என் மலர்
உலகம்

"உதவி வந்துக்கொண்டிருக்கிறது.. நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்" - ஈரானியர்களை ஏற்றிவிடும் ட்ரம்ப்!
- போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஈரானியப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு தரப்பில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 135 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்காத 9 குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஈரான் அரசு கடந்த பல நாட்களாக இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபடுவோர் 'கடவுளின் எதிரிகள்' எனக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம் என ஈரானிய அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.
இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். மேலும், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க ராணுவத் தலையீடு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்,
ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்! கொலைகாரர்கள் மற்றும் சித்திரவதை செய்பவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள்.
போராட்டக்காரர்களின் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.






