என் மலர்
உலகம்

சம்பவத்தின் சிசிடிவி காட்சி
மின்சார அதிர்ச்சி.. மலக்குடலில்.. பாலஸ்தீன கைதி சித்ரவதை - வீடியோ ஆதாரம் இருந்தும் 5 இஸ்ரேல் வீரர்கள் விடுவிப்பு
- மலக்குடலில் கூர்மையான ஆயுதத்தால் குத்துவதும் பதிவாகி இருந்தது.
- வீடியோ கசிந்ததற்கு பொறுப்பேற்று, ராணுவ அட்வகேட் ஜெனரல் யிகாட் டோமர் ராஜினாமா செய்தார்.
அக்டோபர் 7, 2024 இல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன நகரங்களான காசா, ராபா உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த 3 வருடங்களாக தாக்குதல் நடத்தி வந்தது. இதில் 70,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2025 அக்டோபரில் அமெரிக்கா மத்தியஸ்தத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே போரின்போது கைது செய்யப்பட்ட பாலஸ்தீனிய கைதியை 5 இஸ்ரேல் வீரர்கள் கொடூரமாக சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
2023 இல் போர் தொடங்கியதும் காசாவின் எல்லையில் இஸ்ரேல் பகுதியில் Sde Teiman ராணுவ முகாம் சிறை அமைக்கப்பட்டது.
இந்த சிறையில் பாலஸ்தீனிய கைதிகள் வைக்கப்பட்டிருந்தபோது மார்ச் 2024 இல் அன்று இந்த அத்துமீறல் நிகழ்ந்துள்ளது. மேலும் அந்த ராணுவ மையத்தில் பாலஸ்தீனிய கைதிகள் பரவலாக சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கசிந்த ஒரு வீடியோவில், ராணுவ வீரர்கள் ஒரு கைதியைத் தரையில் இழுத்துச் செல்வதும், மின்சாரக் கருவியால் தாக்குவதும், அவரது மலக்குடலில் கூர்மையான ஆயுதத்தால் குத்துவதும் பதிவாகி இருந்தது.
பாதிக்கப்பட்ட கைதிக்கு விலா எலும்பு முறிவு, அடிவயிற்றில் பலத்த காயம் மற்றும் மலக்குடலில் ஏற்பட்ட துளை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பின்னர் அவர் காசாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். தொடர்புடைய 5 ராணுவ வீரர்கள் அதே ஆண்டு கைதாகினர்.
இந்த வீடியோ கசிந்ததற்கு பொறுப்பேற்று, ராணுவ அட்வகேட் ஜெனரல் யிகாட் டோமர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஐந்து ராணுவ வீரர்கள் மீதான வழக்கை இஸ்ரேல் ராணுவ நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்து அவர்களை விடுத்துள்ளது.
மார்ச் 12, 2024 அன்று நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வீடியோவில் உள்ள காட்சிகள் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான வன்முறையைக் கொண்டிருக்கவில்லை, பாதிக்கப்பட்ட நபர் காசாவிற்கு விடுவிக்கப்பட்டதால், அவரிடம் நேரடி சாட்சியம் பெற முடியவில்லை, இந்த வீடியோ ஊடகங்களுக்குச் சட்டவிரோதமாக கசிந்தது வழக்கின் நம்பகத்தன்மையை குறைத்துள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
"இஸ்ரேல் அரசு தனது எதிரிகளைத் தான் துரத்த வேண்டும், அதன் வீரர்களை அல்ல" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த முடிவைப் பாராட்டியுள்ளார்.
"இஸ்ரேலிய ராணுவம் தனது வீரர்களுக்குப் பாலியல் வன்கொடுமை செய்ய அதிகாரபூர்வமான உரிமம் வழங்கியுள்ளது" என்று மனித உரிமை ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.
காசா போரின் போது பாலஸ்தீனியக் கைதிகள் மீது நடத்தப்படும் இத்தகைய அத்துமீறல்கள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.






