போன்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 17 அன்று நடைபெற்ற அமெரிக்கா, ஈரான் இடையிலான இரண்டாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தனது ராணுவ இருப்பை அதிகரித்தது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் 150 க்கும் மேற்பட்ட விமானங்களை நிறுத்தியது.
இதனைத்தொடர்ந்து பிப்.26அன்று மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், இஸ்ரேல் ஈரான்மீது தாக்குதலை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், அமெரிக்கா இரண்டும் கூட்டுத் தாக்குதலை தொடர்ந்தன. இதில் ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஈரான் இஸ்ரேல்மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள்மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஏற்றுமதி தடையை ஈரான் விதித்துள்ளது.






