என் மலர்
உலகம்

பாராளுமன்ற தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு சீன வெளியுறவுத்துறை வாழ்த்து
- பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
- வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பீஜிங்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன.
பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக பெற்றுள்ளது. ஆனாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.
பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில் வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:
இந்தியாவின் பொதுத்தேர்தல் முடிவுகளை நாங்கள் கவனித்திருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது. இருதரப்பு உறவுகளை நிலையான பாதையில் முன்னேற்றி கொண்டு செல்வதற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.






